நேற்று கங்கை கொண்ட சோழபுரம் குறித்தும் வீர நாராயண ஏரி குறித்தும் ஒரு பதிவை எழுதியிருந்தேன். நேற்று மாலையே அந்த ஏரிக்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் உருவானது. எனது நண்பன் வெளியூரில் பணிபுரிகிறான். அவரது உறவினர் உடல் நலம் குன்றியிருக்கிறார். சிதம்பரத்தில் வசிக்கும் அவரைக் காண நண்பன் வந்திருக்கிறான். இந்த விபரத்தைக் கூறி எனக்கு ஃபோன் செய்தான். நண்பரின் உறவினரின் உடல்நலம் மேம்பட்டவுடன் அவரை சந்திக்கலாம் என எண்ணினேன். நண்பனும் அதனை ஆமோதித்தான். ’’அண்ணன் ! சிதம்பரம் வந்துடுங்க. வீராணம் ஏரிக்கரைக்கு போவோம்’’ என்றான். மாலை 4 மணிக்குப் புறப்பட்டு சிதம்பரம் சென்றடைந்தேன்.
என் மனதில் ஓடும் எண்ணங்களை எப்போதும் என் மனத்தின் ஒரு பகுதி கவனித்துக் கொண்டிருக்கும். எல்லாருக்கும் இந்த வழக்கம் இருக்கும். கிரியேட்டிவ் ஆட்கள் இதில் திறன் கூடியவர்களாய் இருப்பார்கள். மனம் என்னென்ன எண்ணுகிறது என்பதை நிர்ணயிப்பதில் ஒவ்வொருவரின் அகமும் புறமும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். அவரவர் தன்மையைப் பொறுத்தே அவர்கள் மனத்தின் மகிழ்ச்சியும் சோர்வும் அமையும்.
நண்பன் பணி புரியும் இடத்தில் அவனுக்கு பணி மாறுதல் அளிக்கப்பட்டிருக்கிறது. சிறு நகரம் ஒன்றில் பணி புரிந்த நண்பன் தற்போது தலைமையிடத்தில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறான். அவன் அலுவலகப் பணிக்கு மாற்றப்பட்டிருப்பது குறித்து அறிந்ததிலிருந்து நான் மகிழ்ச்சியே அடைந்தேன். தற்போது பணி புரியும் நகரில் அவன் அலுவலகத்தில் அவனே தலைமைப் பொறுப்பில் இருப்பவன். அங்கே அவனுக்கு ஊழியர்கள் மத்தியிலும் அலுவலகம் தொடர்பான அனைவரின் மத்தியிலும் நல்ல பெயரும் செல்வாக்கும் இருக்கிறது. இப்போது மாறுதல் செய்யப்பட்டிருக்கும் இடம் நாள் முழுக்க கணினி முன் அமர்ந்து செய்யும் ஒரு மேஜைப் பணி. அதனால் நண்பனுக்கு சிறு சோர்வு இருந்தது.
‘’தம்பி ! இந்த விஷயத்துக்கு நீ சோர்வாகக் கூடாது. உனக்கு நிறுவனம் ஒரு வேலை கொடுத்தது. நீ அந்த வேலையை சிறப்பா செஞ்ச. நீ சிறப்பா செஞ்சிருக்கங்கறது உன் ஸ்டாஃப் மனசுலயும் உன் கஸ்டமர் மனசுலயும் பதிவாகியிருக்கு. உனக்கும் திருப்தி இருக்கு. உன் மேனேஜ்மெண்ட் உன்னோட பெர்ஃபாமன்ஸ் ஃபைலை பாத்தே அதை தெரிஞ்சுகிட்டு இருப்பாங்க. அஞ்சு வருஷம் அங்க வேலை பாத்துட்ட. உனக்கு ஒரு செட் ஆஃப் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்கு. இப்ப அதுக்கு காண்டிராஸ்ட்டா இருக்கற இன்னொரு வேலையை நிர்வாகம் கொடுக்குது. இது ஒரு மாறுதல். நாம எப்பவுமே மாறுதல்களை வரவேற்கற மனசோட இருக்கணும். ஒரு விஷயத்தை புதுசா உருவாக்கத்தான் மாறுதல் தேவைங்கறது இல்ல. இருக்கற விஷயத்தை இருக்கறபடியே பாதுகாத்துக்கக் கூட மாறுதல் தேவை. ஒரு சின்ன ஆஃபிஸ்ஸோட தலைமைப் பொறுப்பில இருந்தப்ப நீ 95 சதவீதம் விஷயங்களை கத்துக்குட்டு இருந்திருக்கலாம். இப்ப இந்த மேஜைப் பணி கூட உனக்கு தலைமைப் பொறுப்போட மீதி 5 சதவீதத்தைக் கத்துத் தரலாம். நீ விரும்பற பணியில உனக்கு முழுமை கிடைக்கணும்னா கூட உனக்கு ஒரு மாறுதல் தேவையா இருக்கலாம். நீ உன் விருப்பத்தால எட்டின 95 சதவீத பர்ஃபெக்ஷன் உன்னை மீதி இருக்கற 5 சதவீத பெர்ஃபெக்ஷனுக்கு இந்த இடம் நோக்கி அனுப்பியிருக்கலாம் இல்லையா?’’
ஒரு டிரான்ஸ்ஃபருக்குப் பின்னாடி இத்தனை அப்ஸ்ட்ராக்ட் விஷயங்களா என நண்பன் யோசித்தான். சாதாரண விஷயங்களை நான் அப்ஸ்ட்ராக்ட் ஆக்குகிறேனோ என்ற ஐயம் நண்பனுக்கு உருவானது. அதைச் சொன்னால் இன்னும் ஆழமாக வேறு எதையும் கூறுவேன் என அமைதியாக இருந்து விட்டான்.
இரு சக்கர வாகனத்தை நண்பன் இயக்கினான். நான் பின்னால் அமர்ந்திருந்தேன்.
‘’தம்பி ! நேத்து ஒரு விஷயம் அப்சர்வ் பண்ணேன்’’
‘’என்ன விஷயம்ணா?’’
‘’நேத்து நானும் என்னோட ஃபிரண்டும் பூம்புகார் போய்ட்டு இருந்தோம். கடலுக்குப் போய் ரொம்ப நாளான மாதிரி தோணுச்சு. சரின்னும் கிளம்புனேன். நண்பர் வழியில ஜாயின் பண்ணிக்கிட்டார். ஒரு கிராமத்தைத் தாண்டினோம். அந்த கிராமத்தோட ஊராட்சி மன்றத் தலைவர் ஒருத்தர கொலை பண்ணிட்டார். அவர் ஜெயில்ல இருந்தார். அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் தாண்டின போது எனக்கு ஒரு விஷயம் தோனுச்சு. ஃபிரண்டுகிட்ட கேட்டேன். இந்த ஊரோட ஊராட்சி மன்றத் தலைவர் மேல கொலை கேஸ் இருக்கே. அவர் எப்படி ஊராட்சி மன்றத் தலைவரா தொடர்ந்து இருக்க முடியும்? நண்பரும் ஆமாம் நீங்க சொல்றது சரிதான் என்றார். ஒரு ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் மீது கிரிமினல் வழக்கு பதிவானால் அவரை மாவட்ட ஆட்சியர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவர் மீது வழக்கு பதிவாகி நீதிமன்றத்தால் ஜெயில் தண்டனையும் பெற்று விட்டார். ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை? நண்பருக்கும் நான் சொல்வது சரிதான் என்பது புரிந்து விட்டது’’
நண்பனிடம் கேட்டேன். ‘’ஏன் அவர் பதவி நீக்கம் செய்யப்படல? உனக்கு என்ன தோணுது?’’
‘’என்ன காரணம்ணா? எனக்கு ஒன்னும் தெரியலயே!’’
‘’நான் என்ன நினைக்கிறேன்ணா கலெக்டருக்கு ஒரு முறைமை பின்பற்றப்படாம இருக்கேன்னு கவலை இல்லை. பி.டி.ஓ க்கும் அக்கறை இல்லை. அரசியல் கட்சிகளாவது கொலை வழக்குல ஜெயிலுக்குப் போன ஒருத்தர் எப்படி ஊராட்சி மன்றத் தலைவரா இருக்க முடியும்னு மாவட்ட நிர்வாகத்தைக் கேக்கணும். அவங்களுக்கும் இதுல அக்கறை இல்லை. அவரோட கட்சிக்கு எதிர்க்கட்சிக்காவது இந்த விஷயம் தோணியிருக்கணும். அவங்களும் அதை செய்யல. இவங்க எல்லாருமே ஒரே தரப்பு. ஒருத்தர் ஒரு கிரைம செஞ்சிருக்கார். மத்தவங்க இதைச் செய்யலையே தவிர கிரைம் செஞ்ச ஆள் மாதிரி தான் இவங்களும். ஒரு கிரைம்ல ஈடுபட்ட ஒருவர் உள்ளாட்சி பதவில இருக்கக் கூடாது என்கிற சட்டம் இவங்களுக்கு அசௌகர்யமான ஒன்னு. தங்களுக்கு அசௌகர்யமான ஒரு விஷயத்தை இவங்க செய்ய மாட்டாங்க. ஒருவேளை கொலை வழக்குல தண்டனை பெற்ற ஒருத்தர் ஊராட்சி பொறுப்புல இருக்கக் கூடாதுன்னு யாராவது ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுனா நியூஸ் பேப்பர்ல அறிக்கை கொடுத்தா கொஞ்சம் பேர் கூடி ஒரு போராட்டம் நடத்தினா இந்த விஷயம் பப்ளிக் கவனத்துக்கு வரும். அப்ப நடவடிக்கை எடுக்கலாம். வாய்ப்பு இருக்கு.’’
நண்பன் கேட்டான் ; ‘’சட்டத்தை நிறைவேற்றணும்னு பியூரோகிராட்ஸ் நினைக்கவே மாட்டாங்களா?’’
‘’இந்தியன் பியூரோகிராஸி அப்படித்தான். அவங்களுக்கு பெரிய நெருக்கடி வந்தா மட்டும் தான் செயல்படவே ஆரம்பிப்பாங்க’’
வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
‘’தம்பி ! நேத்து ஃபிரண்ட் கிட்ட இந்த விஷயம் பேசிக்கிட்டு இருந்தப்ப எனக்கு ஒரு ஷாக் ஏற்பட்டுச்சு. அது என்னன்னா நாலு வருஷம் முன்னாடி ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் அவரோட கிராமத்துல இருந்த புராதானமான விஷ்ணு கோயில் சன்னிதித் தெருவுல அந்த தெரு மக்கள் பத்து வருஷமா தங்களோட வீட்டு வாசல்ல வளத்த வேம்பு, மலைவேம்பு, புங்கன் என 14 மரங்களை வேரோட வெட்டி எடுத்துட்டு போய் தன்னோட செங்கல் காலவாய்க்கு எரிபொருளா பயன்படுத்தினாரு. அவர் மேல கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தோம். வருவாய்த்துறை அவருக்கு ஃபைன் போட்டுச்சு. ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்புல இருக்கற ஒருத்தர் குற்றச்செயல் ஒன்னுக்காக ஃபைன் கட்டியிருக்கார். இந்த பேஸிஸ்ல அவரை பதவி நீக்கம் செய்யணும்னு அந்த தெருவோட மக்கள் அரசாங்கத்தைக் கேட்டாங்க. கொலை வழக்குல தண்டனை கிடைச்ச ஒருத்தரையே ஊராட்சி மன்றத் தலைவரா இருக்க அனுமதிச்சிருக்க மாவட்ட நிர்வாகமா மரம் வெட்டின ஊராட்சி மன்றத் தலைவர் மேல நடவடிக்கை எடுக்கும்னு நான் யோசிச்சன் தம்பி. ஷாக்கா இருந்தது. ‘’
’’உண்மைதான் அண்ணன்!’’ நண்பன் ஆமோதித்தான்.
‘’நான் நம்பிக்கை இழக்கல. ஆனா நேத்து இந்த ரெண்டு விஷயத்தையும் சேத்து யோசிக்க சந்தர்ப்பம் கிடைச்சுப்ப எனக்கு இது புரிஞ்சது. இத இப்பதான் புரிஞ்சிகிட்டு இருக்கமாங்கறதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். இட் இஸ் பெட்டர் லேட் தேன் நெவர்’’
ஏரிக்கரையில் சென்று அமர்ந்தோம். ஏரி நிரம்பியிருந்தது. நீரில் காற்று சிறு சிறு அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு அலைகள் எழும் நீர்ப்பரப்பு மனத்தை இளகச் செய்யக் கூடியது.
‘’தம்பி ! மீதி இருக்கற வாழ்க்கையை இந்த மாதிரி ஒரு நீர்ப்பரப்பை மட்டும் பாத்துக்கிட்டு இருந்தா போதும்னு தோணுதுடா?’’
‘’வானப்பிரஸ்தம் ங்றது அதானே அண்ணன்’’ என்றான் நண்பன்.