இன்று மதியம் தில்லியிலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைக் குறித்து கேள்விப்பட்டு அவர் என்னைத் தொடர்பு கொண்டார். நண்பர் தில்லியில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஐ ஏ எஸ் தேர்வு நடைபெறும் எனினும் நண்பர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அந்த தேர்வினை எழுதுகிறார். ஒரு தேர்வாளர் இத்தனை முறை தான் தேர்வு எழுத வேண்டும் என அந்த தேர்வுமுறையில் நிபந்தனை உள்ளது. தனது முயற்சிகளின் எண்ணிக்கையை சேமித்துக் கொள்வதற்காக சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதுவது உண்டு. இரண்டு ஆண்டுமே தொடர் தயாரித்தல்களில் இருப்பார்கள். தேர்வு எழுதாத ஆண்டில் கூட நிகழும் தேர்வுகளின் வினாத்தாள்களுக்கு பதில் எழுதிப் பார்த்து பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்களைக் கொண்டு திருத்திக் கொண்டு தங்கள் நிலையை சுயமதிப்பீடு செய்து கொள்வார்கள். இது ஒரு யுக்தி. பலபேருக்கு உதவியிருக்கிறது. அரசாங்கம் என்பது மக்களிடமிருந்து வரி வாங்கும் ஓர் அமைப்பு. ஆதிகாலத்திலிருந்து அவற்றின் மாறாத பணி அதுவே. அரசாங்கத்துக்கு சீராக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் நாட்டில் பலவிதமான தொழில்கள் நல்லவிதமாக நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால் மக்களிடம் நல்ல வருவாய் இருக்கும். அந்த வருவாயின் ஒரு பகுதி அரசுக்கு வரியாக வரும். அதைக் கொண்டு அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளித்து அரசாங்கத்தை சீராக நடத்திச் செல்லும். ஜனநாயக அரசுக்கு தன்னை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சாமானிய மக்களுக்கு உகந்த சிலவற்றைச் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. ஜனநாயக அரசியலில் இந்த அம்சம் தவிர்க்க முடியாதது. அரசாங்கத்துக்கு அதிக வரி செலுத்துபவர்கள் தொழில் புரிபவர்கள். பெருந்தொழில்களிலிருந்து சிறு தொழில் புரிபவர்கள் வரை. தனக்கு அதிக வருவாய் அளிக்கிறார்கள் என்பதற்காக தொழில் புரிபவர்களுக்கு மட்டும் அரசு சிந்திக்க முடியாது ; தனக்கு வரி அதிகம் கொடுக்காத சாமானிய மக்களுக்காகவும் அரசு சிந்திக்க வேண்டும்.
1970களில் நாட்டை இந்திரா சர்க்கார் ஆண்டு கொண்டிருந்தது. ‘’கரீஃபி கடாவ்’’ என முழங்கியது அந்த அரசு. வறுமையை ஒழிப்போம் என்பது அதன் பொருள். அந்த அரசின் முக்கிய வருவாய் என்பது சாமானிய மக்கள் அளிக்கும் வரியே. அதாவது ஒரு சாமானியன் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறான் என்றால் அதில் இருபத்து ஐந்து பைசா அரசுக்கு வருவாயாகச் செல்லும். இவ்விதமாக சாமானியனிடமிருந்து வாங்கிய இருபத்து பைசா ஐம்பது பைசாவை தனது வருமானமாக வைத்துக் கொண்டு கிடைத்த சொற்ப வரி வருவாயில் நாட்டை நடத்திக் கொண்டிருந்தது இந்திரா சர்க்கார். 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் சர்க்கார் ஆட்சிக்கு வந்தது. வரி விதிப்பில் அனேக மாற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களின் வழியாகவே நாட்டின் வரி வருவாய் கூடியது. இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். அதாவது குறைவான வரி வருவாயுடன் தள்ளாடிக் கொண்டிருந்த இந்திராவின் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார்தான். வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொண்ட நரசிம்ம ராவ் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014ம் ஆண்டில் பதவியேற்றதும் ஓரிரு ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. கடந்த 11 ஆண்டுகளாக அந்த வரி விதிப்பு நாட்டுக்கு அளிக்கும் வருவாய் பங்களிப்பு அளப்பரியது. நாட்டின் வருவாய் பெருகுவதற்கு ஏற்ப அரசு சாமானிய மக்களுக்காகத் தீட்டும் திட்டங்களும் புதுப்புது வடிவங்கள் பெறுகின்றன. சாமானிய மக்கள் ஏழ்மையுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் சாமானிய மக்கள் குறைந்தபட்ச பொருளியல் பாதுகாப்புடன் குறைந்தபட்ச வசதிகளுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. நிர்வாக பாணி இரண்டுக்கும் வேறுவேறானவை. ஜனநாயக அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்து செயல்பட வேண்டிய நிலையில் இருப்பது அதிகார வர்க்கம். ஐ ஏ எஸ் அதிகாரிகள் அந்த இடத்திலேயே இருக்கிறார்கள்.
என்னைத் தொடபு கொண்ட இளைஞர் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் தன்னார்வம் காரணமாக ஈடுபடுகிறார். பருவநிலை மாற்றம் , கார்பன் உமிழ்வு ஆகியவை அவருக்கு பிடித்தமான துறைகள். காலநிலை மாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை தமிழக மாவட்டங்களிலேயே மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். இங்கே மிக அதிகமாக நெல் வயல்கள் மட்டுமே இருப்பதால் மரங்களின் பரப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே இருப்பதை சுட்டிக் காட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் 100 பங்கு கார்பனை உமிழ்ந்தால் 1 பங்கு கார்பனை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது என்னும் புள்ளிவிபரத்தை சுட்டிக் காட்டினார். வேதியியல் தொழிற்சாலைகள் இருக்கும் மாவட்டங்களில் கூட இந்த அளவு நிலை இல்லை என்பது கவனத்துக்குரியது என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்பதைக் கூறினார். எனக்கு இந்த புள்ளிவிபரங்கள் புதியவை. நான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டேன்.
’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்னும் அடிப்படை அலகை செயல்களமாய்க் கொண்டு செயல்பட்டு வருவதை தனது வழக்கமாய்க் கொண்டுள்ளது. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். ‘’காவிரி போற்றுதும்’’ நம்பிக்கையுடன் செயலாற்றுகிறது.