Monday, 25 August 2025

துறவியுடன் ஒரு நாள்

எனது நண்பர் ஒருவர் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர். ஆன்மீக அமைப்பொன்றின் இளம் துறவி ஒருவரை கும்பகோணம் அருகில் இருக்கும் மடத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். தவிர்க்க முடியாத பணியொன்றின் காரணமாக திட்டமிட்ட விதத்தில் அவரால் உடன் செல்ல முடியாத நிலை. என்னை அப்பணியை மேற்கொள்ள முடியுமா என்று கேட்டார். நான் ஒத்துக் கொண்டேன். 

இன்று அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி முடித்ததும் குளித்துத் தயாரானேன்.  காலை உணவை ஊரில் முடித்து விட்டு காட்டுமன்னார்குடி சென்றேன். துறவி தன்னார்வலர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். விடிகாலை எழுந்து யோகப் பயிற்சிகள் தினமும் மேற்கொள்வது துறவியின் வழக்கம். காலை குறைந்தது 3 மணி நேரம் யோகப் பயிற்சிகள் செய்வார்கள். எஞ்சிய பொழுதில் 2 மணி நேரம் பயிற்சி இருக்கும். நான் சென்ற போது பயிற்சி முடித்து காலை உணவருந்தி தயாராக இருந்தார். காலை 8 மணி அளவில் ஒரு வேளை உணவும் இரவு 7 மணிக்கு அடுத்த வேளை உணவும் என ஒரு நாளைக்கு 2 வேளை மட்டுமே உணவருந்தும் வழக்கம் அவர்களுக்கு. 

இரு சக்கர வாகனத்தில் இருவரும் பயணித்தோம். எங்கள் பிராந்தியத்தின் சமூக பொருளாதார சூழ்நிலைகள் குறித்து துறவியிடம் கூறிக் கொண்டு வந்தேன். நாங்கள் செல்ல வேண்டிய மடத்தில் காலை 10 மணி என சந்திப்புக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். நான் எப்போதும் மணிக்கு 40 லிருந்து 45 கி.மீ வேகம் மட்டுமே வாகனம் ஓட்டக் கூடியவன். எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு 10 நிமிடம் முன்பாகவே வந்து சேர்ந்து விட்டோம். சந்திப்பு சிறப்பாக இருந்தது. ஒரு மணி நேரம் அங்கு இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். இப்போது வண்டியை துறவி ஓட்டினார். அவரது வாகன இயக்குதிறன் சிறப்பாக இருந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் பணிகள் குறித்து அவரிடம் கூறினேன். சேத்தியாதோப்பில் அவரை இறக்கி விட்டு விட்டு நான் ஊருக்குப் புறப்பட்டேன். அவர் பேருந்தில் கடலூருக்குப் பயணமானார்.