Saturday, 30 August 2025

ஒரு யோசனை

இன்று சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளைஞர் என்னிடம் ‘’லிஃப்ட்’’ கேட்டார். வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். 

‘’தம்பி ! லிஃப்ட் கேட்கும் போது டூ-வீலர் 100 மீட்டர் தூரத்தில இருக்கும் போதே கேட்டுடுங்க. அப்ப தான் ஸ்லோ பண்ணா நீங்க நிக்கற இடத்துக்கிட்ட நிறுத்த முடியும். தாண்டி கொஞ்ச தூரம் போய்ட்டா அப்புறம் லிஃப்ட் கொடுக்க முடியாதில்லையா?’’ என்றேன். 

இளைஞர் ஆமோதித்தார். ‘’இப்ப நேஷனல் ஹை வே ரொம்ப பக்காவா இருக்கு சார்! அதனால வாகனம் எல்லாமே வேகமாத்தான் போகுது’’.

‘’நீங்க என்ன வேலை செய்யறீங்க?’’ என்று கேட்டேன்.

அவர் அந்த பிராந்தியத்தின் பெரிய பிரபலமான பள்ளி ஒன்றைக் குறிப்பிட்டார். அதில் பள்ளி வேனின் ஓட்டுநராக இருப்பதைக் கூறினார். 

‘’உங்களோட ஒர்க்கிங் ஹவர்ஸ் என்ன தம்பி ?’’

’’காலையில 7.30க்கு வண்டியை எடுப்பன் சார். 9.15க்கு ஸ்டூடண்ட்ஸை அழச்சுக்கிட்டு ஸ்கூலுக்கு வந்திடுவன். அப்புறம் சாயந்திரம் 4 மணிக்கு ஸ்டூடண்ட்ஸ்ஸை ஏத்திக்கிட்டு கிளம்புவன். 5.45க்கு எம்ப்டி வண்டியை ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டுடுவன். இது தான் சார் வேலை’’

’’இந்த வேலைக்கு உங்களுக்கு எவ்வளவு சேலரி தம்பி?’’

‘’மாசம் 15,000 ரூபாய் சார். இது இல்லாம தினமும் 100 ரூபாய் கொடுப்பாங்க’’

‘’எத்தனை டிரைவர் இருக்கீங்க?’’

‘’நாப்பது பேர் இருக்கோம் சார்’’

‘’நாப்பது பேரா?’’

‘’ஆமாம் சார்’’

’’வேலை நேரம் போக மீதி நேரம் என்ன செய்வீங்க?’’

‘’எங்களுக்கு தனியா ரூம் இருக்கு சார். அதுல இருப்போம். டி.வி பார்ப்போம். செல்ஃபோன் பார்ப்போம்’’

‘’நீங்க காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் உங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கறாப் போல ஏதாவது செய்யலாமே?’’

‘’என்ன சார் செய்ய முடியும்?’ நாங்க டிரைவர்ஸ். எங்களுக்கு வேன் கார் ஓட்டத்தானே தெரியும்’’

அவர்களுக்கு என்ன பணி பரிந்துரைக்கலாம் என யோசித்தேன். 

‘’தம்பி இப்ப பேண்ட் சட்டை தைக்கணும்னா கொஞ்சம் டெக்னிக்கலா தெரிஞ்சிருக்கணும். ஆனா துணிப்பை தைக்க அந்த அளவு டெக்னிக்கல் நாலெட்ஜ் தேவையில்ல. ஒரு பத்து தையல் மெஷின் வாங்கிப் போட்டு துணிப்பை தைக்கலாம். நீங்க 40 பேர் இருக்கீங்கன்னா ஆளுக்கு ஒரு மணி நேரம் ஷிஃப்ட் மாதிரி வச்சுக்கலாம். 40 பேருக்கும் 4 மணி நேரத்துல வாய்ப்பு கிடைக்கும்.’’

‘’நீங்க சொல்றது நல்ல ஐடியா தான் சார்’’

‘’ஸ்கூல்ல நிறைய இடம் இருக்கும்ல . அதுல ஒரு போர்ஷன்ல இயற்கை முறைல காய்கறிகள விளைவிக்கலாம். அந்த வேலைல ஒரு பத்து டிரைவர்ஸ் ஈடுபடலாம்’’

‘’இதுவும் நல்ல யோசனை சார்’’

‘’இப்ப நீங்க 40 பேர் இருக்கீங்க. உங்களுக்கான மதிய சாப்பாட்டை உங்கள்ல 10 பேர் சேர்ந்து சமைக்கலாம்.’’

‘’நீங்க நிறையா யோசிக்கறீங்க சார்’’

‘’ஸ்கூல்ல ஒரு போர்ஷன்ல நர்சரி போட்டு பழ மரக்கன்றுகள் - கொய்யா, பலா, நாவல், எலுமிச்சை - செடியா தயார் செஞ்சு விக்கலாம்’’

‘’இதுவும் நல்லா இருக்கு சார்’’

’’எனக்கு இன்னும் வேற யோசனை வந்தாலும் சொல்றன். ‘’

‘’நாள் முழுக்க ஒக்காந்து டி.வி பாத்துக்கிட்டு இருக்கறதுக்கு கூடுதலா வருமானம் வர்ர மாதிரி ஏதாவது செய்தால் நல்லது தான் சார்’’

‘’இந்த மாதிரி ஏதாவது புதுசா யோசிச்சு செஞ்சா உங்க ஸ்கூலோட குட் வில் அதிகமாகும். தமிழ்நாட்டுல இருக்கற மத்த ஸ்கூல்களுக்கு உங்க ஸ்கூல் ஒரு மாடலா ஆகும்.’’

‘’நீங்க சொல்றது உண்மை தான் சார்’’

‘’நான் உங்க ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட்டுக்கு இந்த விஷயம் பத்தி ஒரு லெட்டர் எழுதரன். உங்க ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட் என்னோட ஃபிரண்டோட ஃபிரண்டு. அவர் கிட்ட சொல்லி நேராவும் சொல்ல சொல்றன்’’

இளைஞர் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறக்கி விட்டு விட்டு எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.