Monday, 7 July 2025

வட காவேரி - வடவாறு

தென்னிந்தியாவின் மிகப் பெருநதிகளில் முதலாவது கோதாவரி. அதன் நீளம் 1465 கி.மீ. மஹாராஷ்ட்ராவின் திரயம்பகேஸ்வர் அருகே உற்பத்தியாகி மகாராஷ்ட்ரா, சட்டீஸ்கர், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே பயணிக்கிறது.  ஆந்திரப் பயணத்தில் கோதாவரியைக் கண்டதிலிருந்து அந்நதியின் பிரதேசங்களில் வாழ வேண்டும் ; பயணிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் காவேரி குளித்தலைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையே அகண்ட காவேரியாக மாறுகிறது. பின்னர் அகண்ட காவேரி கொள்ளிடம், காவிரி மற்றும் காவிரியின் கிளை நதிகளாகப் பிரிந்து விடுகிறது. திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே கொள்ளிடமே பெரு அகலம் கொண்ட ஆறாக செல்கிறது. காவிரியில் பெருவெள்ளம் வருமாயின் அந்த வெள்ளத்தை தன்னுள் ஏந்திக் கொள்ளும் ஆற்றல் கொள்ளிடத்துக்கு மட்டுமே உண்டு. கொள்ளிடம் வட காவேரி என மக்களால் அழைக்கப்படுகிறது. 

இன்று காலை சட்டென ஏற்பட்ட ஓர் உணர்வில் மணல்மேடு அருகே உள்ள கொள்ளிடக் கரைக்குச் சென்றேன். அங்கிருந்து கரையில் மேற்கு நோக்கி இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். கொள்ளிட நதிக்கரை கிராமங்கள் செழுமையானவை. நிறைய இடங்களில் சோளம் பயிரிட்டிருந்தார்கள். சோளம் பூ பூத்து இருந்தது. இன்னும் 15 நாளில் கதிர் வைக்கக் கூடும் என்று அங்கிருந்த விவசாயிகளிடம் விசாரித்த போது கூறினார்கள். அந்த நதிக்கரை நெடுக நிறைய ஆலமரங்கள் இருக்கும். அதன் கிளைகளில் மயில்கள் பல அமர்ந்திருந்ததைக் கண்டேன். முன்னர் அடிக்கடி இந்த கரைக்கு வருவேன். சாலையே இல்லாமல் மண்பாதையாக கரை இருக்கும் நிலையில் கூட வந்திருக்கிறேன். அதில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கரையோரம் வசிக்கும் மக்கள் என்னை அரசு அதிகாரி என நினைத்துக் கொள்வார்கள். இந்த ப்குதியில் சாலை அமைக்கப் போகிறீர்களா என விசாரிப்பார்கள். பின்னாட்களில் திருச்சியிலிருந்து காட்டூர் வரை 120 கி.மீ க்கும் மேலான நீளத்துக்கு கொள்ளிடக் கரையில் தார்சாலை அமைக்கப்பட்டது. இது நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். 

இன்று முடிகண்டநல்லூரிலிருந்து அணைக்கரை வரை கொள்ளிடத்தின் கரையில் சென்றேன். அணைக்கரை எனக்கு மிகவும் பிடித்த ஊர். அந்த ஊரை என்னுடைய 5 வயதில் பார்த்திருப்பேன் என எண்ணுகிறேன். முதல் முறை அந்த ஊரைப் பார்த்தலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஊராகி விட்டது. கொள்ளிடக்கரையில் ஒரு பெரிய அரசு பங்களா இருக்கும். அந்த பங்களாவில் இருப்பவர்கள் எப்போதும் நதியைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் அல்லவா என்று நினைப்பேன். 40 ஆண்டுகள் முன்பு பார்த்த அணைக்கரைக்கும் இப்போது உள்ள அணைக்கரைக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. கொள்ளிடத்தின் தென்கரையில் வந்த நான் பாதை தவறி வடவாற்றின் தென்கரைக்கு வந்து விட்டேன். வடவாற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி சென்று சண்டன் என்ற ஊரை அடைந்தேன். அங்கிருந்து ஆய்க்குடி , மோவூர் வழியாக முட்டம் வந்து கொள்ளிடம் ஆறுடன் சேர்ந்து கொண்டேன்.

வீர நாராயண ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டு சேர்ப்பது வடவாறு. சென்னைக்கான குடிநீர் வீர நாராயண ஏரியிலிருந்து செல்வதால் வடவாறில் வருடத்தின் அனைத்து மாதங்களிலும் அனேகமாக தண்ணீர் இருக்கிறது. சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செய்த நற்செயலால் இன்றும் தமிழகம் பயன் பெறுகிறது.

நதிக்கரை கிராமம் ஒன்றில் உடல் உழைப்பால் விவசாயம் செய்து சோளமோ, பூசணியோ செடி முருங்கையோ பயிரிட்டு சிறு மூங்கில் குடிசை ஒன்றை எழுப்பி அதில் வாழ்ந்தால் போதும் என்று தோன்றுகிறது.