பொறியியல் பட்டம் பெற்றவுடன் ஓரிரு ஆண்டுகளில் சுயதொழில் புரிய வேண்டும் என்று முடிவு செய்து கட்டுமானத் தொழிலுக்குள் வந்தேன். அப்போது நான் இளைஞன். இளமைக்கேயுரிய உத்வேகமும் நம்பிக்கைகளும் கொண்டவன். இன்று அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் போது தளரா ஊக்கம் கொண்டிருந்த அந்த மனநிலை இனியதாகவே இப்போதும் இருக்கிறது. லௌகிக வாழ்வு என்பது நாம் பலருடன் இணைந்திருப்பது. அதில் எப்படி ‘’நான்’’ என்பது வலுவான ஒரு தரப்போ அதே போல் ‘’பிறர்’’ என்பதும் வலுவான தரப்பு. இதனை விரிவுபடுத்தி நான் என்பது ‘’ஒன்று’’ எனில் பிறர் என்பது மொத்த உலக மக்கள் தொகையான ‘’எழுநூறு கோடி’’ என்றும் கொள்ள இயலும். இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால் பிறர் என்பது ‘’ஒன்றிலிருந்து எழுநூறு கோடி’’ என்றும் கொள்ளலாம். லௌகிக வாழ்வில் நாம் இந்த கணத்தில் நமக்கு எதிரில் இருக்கும் ஒருவரையே எதிர்கொள்கிறோம். எழுநூறு கோடி பேரையும் எதிர்கொள்வதில்லை. இருப்பினும் காலச்சக்கரத்தில் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நாம் மனிதர்களை அதிக எண்ணிக்கையில் சந்தித்துக் கொண்டேயிருக்கிறோம்.
கட்டுமானத் தொழிலில் நான் எதிர்கொள்ள வேண்டியவர்கள் வாடிக்கையாளர்கள்,தொழிலாளர்கள்,ஹார்டுவேர் கடைக்காரர்கள் ஆகியோர் மட்டுமே. ஒரு கடைக்காரருக்கு வாடிக்கையாளர் அடிக்கடி வருகிறார். பால் கடை என்றால் தினமும். மளிகைக்கடை என்றால் மாதம் ஒருமுறை. துணிக்கடை என்றால் ஆறு மாதத்துக்கு ஒருமுறை. செருப்புக் கடை என்றால் ஆண்டுக்கு ஒரு முறை என. ஆனால் கட்டுமானத் தொழிலில் ஒரு வாடிக்கையாளர் ஒருமுறை மட்டுமே வருவார். 90 சதவீதம் அவ்வாறே. இரண்டாம் முறை ஒரு வாடிக்கையாளர் வருவது என்பது மிகவும் அரிதானது. என்ன காரணம் என்றால் ஒருவர் ஒரு வீடு கட்டுகிறார் என்றால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள மாட்டார். தனது 40 வது வயதில் ஒருவர் வீடுகட்டுகிறார் என்றால் அடுத்த 30 ஆண்டுகளில் அவருடைய இரண்டு தலைமுறை உருவாகி வந்து விடும். அவர்கள் இருக்கும் வீட்டைப் பெரிதாக்கிக் கட்டினாலோ அல்லது இடித்துக் கட்டினாலோ தான் உண்டு.
1000 சதுர அடியிலிருந்து 1200 சதுர அடி வரை பரப்பு கொண்ட வீடுகளையே நான் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். கட்டுமானத் துறையில் ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு தன்மையும் செயல்முறையும் கொண்டவை. ஒரு பணிக்கும் இன்னொரு பணிக்கும் சிறு மாற்றங்களிலிருந்து பெருமாற்றங்கள் வரை இருக்கும். மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களையே நான் எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்து கொண்டிருந்த விதமான பணிகளில் ‘’பில்டிங் பிளான்’’ என்பது மிக மிக முக்கியமானது. எங்கள் பணி என்பது வாடிக்கையாளர் ஒத்துக் கொண்ட ‘’பில்டிங் பிளான்’’ஐ ஸ்தூலமாக மண்ணில் கட்டிடமாக எழுப்பிக் கொடுப்பதே. பிளான் இறுதி செய்யப்பட்டவுடன் நாங்கள் அதனை நோக்கி செல்லத் துவங்குவோம். காகிதத்தில் வரையப்பட்ட பிளானை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். வேறு ஏதும் சேர்க்கலாம். ஆனால் பிளான் இறுதி செய்யப்பட்டு பணி தொடங்கினால் அந்த நிலையில் மாற்றம் செய்தால் அது சரிப்பட்டு வராது. அது எங்களுக்கும் ஊறு ; வாடிக்கையாளருக்கும் ஊறு ; கட்டிடத்துக்கும் ஊறு.
ஒரு மிடில் கிளாஸ் வாடிக்கையாளருக்கு 1000 சதுர அடி 2 BHK அல்லது 3 BHK வீட்டின் பிளான் அளிக்கிறோம் என்றால் எல்லா பிளானும் வாஸ்து சாஸ்திரப்படி அமைய வேண்டும். எங்கள் தொழிலில் வாஸ்து சாஸ்திரம் பார்க்காமல் கட்டப்படும் வீடுகள் ஆயிரத்துக்கு ஒன்று கூட கிடையாது. ஹிந்துக்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் கூட வாஸ்துப்படியே வீடு கட்டுவார்கள். வாஸ்து 100 சதவீதம் இருக்க வேண்டும் என கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்டுக் கூறுவார்கள். எனது நண்பர் ஒருவர் நாத்திக அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்தார். அவர் நண்பரிடம் வாஸ்து பக்காவாக இருக்க வேண்டும் என மிக வலியுறுத்திக் கூறியிருக்கிறார். 1000 சதுர அடி வீடு என்றால் ஹால், 2 பெட்ரூம், சமையலறை, பூஜை அறை ஆகியவை அதில் முக்கியமானவை. கட்டிடப் பரப்பில் 85 சதவீதத்தை அவையே எடுத்துக் கொள்ளும். வீடு எந்த திசையைப் பார்த்து இருந்தாலும் வட கிழக்கில் ஆழ் துளைக் கிணறு இருக்க வேண்டும் ; தென் மேற்கில் மாஸ்டர் பெட்ரூம் இருக்க வேண்டும் ; தென் கிழக்கில் சமையலறை இருக்க வேண்டும் ; வட கிழக்கில் பூஜை அறை இருக்க வேண்டும் என்பது கட்டாயம். எனவே கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளுக்கு வாஸ்து படியான பிளான் இப்படித்தான் இருக்கும் - இப்படித்தான் இருக்க முடியும் என்பதே நிலை. மாடிப்படி போர்டிகோ ஆகியவை எங்கே அமைகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு பிளானும் இறுதி வடிவம் பெறும்.
மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தன்மை உண்டு. கட்டுமான அலுவலகத்திற்கு வருகை புரிந்து நம் எதிரில் அமர்ந்து தான் கட்ட உத்தேசித்திருக்கும் வீட்டின் தேவைகளைக் கூறி தன்னால் எவ்வளவு தொகை வீட்டுக்காக செலவு செய்ய முடியும் எனக் கூறும் வாடிக்கையாளர் எதிரில் அமர்ந்திருக்கும் ஒரு நபர் மட்டும் அல்ல ; அவர் தனது மனைவி, மகன், மகள், தந்தை, தாய், மாமனார், மாமியார், மைத்துனர், சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, சித்தி மருமகன், பெரியப்பா மருமகள் ஆகியோரின் பிரதிநிதி. மேற்படி நபர்களின் இயல்பும் சுபாவங்களும் நாம் போடப்போகும் பிளானிலும் கட்டப்போகும் கட்டிடத்திலும் தாக்கம் ஏற்படுத்தும். 90 சதவீத உறவினர்கள் தங்களுக்குள் பொறாமையும் பூசலும் கொண்டிருப்பார்கள். அவர்களின் பூசல் பொறாமையும் கட்டிடப் பணியில் பாதிப்பை உண்டாக்கும். பணி நடக்கும் போது வருகை புரியும் உறவினர்கள் இதை இப்படி மாற்றிச் செய்யுங்கள் எனக் கூறி விடுவார்கள். அது கட்டிடப் பணியின் ஒருமையை பாதிக்கும்.
வாடிக்கையாளரிடம் கட்டிட பிளானை அளிக்கும் போது தொழில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கீழ்க்கண்டவாறு கூறி விடுவார்கள் : ‘’சார் ! 1000 சதுர அடி 2 bhk பிளான் இது. கிச்சன், பூஜா, மாஸ்டர் பெட்ரூம் இதெல்லாம் வாஸ்து படி ரொம்ப முக்கியம். அதெல்லாம் கரெக்டா பிளேஸ் ஆகியிருக்கு. நீங்க ரெண்டு நாள் மூணு நாள் பிளானை கையில வச்சுகிட்டு நல்லா யோசிங்க. ஃபேமிலி மெம்பர்ஸ்க்கும் பிளானைக் கொடுங்க. உங்க ரிலேட்டிவ் எல்லாருக்கும் பிளானை அனுப்பிடுங்க. இப்ப இந்த ஸ்டேஜ்ல பிளான் மாத்தறதுன்னா எப்படி வேணாலும் மாத்திடலாம். பில்டிங் ஒர்க் ஆரம்பிச்சுட்டா மாத்தறது கஷ்டம். ரிலேட்டிவ்ல நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கறவங்க இருப்பாங்க. நீங்க நல்லா இருக்கறது பிடிக்காம இருக்கறவங்களும் இருப்பாங்க. நாங்க எங்க எக்ஸ்பீரியன்ஸ்ல நிறைய பாத்துட்டோம். நீங்க எங்க கஸ்டமர். நாங்க நீங்க சொல்ற படி வேலை செஞ்சு கொடுக்க கடமைப்பட்டுருக்கோம். உங்களுக்கு மட்டும்தான் கடமைப்பட்டிருக்கோம். இத்தனைக்கும் மேல கட்டிடம் எழும்பினதும் ஏதாவது சேஞ்ச் செய்ய முடியுமான்னு கேட்டா சேஞ்ச் செய்யலாம். நம்ம நாட்டுல ஒரு முதலமைச்சர் சொன்னாங்கன்னு சட்டசபை கட்டிடத்தை ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாவும் தலைமைச் செயலகக் கட்டிடத்தை சைல்ட் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாவும் மாத்தலையா அந்த மாதிரி மாத்த முடியும். ஆனா அப்படி ஒரு ஸ்டேஜ் வராம பாத்துக்கங்க’’ . இதன் பிறகும் முட்டி மோதி திட்டமிட்ட படியோ அல்லது திட்டமிடலைத் தாண்டியோ கட்டிடம் எழும்பும்.
பணியிடத்தில் தொழிலாளர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதை தொழிலுக்கு வந்த நாட்களில் அவதானிப்பேன். சிறிய விதம் தொடங்கி பெரிய அளவு வரை ஒத்துழையாமையையே அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அன்றன்றைய நாளின் சம்பளம் அன்றன்றுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். சம்பளம் முடிவு செய்யப்படுகிறது எனில் பணி நேரமும் முடிவு செய்யப்பட வேண்டும். கட்டிடப் பணி என்பது காலை 9 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை செய்ய வேண்டிய பணி. அதாவது பகல் நேரத்தில் செய்ய வேண்டிய பணி. அதன் பின் கட்டு வேலையோ பூச்சு வேலையோ 10 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் செட் ஆக வேண்டும். அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணி செய்ய வேண்டும். அதனை காலை 7 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரை கூட செய்யலாம். காலை 10 மணிக்கு வருவார்கள். மாலை 5.30க்கு வேலையை முடித்து விடுவார்கள். இரு தேனீர் இடைவேளை என்று 45 நிமிடம் போய் விடும். உணவு இடைவேளைக்கு 1 மணி நேரம் போய்விடும். ஐந்தரை மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரம் வரை மட்டுமே வேலை நடக்கும். இதில் பணம் பிரதான விஷயம் இல்லை . 8 மணி நேரம் செய்ய வாய்ப்புள்ள பணியை 5.30 மணி நேரம் செய்தால் ஆறு மாதத்தில் நடக்க வேண்டிய வேளை முடிய எட்டு மாதம் ஆகி விடும். நடுவில் மழைக்காலம் வந்து விட்டால் மேலும் ஒரு மாதம் கூடி விடும். ஆறு மாதத்தில் முடிய வேண்டிய பணி 9 மாதத்தில் முடியும். இவை எதனைப் பற்றியும் பணியாளர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். என் பணிகளில் பணியாளர்கள் கடமை உணர்ந்து செயலாற்றுபவர்கள் எனினும் சிறு அளவில் இந்த சிக்கல் இருக்கவே செய்யும். கொத்து வேலையும் கம்பி வேலையும் பொறியாளர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும். கார்பெண்டர் , பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், டைல்ஸ் ஒட்டுதல், பெயிண்ட் ஆகிய வேலைகள் ஒப்பந்தத் தொழிலாளர் இயல்புகளைச் சேர்ந்தவை. பாரதி பணியாளர் இயல்பு குறித்து கண்ணன் - என் சேவகன் என்ற கவிதையில் கூறுகிறார்.
தொழிலாளரிடம் ஒரு இயல்பு உண்டு. கட்டுமானப் பொருள் ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் ‘’சார் ! நான் போய் வாங்கிட்டு வரட்டுமா ‘’ என்று கேட்பார்கள். அவர்கள் ஒன்றைச் செய்யட்டுமா என்று கேட்டால் அதில் அவர்களுக்கு ஏதோ ஒரு சகாயம் இருக்கிறது என்று பொருள். பொருட்களின் விலை ரூ.100 என்றால் அந்த கடைக்காரர் பணியாளர் வந்திருக்கிறார் என்றால் அந்த பொருளின் விலையை ரூ.110 என்று பில் போட்டு பணியாளருக்கு 5 ரூபாய் கொடுத்து விட்டு தான் 5 ரூபாய் கூடுதலாக எடுத்துக் கொள்வார். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருள் என்றால் அதே வீதத்தில் ரூ.1100க்கு பில் போட்டு ஐம்பது ரூபாய் தனக்கும் 50 ரூபாய் பணியாளருக்கும் என்று பிரிந்து விடும். இவ்விதம் நிகழும் என்பது பொறியாளர்களாகிய எங்களுக்குத் தெரியும் என்பதால் எந்த பொருளையும் வாங்க தொழிலாளரை அனுப்பவே மாட்டோம். இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையுமே இந்த கேள்வி எங்களிடம் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த சூழ்ச்சி எங்களுக்குத் தெரியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அப்படி இருந்தும் அதனைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள். இங்கிலாந்து பிரதமராக மார்கரெட் தாட்சர் இருந்த போது அவரைக் கொல்ல ஐ.ஆர்.ஏ என்னும் தீவிரவாத அமைப்பு ஒரு பார்சலில் வெடிகுண்டை அனுப்பியது. அந்த கொலை முயற்சியில் தாட்சர் மயிரிழையில் உயிர் தப்பினார். அப்போது அந்த தீவிரவாத அமைப்பு ‘’உங்கள் பிரதமரைக் காப்பாற்ற நீங்கள் ஒவ்வொருமுறையும் ஜெயிக்க வேண்டும் ; உங்கள் பிரதமரைக் கொல்ல நாங்கள் ஒருமுறை ஜெயித்தால் போதும்’’ என்று கூறினார்கள்.
பணியாளர்கள் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் எனில் அவர்கள் சொல்வதற்கு எதிர்திசையில் யோசித்தால் அதில் அவர்கள் அடைய விரும்பும் லாபம் என்ன என்பது தெரிந்து விடும். இதனை விரிவாக்கி ஒருவர் கூறும் கூற்றை இரண்டாகப் பிரித்து முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சென்று ஆய்ந்து தெளியும் முறையை அறிந்து கொண்டேன்.
‘’முள்ளும் மலரும்’’ என்ற படத்தில் ஒரு காட்சி வரும். என்ஜினியரான சரத் பாபு தனது பணியாளர் காளியைப் பற்றி இன்னொரு பணியாளரிடம் விசாரிப்பார். அந்த பணியாளரின் கூற்று வாய்ஸ் ஓவரில் நிகழ அவர் கூறும் காளியின் இயல்புகள் காட்சிகளாக திரையில் ஓடும். அபிப்ராயம் கேட்கப்படும் பணியாளர் சில விஷயங்களை சரியாகச் சொல்வார். பல விஷயங்களை மாற்றி பொய்யாகச் சொல்வார். உதாரணத்துக்கு காளி தன் தங்கைக்கு சாப்பாடு போடாமல் பட்டினி போடுபவர் என அவர் கூறிக் கொண்டிருக்கும் போது காளி தன் தங்கைக்கு பிரியமாக உணவு ஊட்டும் காட்சி திரையில் ஓடும். இயக்குநர் மகேந்திரனின் சிறப்பான உத்தி அது. பணியாளர் குறைவான உண்மைகளையும் அதிகமான பொய்களையும் கூறி முடித்த பின்னர் ‘’சார் ! எனக்கு ஒரு தம்பி இருக்கான். டிப்ளமா படிச்சுருக்கான். காளியை வேலைல இருந்து நீக்கிட்டா என் தம்பிக்கு அந்த வேலையைக் கொடுங்க.’’என்பார். என்ஜினியர் ‘’இங்க டிப்ளமா படிச்ச தம்பி இல்லாத பணியாளர் யாராவது நம்ம கம்பெனில இருகாங்களா’’ என்று கேட்பார். பணியாளர் யதார்த்தமாக ‘’ஏன் சார் கேட்கறீங்க?’’ என்பார். ‘’எனக்கு காளியைப் பற்றிய உண்மையான விபரங்கள் வேணும்’’ என்பார் என்ஜினியர்.