எனக்குத் தெரிந்த ஒரு அலுவலகம். அதில் பணி புரிபவர்கள் அனைவருமே எனக்கு பரிச்சயமானவர்கள். எல்லா அலுவலகங்களையும் போல காலை 10 மணிக்கு அலுவலகம் தொடங்கும். மாலை 5 மணிக்கு அலுவலக நேரம் நிறைவு பெறும். பத்து மணிக்கு அலுவலகம் வந்தாக வேண்டும் ; ஏனெனில் டிஜிட்டல் வருகைப்பதிவு உண்டு. அலுவலகத்தில் பெரும்பாலோனோர் மாலை 5 மணியிலிருந்து இரவு 7.15 வரை வேலை செய்து விட்டே அலுவலகம் நீங்க வேண்டும் என்று அதன் தலைமை அதிகாரி எதிர்பார்க்கிறார். அவ்விதமே நிகழ்கிறது. நான் அவர்களிடம் கேட்டேன். காலை 10 மணிக்கு அலுவலகம் துவக்க நேரம். அனைவரும் காலை 8 மணிக்கு வந்து விடுங்கள் ; மாலை 5 மணிக்கு வீட்டுக்குப் புறப்படுங்கள் என்றேன். சலிப்பாக இரண்டு மணி நேரம் கூடுதல் நேரம் என்பதால் இரண்டும் ஒன்று தானே என்றனர்.
அந்த இரண்டும் ஒன்றல்ல.
ரயில் ஒன்று காலை 10 மணிக்கு வருகிறது என வைத்துக் கொள்வோம். அந்த ரயிலில் ஏற வேண்டியவர் ஒரு மணி நேரம் முன்பாகவே ரயில் நிலைய நடைமேடைக்கு வந்து ரயிலுக்காகக் காத்திருப்பார் ; அந்த ரயிலில் வந்து இறங்குபவர் ரயிலிலிருந்து இறங்கி உடனே தனது அடுத்த திட்டமிடலை நோக்கிச் செல்வார். ரயிலில் வந்து இறங்கியவரும் ரயில் நிலைய நடைமேடையில் மேலும் ஒரு மணி நேரம் இருப்பது உசிதமா என யோசித்துப் பாருங்கள் என்றேன்.