அமைப்பாளர் கல்லூரியில் படித்த போது நீல நிறத்தில் ஒரு தோள் பை வைத்திருந்தார். நீல நிற ஜீன்ஸ் துணியில் தயாரான தோள் பை அது. அதில் இரண்டு தோல்வார் இருக்காது. ஒரு தோல்வார் தான் இருக்கும். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை கல்லூரி மாணவர்களால் அதிகம் உபயோகிக்கப்பட்டன. இரண்டு தோல்வார் உள்ள பைகள் அதற்கு முன்னும் இருந்தன ; அப்போதும் இருந்தன ; இப்போதும் இருக்கின்றன. அமைப்பாளர் இப்போது தன்னிடம் ஒரு தோள் பை இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறார். இப்போது அவர் கைவசம் நான்கு பணிகள் இருக்கின்றன. தினமும் அவற்றுக்காக ஏதேனும் செயல் செய்து கொண்டிருக்கிறார். நாளின் பெரும்பொழுதை அப்பணிகள் எடுத்துக் கொள்கின்றன ; அத்துடன் மன ஓட்டத்தின் பெரும் பகுதியையும் அவை எடுத்துக் கொள்கின்றன. அன்றைய தினம் என்ன செய்தோம் என எழுதி வைத்துக் கொள்வது நல்லது என அமைப்பாளருக்குத் தோன்றும். எனவே நான்கு நோட்டு புத்தகங்கள் அல்லது நான்கு பழைய எழுதாத டைரிகளை அந்த பையில் வைத்துக் கொள்ளலாம் என அமைப்பாளர் எண்ணினார். அமைப்பாளர் சட்டைப்பையில் எப்போதும் பேனா இருக்கும். தேவையெனில் அந்த தோள் பையிலும் ஒரு பேனா ஒரு பென்சில் போட்டு வைக்கலாம். 15மீ டேப் அந்த பையில் போட்டுக் கொள்ளலாம். கல்லூரி மாணவராயிருந்த போது பையில் சயிண்டிஃபிக் கால்குலேட்டர் இருக்கும். இப்போது வேண்டுமானால் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும். தோள் பை தயாராக இருப்பதைக் கண்டாலே காலைப் பொழுதில் ஏதேனும் பணி செய்ய வேண்டும் என்று தோன்றும். மடிக்கணினியை அமைப்பாளர் மேஜைக்கணினி போல் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர். எனவே மடிக்கணினியை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை. அலைபேசியை அந்த பைக்குள் போட்டு விடலாம் ; சுவிட்ச் ஆஃப் செய்து போட்டு விட்டால் உத்தமம். எவருக்கேனும் பேச வேண்டும் என்றால் ஆன் செய்து பேசிக் கொள்ளலாம். தோள் பையில் இருக்கப் போகும் அம்சங்கள் இவைதான் என முடிவு செய்த பின் அமைப்பாளர் ஊரில் இருக்கும் பை விற்பனைக் கடைக்குச் சென்றார்.
ஒற்றை தோல்வார் கொண்ட தோள் பை வேண்டும் என்று கேட்டார். ‘’சார் ! நீங்க சொல்ற மாடல்லாம் ரொம்ப ரொம்ப பழசு. இப்ப அந்த மாடல் வரது இல்ல’’ என்றார். ‘’நீங்க பை தச்சு தானே சேல் பண்றீங்க. நான் சொல்ற மாடல்ல தச்சு கொடுங்க’’. கடைக்காரர் யோசித்தார். ‘’சார் ! ரெண்டு தோல்வார் இருக்கற பைய வாங்கிக்கங்க. ஒரு தோல்வார் மட்டும் பயன்படுத்துங்க.’’ அமைப்பாளர் ஒரு பொருளை வாங்குவதை எவ்வளவு தள்ளி போட முடியுமோ அவ்வளவு தள்ளி போடுவார். ஆந்திரப் பயணத்தின் போது அவர் வாங்கிய கைத்தறித் துணிப்பை ஒன்று அவர் நினைவுக்கு வந்தது. நான்கு டைரி, ஒரு டேப், ஒரு கால்குலேட்டர், ஒரு வாட்டர் பாட்டில் வைக்க அந்த பை போதும். இரு சக்கர வாகனக் குலுக்கலில் வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் கசிந்தால் காகிதங்கள் ஈரமாகும். அது மட்டும் தான் யோசிக்க வேண்டிய விஷயம். மானசீகமாக அந்த கைத்தறிப்பையில் பொருட்களை வைத்து அந்த பையுடன் பயணிப்பதை எண்ணிப் பார்க்கத் துவங்கி விட்டார்.
’’எவ்வளவு ரூபாய் ?’’
‘’520 சார் . நீங்க 480 கொடுங்க’’
’’நாளைக்கு காலைல வந்து வாங்கிக்கறன்’’ அமைப்பாளர் புறப்பட்டார். புறப்படும் போது கடைக்காரரிடம் கேட்டார்.
‘’நான் முன்னாடி இந்த கடைக்கு வரும் போது வேற ஒருத்தர் இருப்பாரு’’
முன்னாடி என அமைப்பாளர் சொன்னது 25 ஆண்டுகளுக்கு முன்பு.
கடைக்காரர் சொன்னார். ‘’நான் அவரோட மகன் தான் சார். அப்பா ஊருக்குப் போயிருக்காங்க’’.
அடுத்த முறை அமைப்பாளர் இந்த கடைக்கு வரும் போது முன்னாடி இருந்தவரின் பேரன் கூட கடையில் இருக்கலாம்!