நேற்று நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே அவரைக் காண ஒருவர் வந்திருந்தார். மூவரும் நண்பரின் அறையில் அமர்ந்திருந்தோம். எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். ஒவ்வொரு மனிதரையும். ஒவ்வொரு மனிதருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருப்பதனால் ஒவ்வொருவரையும் ஒரு கதைசொல்லியாகவே பார்ப்பேன். சுவாரசியமான கதையைக் கூறுபவர்கள் உண்டு. சாதாரண கதையைக் கூறுபவர்களும் உண்டு. கதையைக் கேட்க தயாராக இருக்க வேண்டும். அவ்வளவே.
நண்பர் வீட்டுக்கு வந்த வந்திருந்த உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தினார். முதலில் அவருடைய ஊரின் பெயரைச் சொன்னார். அந்த ஊர் தமிழகத்தின் சமூக வரலாறு தெரிந்தவர்களுக்குப் பரிச்சயமானது. வங்கியைக் கொள்ளையடித்த பயங்கரவாதி ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொள்ளப்பட்ட ஊர் அது. பின்னர் அவருடைய பெயரைக் கூறினார். விருந்தினர் சாமானிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 40 ஆண்டுகளுக்கு முன்னால், அப்பகுதியில் வளர்ந்து கொண்டிருந்த பிராந்தியக் கட்சி ஒன்றில் உறுப்பினராக இருந்திருக்கிறார். தலைமை மீது தீராத விசுவாசம். திரளானவர்கள் கூட்டமாகக் கூடி கூட்டாக ஏதேனும் செய்வதில் ஆர்வமுள்ள சாமானியர். அவர் சார்ந்திருந்த பிராந்தியக் கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதனால் சிலர் சேர்ந்து ஒரு அரசுப் பேருந்தை எரித்திருக்கிறார்கள். அச்செயலுக்கு விருந்தினர்தான் தலைமை. பேருந்தை எரித்து விட்டு முந்திரிக்காட்டிற்குச் சென்று நாள்கணக்கில் தலைமறைவாகி விட்டார்கள். போலிஸ் அவருடைய வீட்டை சல்லடையாய் சலித்து நாசமாக்கியது. அவருடைய தந்தை மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. அவருடைய தந்தை எந்த விபரமும் அறியாதவர். பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாகிறது அவருடைய குடும்பம். பல நாட்கள் முந்திரிக்காட்டிலிருந்து வெளிவராமல் இருந்திருக்கிறார் விருந்தினர்.
உங்கள் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லையா என்று கேட்டேன். போலிஸ் தேடிவந்த போது தான் இல்லை என்பதால் தனது தந்தையின் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவானது என்றார் விருந்தினர். போலிஸ் பேருந்தை எரித்த குற்றச் செயலுக்கான முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரையும் சேர்த்திருந்தால் அவரது வாழ்க்கை வேறுவிதமாக ஆகியிருக்கும். பல நாட்களுக்குப் பின் முந்திரிக்காட்டில் இருந்து ஊர் திரும்பியிருக்கிறார். அப்பாவியான அவரது தந்தையும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதற்கு மனித உரிமை கமிஷனில் முறையீடு செய்யப்பட்டு அவர்கள் அடைந்த பாதிப்பின் ஒரு பகுதி இழப்பீடாக அளிக்கப்பட்டிருக்கிறது. கதை இந்த இடத்தில் ஒரு திருப்பத்தை அடைந்தது.
அதாவது, விருந்தினர் சில மாதங்களுக்குப் பிறகு அரசாங்கத்தில் தனது பட்டப்படிப்பைப் பதிவு செய்திருந்த விதத்தில் ஆசிரியராகப் பணியில் சேர அரசாங்க உத்தரவைப் பெறுகிறார். ஆசிரியராக பணியில் சேர்கிறார்.
‘’உங்கள் தந்தையின் பெயரைச் சேர்க்காமல் உங்கள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திருந்தால் உங்களுக்கு அரசாங்கப் பணி கிடைத்திருக்காது இல்லையா ?’’ என்று கேட்டேன். அவர் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. எனினும் இந்தக் கேள்வி அவரிடம் முதல் முறையாகக் கேட்கப்படுகிறது. அவர் அந்த கோணத்தில் சிந்தித்திருக்கவில்லை. அவ்விதம் நிகழ்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என அப்போது தான் யோசிக்கிறார். இந்த விஷயத்தைக் கூட இப்போதுதான் யோசிக்கிறாரே என எண்ணினேன். இப்போதாவது யோசித்துப் பார்க்க அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே என சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.
ஒரு தேசியக் கட்சி தனது தொண்டர்களை பொதுச் சொத்தை நாசமாக்க அனுமதிக்குமா என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்டேன். இந்தியா போன்ற பரந்த நாட்டில் இரு கட்சித் தொண்டர்கள் மோதிக் கொள்வதுண்டு. பல்வேறு காரணங்களால் கலவரங்கள் நடந்ததுண்டு ; நடப்பதுண்டு. இந்தியாவை ஆண்ட தேசியக் கட்சிகள் எவையும் தன் தொண்டர்களை பொதுச் சொத்துக்களை நாசம் செய்ய ஏவியதில்லை. தேசியக் கட்சிகள் ஏன் இந்தியாவை ஆள்கின்றன ; பிராந்தியக் கட்சிகள் ஏன் தேசியக் கட்சிகளுடன் ஏதாவது ஒரு விதத்தில் இணைந்து கொண்டு அதிகாரம் பெற நினைக்கின்றன என்னும் கதையை - பல்வேறு கதைகளை விருந்தினர் சொன்ன கதையிலிருந்து நான் மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன்.