வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் நண்பன் அமைப்பாளரின் பிராந்தியத்தைச் சேர்ந்தவன். சொந்த ஊருக்கு வந்திருந்த அவனைக் காண அமைப்பாளர் சென்றிருந்தார். சந்தித்த முதல் நாள் முதல் இன்று வரை இருவரும் அன்பின் ஆழம் கொண்ட பிணைப்புடன் இணைந்திருக்கிறார்கள். நண்பன் அமைப்பாளரை ‘’பழைய ஆள்’’ என்று நினைத்துக் கொள்வான் ; ஆனால் அமைப்பாளரிடம் அப்படி கூற மாட்டான். அமைப்பாளர் நண்பனிடம் ‘’நான் கொஞ்சம் பழைய ஆள்’’ தம்பி என்று கூறுவார். தான் மனதில் நினைப்பதை அமைப்பாளரே கூறி விடுகிறார் என்பதால் விஷயம் தம்பிக்கு எளிதானதாகி விடும்.
தம்பி ஏதேனும் ஒரு சம்பவத்தையோ எண்ணத்தையோ முன்வைக்க அமைப்பாளர் அந்த சம்பவத்தின் எண்ணத்தின் ஐயாயிரம் ஆண்டு வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து விளக்கி சமகாலத்தில் அந்த விஷயம் எவ்விதம் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வார். இதுதான் அண்ணன் தம்பியின் உரையாடல் பாணி. எந்த சமகால விஷயத்துக்கும் எப்படி குறைந்தது ஐயாயிரம் ஆண்டாவது வரலாற்றுப் பின்னணி இருக்கிறது என்னும் வியப்பும் இந்த வரலாற்றுப் பின்னணி நிஜமாகவே இருக்கிறதா அல்லது அமைப்பாளர் உருவாக்கி விடுகிறாரா என்னும் ஐயமும் நண்பனுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
தம்பியின் ஊரில் தம்பிக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவனுடைய கிராமத்துக்கு அமைப்பாளரும் தம்பியும் சென்றிருக்கிறார்கள். அந்த ஊரில் எல்லா வீடுகளிலும் மாடு உண்டு. மாலை 3 மணி ஆனால் அந்த ஊரில் எல்லா பெண்களும் பால் கறக்க சென்று விடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நான்கு அல்லது ஐந்து மாடுகள் இருக்கும். எனவே மதியம் 2.45லிருந்து மாலை 3.30 வரை அவர்கள் வீட்டில் இருந்தே ஆக வேண்டும். வருடத்தின் 365 நாளும் அவர்களுக்கு இந்த வேலை உண்டு. எல்லா வீடுகளிலும் மாடுகள் இருப்பதால் இந்த வேலையை இன்னொருவர் செய்ய பணிக்க முடியாது. கறவை நேரம் கடந்து விட்டால் மாடு சிரமப்படும். எனவே உலகில் என்ன நடந்தாலும் அந்த ஊரில் இருக்கும் பெண்கள் மதியம் 2.45லிருந்து மாலை 3.30 வரை பால் கறந்தே ஆக வேண்டும். ஊரில் இருக்கும் ஆண்கள் காலையிலிருந்து மதியம் வரை மாட்டுக்குத் தண்ணீர் வைப்பது , மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது, காலையும் மாலையும் கறக்கப்படும் பாலை பக்கத்தில் இருக்கும் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வது ஆகிய பணிகளைச் செய்வார்கள். எனவே அந்த ஊரின் ஆண்களால் ஊரை விட்டு எங்கும் வெளியே செல்ல முடியாது. அந்த ஊரின் நிலவியல், சமூகப் பழக்கம் காரணமாக இந்த விஷயங்கள் அங்கே உள்ளன. பால் மூலம் வருமானம் கிடைக்கிறது என்பதால் இந்த விஷயம் அங்கே 75 ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. ஆனால் அந்த ஊரில் இருக்கும் ஆண்களாலோ பெண்களாலோ வெளியூர் செல்ல முடியாது ; வெளியூரில் நிகழும் மங்கல நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாது. இது அவர்களின் பால் வணிகத்தின் விளைவுகளில் ஒன்று. அந்த ஊரின் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 10 ஏக்கர் நிலத்துக்காவது சொந்தக் காரர்களாய் இருப்பார்கள். அவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆனால் ஊரை விட்டு வெளியே செல்ல முடியாதவர்கள் என்னும் நிலை அவர்களுக்கு.
தம்பி அந்த ஊரைப் பற்றி ஒரு விஷயத்தை அமைப்பாளரிடம் சொன்னான். ‘’அண்ணன் ! அந்த ஊர்ல சாயந்திரம் ஆனா விளக்கு ஏத்தற பழக்கம் யாருக்கும் இல்ல’’ என்றான்.
அமைப்பாளர் சொன்னார் ; ‘’மின்சாரம் பயன்பாட்டுக்கு வர்ரதுக்கு முன்னாடி உலகத்துல இருக்கற எல்லா வீடுகள்லயும் சாயந்திரம் ஆனா விளக்கு ஏத்தற வழக்கம் இருந்திருக்கும் இல்லயா?’’
‘’ஆமாம் அண்ணன்’’
’’அப்ப இந்த ஊர்லயும் அந்த வழக்கம் இருந்திருக்கும் தான?’’
‘’ஆமாம் இருந்திருக்கும்’’ என மையமாக சொன்னான் தம்பி.
’’இந்த ஊருக்கு கரண்ட் வந்து ஐம்பது வருஷம் ஆகியிருக்கும். அப்ப இந்த வழக்கம் இல்லாம போயிருக்கலாம்’’
நண்பன் மௌனமாக இருந்தான். ‘’அண்ணன் ! அந்த ஊர்ல கல்யாண சீர் செய்யும் போது இப்பவும் மண்ணெணெய் அரிக்கேன் விளக்கு வாங்கிக் கொடுக்கற வழக்கம் இருக்கு’’
‘’தட்ஸ் இட்’’ என்றார் அமைப்பாளர்.
‘’அங்க உள்ள குடும்பங்களோட குலதெய்வம் யாருன்னு தெரியுமா?’’ என்று கேட்டார் அமைப்பாளர்.
‘’பேய்ச்சியம்மன்’’ என்றான் நண்பன்.
‘’துடியான தெய்வங்கள் குலதெய்வமா இருந்தா அந்த குலதெய்வத்துக்கு வருஷம் ஒரு தடவை குலதெய்வம் இருக்கற கோயிலுக்குப் போய் அங்க ரெண்டு நாளோ மூணு நாளோ தங்கி ஆடு , கோழி பலி கொடுத்து பூசனை செஞ்சு சாமி கும்பிடுவாங்க. அந்த குலதெய்வ வழிபாட்டுல அவங்க ரொம்ப தீவிரமா இருப்பாங்க.’’ என்றார் அமைப்பாளர்.
வரலாறு, சமூகவியல், மானுடவியல், பொருளியல் என பல அறிவுத்துறைகள் சூழ்ந்து விவாதம் நடந்த பின் தான் பதில் அறிய விரும்பும் ஒரு தனிப்பட்ட கேள்வி ஒன்றை தம்பியிடம் கேட்டார் அமைப்பாளர்.
‘’தம்பி ! நான் எல்லாருக்காகவும் தான் யோசிக்கறன். செயல்படறன். ஆனா என்னால என் கூட 4 பேர் 5 பேர் இருக்காங்கண்ணு ஒரு நிலையைக் கொண்டு வர முடியல. அது ஏன்?’’
அண்ணனின் கேள்விக்கு தம்பி யோசித்துப் பார்த்து ஒரு திருஷ்டாந்தம் சொன்னான்.
‘’அண்ணன் ! இப்ப உங்க ஊர்ல இருந்து நீங்க நான் உங்க ஃபிரண்ட்ஸ் என் ஃபிரண்ட்ஸ்னு பத்து பேர் ஸ்ரீரங்கம் போலாம்னு உங்களுக்குத் தோணுனா எப்படி பிளான் பண்ணுவீங்க ? ஒரு லிஸ்ட் எடுப்பீங்க. நாம என்னைக்கு எத்தனை மணிக்கு ஸ்ரீரங்கத்துல இருக்கணும்னு டைம் அண்ட் டேட் சொல்லுவீங்க. நீங்க சூஸ் பண்ற மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட் டிரெயினா இருக்கும். இது எல்லாத்தயும் அறிவிச்சிடுவிங்க. யார் ஜாயின் பண்ணனுமோ ஜாயின் பண்ணிக்கங்கன்னு சொல்லிடுவிங்க இல்லையா?’’
அமைப்பாளருக்கு ஒரே வியப்பு. தம்பியும் தன்னைப் போலவே பிளான் செய்கிறானே என்று.
‘’ஆமாம் தம்பி அப்படித்தான்’’ என்றார்.
‘’இப்படி 10 பேர்ட்ட அறிவிச்சா நீங்களும் நானும் மட்டும் தான் எஞ்சி நிக்கறோம் . இல்லயா?’’
‘’ஆமாம் தம்பி’’
‘’உங்க பிளானிங் வெரி குட். ஆனா அதுல இன்னும் சில அம்சங்களைச் சேக்கணும். உதாரணமா மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட் கார்னு சொன்னா இன்னும் 2 பேர் சேருவாங்க. பெரிய கார் இருக்கு. அதுல இடம் இருக்குன்னு சொன்னா இன்னும் 2 பேர் வருவாங்க. 6 பேர் சேந்து போகப் போறோம்ங்கறதாலயே இன்னும் 2 பேர் வந்துருவாங்க. பத்துங்கற நம்பர எட்டு கிட்ட கொண்டு வந்துடலாம்’’
‘’நான் சொன்ன பிளான் எகானமிக்கல். அது பத்து பேருக்கும் பொருந்தும் ; ஒருத்தருக்கும் பொருந்துமே?’’
’’அதனால தான் அண்ணன் தனியா இருக்கீங்க. தனியா இருக்கீங்கங்கறதை உங்களோட பின்னடைவா நினைக்க வேண்டாம். அது உங்க பலமா கூட இருக்கலாம்.’’