நான் கல்லூரி மாணவனாயிருந்த போது இலங்கையில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும் தாய்லாந்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த அமைதி நடவடிக்கைகளை பெரும் அக்கறையுடன் முன்னெடுத்தவர் எரிக் சோல்ஹிம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையைச் சந்தித்து பலமுறை கிளிநொச்சியில் பேசினார் எரிக். அப்போது அந்த சந்திப்பு குறித்த செய்திகள் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அமைதி உடன்படிக்கை ஏற்படும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. தான் ஈடுபட்ட பெரும்பாலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஆக்கபூர்வமான உடன்பாடுகளை உருவாக்கிய செயல் திறன் எரிக் சோல்ஹிம் அவர்களுக்கு இருந்தது. பயங்கரவாதத்தை தனது அணுகுமுறையாய்க் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இலங்கையின் சாமானிய தமிழ் மக்களின் அமைதியான வாழ்வை தங்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தங்கள் அமைப்பின் நலன்களே முதன்மையாக இருந்தன. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இலங்கையில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் மூண்டது. இலங்கையின் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளானார்கள். விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தையில் சமாதான உடன்படிக்கைக்கு விடுதலைப் புலிகள் வந்திருந்தால் இலங்கை தமிழ் மக்களுக்கு இத்தனை துயர் இருந்திருக்காது என்பதை எவரும் யூகித்து உணர முடியும்.
எரிக் சோல்ஹிம் நேற்று சிதம்பரம் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளுக்கு வருகை புரிந்தார் என்று இன்று அறிந்தேன். அவர் சிதம்பரம் வருகிறார் என்று தெரிந்திருந்தால் நேற்று அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு பார்வையாளனாகச் சென்று கலந்து கொண்டிருப்பேன். சாமானிய தமிழ் மக்களின் வாழ்வில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் செயலாற்றிய ஒருவருக்கு மதிப்பளிக்கும் விதமாக.
எரிக் சொல்ஹிம் இப்போது உலகெங்கும் நிகழும் பல்வேறு சூழியல் சார்ந்த முன்னெடுப்புகளில் பங்கெடுக்கிறார். செயல்படுகிறார்.