கிராமங்களில் அலைந்து திரிவதை பல ஆண்டு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். எந்த ஊரையும் நம் சொந்த ஊராக எண்ண வைப்பவை அந்த ஊர்களின் பிரும்மாண்டமான நிழல் தரும் மரங்களே. மரம் தரும் நிழலின் இதத்தை சில கணங்களேனும் உணர்பவர்கள் தெய்வத்தின் அருளின் சிறுதுளி ஒன்றை அறிந்தவர்கள் ஆகிறார்கள். மனிதகுலம் உருவான காலத்திலிருந்தே மனிதர்கள் தங்களுக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். உலகின் எந்த பகுதியாயினும் ஒரு மனிதக்குழு ஒருநாளில் தன்னால் புழங்கக் கூடிய வெளி ஒன்றையே ஊர் என்று உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டின் மரபு ஊர் என்பதை எல்லா உயிரினங்களுக்கான இடமாகக் காண்கிறது. ஊரில் மனிதர்கள் இருக்க வேண்டும் ; பிராணிகள் இருக்க வேண்டும் ; பறவைகள் இருக்க வேண்டும் ; பூச்சிகள் இருக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் இடம் தரும் வகையில் அமையும் வாழிடமே அங்கே இருப்பவர்கள் மனிதர்களின் தனித்திறனான சிந்திக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம் ஆகும். இன்று உலகம் நுகர்வில் மிகவும் தீவிரமாக மூழ்கியிருக்கிறது. இயற்கை என்பது நுகர வேண்டிய பண்டம் என்பது எல்லா மேலைப் பொருளியல் சிந்தனைகளின் அடிப்படைப் பாடம். அது மானுடத்துக்கு உருவாக்கியிருக்கும் சிக்கல்கள் மிகப்பல. நம் நாட்டின் மரபு உலகின் எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பதை அடிப்படையாய்க் கொண்டது. இன்று மானுட குலம் எதிர்கொள்ளும் சிக்கலை ஒட்டுமொத்த மானுட குலமும் தான் சிந்தித்து செயலாற்றி தீர்வு காண வேண்டும்.
உலகம் என்ற மாபெரும் பரப்பின் நுண் அலகான ஒரு கிராமத்தில் அடிப்படையாக என்னென்ன விஷயங்கள் குறைந்தபட்சமாக செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டுக் கொள்வோம்.
1. கிராமத்தின் எல்லா குழந்தைகளும் விளையாட வேண்டும். கிராமத்தின் உள்ள எல்லா குழந்தைகளும் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் தேவை. நமது நாடு - நமது நாட்டு மக்கள் - நமது நாட்டின் சாமானிய மக்கள் - இன்று வறுமையை வென்றிருக்கிறார்கள். உணவுப் பற்றாக்குறை என்பது இல்லாமல் ஆகியிருக்கிறது. முன்னர் நாம் நாட்டு மக்களுக்குப் போதிய உணவு வழங்க முடியாத துயரில் இருந்தோம் ; இப்போது உணவுப் பஞ்சம் தீர்ந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் மூழ்கத் தொடங்குகிறோம்.
உணவுப் பஞ்சம் தீர்ந்த சமூகம் தனது உடல்நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். உடல் உணவை மிகையாக கொள்ளத் தொடங்கினால் நோய்மை கொள்ளத் தொடங்கும். நூற்றுக்கணக்கானோ ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கானோர் நோய்மை கொள்ளும் போது அந்த நோய்மைக்கு நிகழும் மருத்துவம் பெருந்தொழில் ஆகிறது. இன்று உலகம் முழுக்க கோடானு கோடி புழங்கும் அந்த துறை மனிதர் வாழ்க்கை முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. வலிமை நிறைந்த உடலே சிந்திக்கும் மனத்தைக் கொண்டிருக்க முடியும்.
நாம் இன்று கிராமத்தின் எல்லா குழந்தைகளும் உணவு பெறுவதை உறுதி செய்திருக்கிறோம். இது முக்கியமான பாராட்ட வேண்டிய விஷயம். ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள் தொடங்கி கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் நம் கிராமத்துக் குழந்தைகள் உடல் வலிமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே எல்லா குழந்தைகளும் விளையாடி உடல் நலம் பெறும் வகையில் விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் தேவை. நம் நாட்டில் குழந்தைகளை தெய்வ ரூபங்களாகக் காணும் மரபு உண்டு. முயன்றால் இப்பணி நிகழும். சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார் : ‘’இந்த உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம் . இங்கே நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’.
2. நமது நாட்டில் நான்மறைகள் நாடெங்கும் ஒலித்துள்ளன. புராணங்களும் உபநிடதங்களும் காவியங்களும் பயிலப்பட்டுள்ளன. உலகின் தொன்மையான நாட்டின் தொன்மையான ஞானம் உறையும் சமஸ்கிருத மொழி பயில கிராமங்களில் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். சமஸ்கிருதம் கலைக்கான மொழி மட்டுமல்ல ; நுண்கலைகள், மருத்துவம் (ஆயுர்வேதம்) ஆகியவையும் சமஸ்கிருதத்தில் இன்றும் பயிலப்படுகின்றன.
3. உலகம் முழுக்க மானுடர்கள் இன்று போக்குவரத்து வசதிகளால் சென்று வருகின்றனர். உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பேரரசர்களுக்கும் கிட்டிராத வசதிகள் ஆகும் இவை. எனவே பல மொழிகள் பயில கிராமத்தில் வாய்ப்பு இருக்க வேண்டும். மொழிக்கல்வியே ஞானங்களுக்கான கல்வி என்பதால் பலவிதமான மொழிகள் பயில வாய்ப்பு இருக்க வேண்டும்.
4. நூல் வாசிப்பே மனிதர்களை சிந்திக்கவும் தன் சிந்தனையை தொகுத்துக் கொள்ளவும் செயலாக்கவும் உதவும். எனவே கிராமத்தில் படைப்பூக்கம் கொண்ட நூலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும்.
5. ஒரு கிராமத்தில் எத்தனை மரங்கள் இருப்பதற்கு சாத்தியமோ அத்தனை மரங்கள் அங்கே வளர்ந்திருக்க வேண்டும். அவ்விதம் இருந்தால்தான் பிராணிகள் , பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றின் சக இருப்பை நாம் உறுதி செய்ய முடியும். அப்பணியும் அடிப்படையான குறைந்தபட்சமான பணியாகும்.
6. எவ்விதமான வேலையாக இருந்தாலும் உடல் உழைப்பை நல்கும் வகையிலானதோ அல்லது மூளை உழைப்பை நல்கும் வகையிலானதோ அந்த வேலையைக் கோரும் கிராமவாசிகளுக்கு பணி வாய்ப்புகளின் பரிந்துரையை அளிக்கும் மையம் ஒன்று கிராமத்தில் இருக்க வேண்டும்.
’’காவிரி போற்றுதும்’’ ஏதேனும் ஒரு கிராமத்தில் இந்த பணிகளை முழுமையாகச் செய்ய விரும்புகிறது. இந்த நல்விஷயங்கள் சிறப்பான கற்பனை என்பது ‘’காவிரி போற்றுதும்’’மின் துணிபு. இந்த செயல்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது ‘’காவிரி போற்றுதும்’’; மிக மெதுவாகச் சென்றாலும் இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்வதை நன்றென்றே கருதுகிறது ‘’காவிரி போற்றுதும்’’
தமிழும்,சமஸ்கிருதமும்,பல மொழிகளும் பயிற்றுவிக்கும் மொழி ஆசிரியர்களுக்கு மிகச் சிறப்பான ஊதியமும் மிகச் சிறப்பான வசதிகளும் செய்து தர வேண்டும் என்பதில் ‘’காவிரி போற்றுதும்’’ உறுதி கொள்கிறது. கல்வியையும் கல்வி அளிக்கும் ஆசான்களையும் மதிக்கும் சமூகமே பிரக்ஞை கொண்ட சமூகம் ஆகும்.
இவை நிகழும் என்ற நம்பிக்கை ‘’காவிரி போற்றுதும்’’க்கு எப்போதும் திடமாக உள்ளது.