அமைப்பாளர் வைத்திருப்பது சாதாரண அலைபேசி. அதாவது ஜி.எஸ்.எம் அலைபேசி. அவர் திறன் அலைபேசி என்ற வஸ்துவை வாங்கவேயில்லை. எனவே அது குறித்தும் அதில் இருக்கும் வசதிகள் குறித்தும் அனேகமாக எதுவும் தெரியாது. அமைப்பாளரின் ஜி.எஸ்.எம் அலைபேசி குறுஞ்செய்திகளை எழுத்துப் பிரதியாக அளிக்கவல்லவை. எவரேனும் தங்கள் குறுஞ்செய்தியில் ஏதேனும் ஸ்மைலியை அனுப்பினால் இரு சதுர வடிவம் கொண்ட கட்டங்களைக் காட்டும்.ஒருமுறை நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றுக்குப் பதிலாக ஒரு ஸ்மைலியை அனுப்பியிருக்கிறார். அமைப்பாளருக்கு அது சதுரக் கட்டமாக அவரது ஜி.எஸ்.எம் அலைபேசியில் காட்டியிருக்கிறது. அமைப்பாளர் அதற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். அதாவது, தாங்கள் அனுப்பிய பதிலை என்னால் வாசிக்க முடியவில்லை. அலைபேசி வெறுமைக் கட்டங்களைக் காட்டுகிறது என. நண்பர் ஃபோனில் அழைத்து தான் அனுப்பியது ஒரு ஸ்மைலி என்றார். அமைப்பாளர் அவரிடம் அப்படி என்றால் என்ன என்று கேட்க நண்பர் திகைத்துப் போய் ஸ்மைலி குறித்து விளக்கினார். அமைப்பாளர் என்ன புரிந்து கொண்டாரோ இல்லையோ அவரது ஜி.எஸ்.எம் அலைபேசி எல்லா ஸ்மைலிகளையும் வெறுமைச் சதுரக் கட்டங்களாகவே புரிந்து வைத்திருக்கிறது.
அமைப்பாளர் இப்போது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் விஷயம் சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசியையும் பயன்படுத்தாமல் இருப்பதைக் குறித்து !