ஊரில் ஒரு வீட்டின் பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். எனது முக்கிய பணி கட்டுமானம். ஒரு காலிமனையில் அஸ்திவாரம் தோண்டி அஸ்திவாரமிட்டு அதன் மேல் கட்டிடத்தை எழுப்பி நிறைவு செய்து வர்ணம் பூசி ஒப்படைப்பது என்னும் முழுமையான பணியை மேற்கொள்வதே கட்டுமானம். பராமரிப்புப் பணி என்பது கட்டி முடித்து 10 வருடம் , 20 வருடம் அதற்கு மேல் ஆன கட்டிடங்களில் ஏதேனும் பணியைப் பார்ப்பது. அவ்விதமான பணியை நான் விரும்புவதில்லை. கட்டுமானத்தை முக்கிய தொழிலாக வைத்திருப்பவர்கள் பராமரிப்பை மேற்கொள்ள மாட்டார்கள். அரசாங்க இலாகாக்களில் கூட இவை இரண்டும் தனித்தனியாகவே இருக்கும். இருப்பினும் தவிர்க்க இயலாமல் சில பணிகளை மேற்கொண்டிடுவது உண்டு.
ஊரில் இருக்கும் வீடுகளிலேயே மிகத் தொன்மையான வீடாக இப்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வீடு இருக்கக்கூடும். அதன் உரிமையாளர் அந்த வீட்டின் அகவை 125 இருக்கும் என்று சொல்கிறார். நான் 100 வருடம் ஆன வீடு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கள் பணியாக அந்த வீட்டில் ஒரு பெரிய சுவர் எழுப்பினோம். குளியல் அறையும் ஒப்பனை அறையும் அமைத்தோம். காரை உதிர்ந்திருந்த பகுதிகளை சிமெண்ட்டால் பூசினோம். வீட்டுக்கு வெள்ளையடிக்க வேண்டும். நாங்கள் பணி புரிந்து கொண்டிருந்த போது இன்னொரு பிரிவினர் வீட்டுக்கு ஓடு மாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டு உரிமையாளரிடம் ஓடு மாற்றுதல் குறித்து ஒரு சம்பவத்தை அல்லது கதையை சொன்னேன். எனக்கு சம்பவங்களை கதையாகக் காணும் வழக்கம் உண்டு. அல்லது சம்பவங்களைக் கதையாக காணும் இயல்பு உண்டு எனக் கொள்ளலாம். அந்த கதை என்னவெனில், சி. என். அண்ணாத்துரை கட்சி தொடங்கிய போது ‘’அடைந்தால் திராவிட நாடு ; இல்லையேல் சுடுகாடு’’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவரது கட்சி ஒவ்வொரு மேடையிலும் இந்த முழக்கத்தைக் கூறியது. அதாவது , தற்போதைய கேரள மாநிலம், கர்நாடகா மாநிலம், ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்கள், கோவா ஆகியவற்றுடன் தமிழகமும் இணைந்த பகுதியை இந்தியாவிலிருந்து துண்டாடி தனிநாடாக ஆக்குவோம் என்பது அவர்களின் முழக்கம். அன்றும் சரி, இன்றும் சரி சி.என். அண்ணாத்துரையின் கட்சிக்கு கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கட்சி அமைப்பும் கிடையாது ; தொண்டர்களும் கிடையாது. தனிநாடு கோரிக்கையை இந்திய நாட்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒரு பதிவு பெற்ற அரசியல் கட்சியாய் இருந்தும் தொடர்ந்து முன்வைத்ததால் சி.என். அண்ணாத்துரையின் கட்சியை தடை செய்யலாமா என தீவிரமாக யோசித்தது மத்தியில் ஆட்சியிலிருந்த நேருவின் காங்கிரஸின் அரசு. தனது கட்சி தடை செய்யப்பட்டு விடுமோ என்ற தயக்கம் சி.என். அண்ணாத்துரைக்கு இருந்தது. அந்த நேரத்தில் சீனா இந்தியா மீது படையெடுத்தது. கம்யூனிசம் மேல் நம்பிக்கை கொண்டிருந்த நேரு, சீனாவால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற எச்சரிக்கை உணர்வைக் கொண்டிருக்கவில்லை. அவர் கம்யூனிசத்தின் மீது அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் உலகம் முழுக்கவே அப்படி ஒரு நம்பிக்கை பரவலாக இருந்தது. சீனா நம் எல்லையின் கணிசமான பகுதியை ஆக்கிரமித்தது. சீனா படையெடுத்த சமயத்தில் சி.என். அண்ணாத்துரை தனிநாடு கோரிக்கையை அதாவது திராவிட நாடு கோரிக்கையைத் தனது கட்சி கைவிடுவதாக அறிவித்தார். இத்தனை ஆண்டுகள் கூறிவந்த கோரிக்கையை ஏன் கைவிட்டீர்கள் என அவரிடம் கேட்ட போது ‘’வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும்’’ என்றார்.
இந்திய அரசியலில் இதே காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு துன்பியல் சம்பவம் உண்டு. அது என்னவெனில், சீனா நம் நாட்டை ஆக்கிரமித்த போது நம் நாட்டின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சீனாவின் ஆக்கிரமிப்பு செயலை ஆதரித்தது. சீனா ஒரு கன்யூனிச நாடு என்பதனால். இந்த மார்க்ஸிஸ்டுகளின் தொழிற்சங்கமே நாடு முழுவதும் அரசாங்க ஊழியர் அமைப்புகளை தன் கையில் வைத்திருந்தது. அரசு ஊழியர் ஊதியத்தில் ஒரு சதவீதம் அளவு அவர்கள் தொழிற்சங்கத்துக்காக மாத சந்தா என வசூல் செய்வார்கள். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது அந்த தொகை ஒரு பெருந்தொகை. அந்த தொகையைக் கொண்டு இயங்கிய கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் இருந்து கொண்டு சீன ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக இருந்த கட்சி. இன்று வரை சீனா இந்தியாவின் மீது படையெடுத்ததை ஆதரிக்கும் கட்சி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி. அப்போது அவர்கள் ஆதரவளித்த போது அது ஒரு துன்பியல் நிகழ்வு. இப்போதும் அவர்கள் அளிக்கும் ஆதரவு துன்பியலாக அல்ல ; மாறாக நகைச்சுவையாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்தியாவைத் துண்டாட சீனாவால் நிதியளித்து ஆயுதம் அளித்து வளர்க்கப்பட்ட அமைப்பு மாவோயிஸ்டுகள். நக்சலைட்டுகள் என அறியப்படும் இவர்கள் சீனாவின் ஏஜெண்ட்கள். சீனாவின் நலன்களை இந்தியாவில் இருந்து உருவாக்குவதற்கு சீனாவிடம் ஊதியம் பெறுபவர்கள். யோசித்துப் பார்த்தால், இந்திய அரசாங்கம் இந்த அமைப்பையும் சற்று மென்மையாகவே அணுகியது என்பதைக் காணலாம். நுணுக்கமாகக் காணின், சீனாவின் சதி வலைக்கு இரையான ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை இந்திய அரசு கரிசனத்துடன் பார்த்திருக்கிறது என்பதை உணர முடியும்.
1991-1996 ஆண்டில் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் நாட்டின் பொருளியல் பாதையை மாற்றியமைத்தார். நேருவின் சோஷலிசத்தை சுமந்து கொண்டிருந்த காங்கிரஸை தாராளமயமாக்கல் பக்கம் திருப்பியவர் நரசிம்ம ராவ். அவருக்குத் துணை நின்றவர் மன்மோகன் சிங். 1998-2004ம் ஆண்டில் 1000 குடிமக்கள் வாழும் ஒவ்வொரு ஊரும் சாலையால் இணைக்கப்பட வேண்டும் என்ற ‘’கிராமச் சாலைகள் திட்டத்தை’’க் கொண்டு வந்தவர் வாஜ்பாய். நாட்டின் நான்கு மாநகரங்களும் நான்கு வழிச் சாலைகளால் இணைக்கப்பட வேண்டும் என தங்க நாற்கரத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் வாஜ்பாய்.
உலகின் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. கோடானுகோடி சாமானியர்கள் வாழும் நாடு. இவர்கள் அனைவருக்குமே விபரங்களும் நுண் விபரங்களும் தெரியுமா? இவர்களுக்காக சிந்தித்தவர்கள் யார் உழைத்தவர்கள் யார் என்பதை அம்மக்கள் அறிவார்களா? நரசிம்ம ராவும் வாஜ்பாயும் அதனை எண்ணியிருக்க மாட்டார்கள். இந்த மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்தார்கள். சீனா தனது சொந்த மக்களைச் சுரண்டுகிறது. சீனாவில் நிலவுவது ஒரு அடிமை முறை. உலகில் இத்தனை அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் சீனாவின் அளவு வேறு எங்கும் இல்லை. நரசிம்ம ராவுக்கும் வாஜ்பாய்க்கும் இந்த உண்மை மிக நன்றாகத் தெரிந்திருக்கும்.
இப்போது பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருக்கும் வீட்டின் கூடத்தில் ஒரு சிறு ஷெல்ஃபில் ஒரு புகைப்படம் இருந்தது. உடல் மெலிந்த ஒருவர் புலித்தோலில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். வீட்டு உரிமையாளரிடம் அவர் யார் என்று கேட்டேன். அவர் ஒரு சித்தர் என்று கூறினார். அதாவது, தற்போதைய வீட்டு உரிமையாளரின் பாட்டனார் சென்னை எழும்பூர் சென்றிருக்கிறார். அங்கே ரயில் நிலையத்தில் அந்த சித்தர் அமர்ந்திருக்கிறார். அவர் முகத்தில் இருந்த அமைதியைக் கண்டு அவரை வணங்கியிருக்கிறார். அவருடன் வேறு எந்த உரையாடலும் இல்லை. தனது பணி முடிந்து ஊர் திரும்பி விட்டார். சில வாரங்களில் அந்த சித்தர் இவருடைய வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டு உரிமையாளரின் பாட்டனாருக்கு ஆச்சர்யம். தங்களுக்குள் எந்த உரையாடலும் நிகழாத போது அவர் எங்கனம் தனது வீட்டை அறிந்து வந்தார் என்ற ஆச்சர்யம் அவருக்கு. சித்தர் அந்த வீட்டிலேயே தங்கியிருக்கிறார். வீட்டு உரிமையாளரின் பாட்டனார் தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் சித்தரை வாசம் செய்யச் செய்திருக்கிறார். தீவிரமான சாதனைகளைச் செய்பவராக அந்த சித்தர் இருந்திருக்கிறார். பின்னர் அந்த தோட்டத்தில் சமாதி ஆகியிருக்கிறார். பல சம்பவங்களுடன் வீட்டின் உரிமையாளர் என்னிடம் சொன்னார். அந்த சித்தர் பல நாட்கள் வசித்த வீடு இது என்று வீட்டு உரிமையாளர் என்னிடம் சொன்னார்.
இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு பாதுகாப்பு படை என்னும் அமைப்பு மேற்கொள்கிறது. நம் நாட்டின் பிரதமராயிருந்த இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமராயிருந்த ராஜிவ் காந்தி சென்னைக்கு அருகே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பின்னர் இந்த அமைப்பு இந்தியாவின் முக்கிய தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியது. இந்த அமைப்பில் இந்தியப் பிரதமருக்கு மிக அருகில் நின்று பாதுகாக்கும் வீரர்கள் தன்னார்வத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களை ஒரு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நாட்கள் - ஏழு பகல் பொழுதுகள் ஏழு இரவுப் பொழுதுகள் = 168 மணி நேரம் உடலில் உச்சபட்ச ஆயுதங்களைச் சுமந்த வண்ணம் ஒரு கணம் கூட கண் அயர்ந்து தூங்கி விடாமல் நிற்க வேண்டும். இது அவர்களுக்கான சோதனை. இந்த சோதனையில் ஒருமுறை மட்டுமே பங்கு பெற முடியும். இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. இதனை ஒரு நுண் தவம் என்று கூட சொல்ல முடியும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 21 வயதான எந்த இந்தியக் குடிமகனும் பிரதமராகலாம் என்கிறது. அந்த இந்தியக் குடிமகன் எந்த ஜாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் ; எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; எந்த மொழியைப் பேசுபவராகவும் இருக்கலாம். சிறப்பு பாதுகாப்பு படையினர் தங்களை நுண் தவத்துக்கு உட்படுத்திக் கொள்ளும் போது தான் இன்னாருக்கு பாதுகாப்பு அளிக்கப் போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது ; இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் இந்திய ஜனநாயகத்தின் படியும் எவர் வேண்டுமானாலும் பிரதமராக முடியும். சிறப்பு பாதுகாப்பு படையினர் தங்களை நுண் தவத்துக்கு உட்படுத்திக் கொள்ளும் போது அவர்கள் எண்ணத்தில் சிந்தனையில் உணர்வில் நிறைந்திருப்பது எது? நிறைவது எது?
பொருளால் ஆனது இவ்வுலகம். பொருளுக்கு அப்பால் இருக்கும் விஷயங்களால் அது இயங்குகிறது என்பதை உணர மிகச் சிலருக்கே சாத்தியம் ஆகிறது.