Tuesday, 7 October 2025

தவிர்க்க வேண்டிய மூன்று

 முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு சமூக சேவகரைச் சந்தித்தேன். அப்போது அவருக்கு 70 வயது இருக்கும். தனது வாழ்நாளை முழுமையாக சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர். சமூகப் பணி என்பது மனிதர்களை இணைக்கும் பணி ; ஒற்றுமையுடன் மனிதர்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டும் அதிகப்படுத்திக் கொண்டும் இருக்கும் பணி. மனிதர்களை தினமும் சந்திப்பதும் அவர்களிடம் உரையாடுவதும் அவர்கள் மனம் இயங்கும் விதத்தைக் கவனிப்பதும் அவர்கள் ஐயங்களுக்கு விடை பகர்வதும் சமூகப் பணியின் பெரும்பான்மையான அங்கம். அவர் ஒரு விஷயம் சொன்னார். சக மனிதர்களுடனான உரையாடல்களில் தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்களை அவர் சொன்னார். அவை 1. அரசியல் 2. சினிமா 3. விளையாட்டு. இவற்றைக் குறித்து பேசாமல் விவாதிக்காமல் இருப்பது பயன் தரக்கூடியது என்று கூறினார். பல்லாண்டுகள் அனுபவத்தின் விளைவாக அவர் பரிந்துரைத்த விஷயம் அது. அது உபயோகமானது என்றே நான் நினைக்கிறேன். 

என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து இந்த விஷயங்களை இவ்விதம் புரிந்து கொண்டேன். அரசியல் குறித்து உரையாடும் இரண்டு பேர் இரண்டு விதமான நிலைப்பாடு எடுத்து விடுவார்கள். உரையாட உரையாட தங்கள் தரப்பில் இருவருமே தீவிரம் கொள்ளத் தொடங்குவார்கள். அந்த உரையாடல் அவர்களுக்குள் உளப்பூசல் உருவாவதற்கான துவக்கத்தை நிகழ்த்தி விடும். பூசலின் இயல்பு நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதே. பின்னர் அந்த இருவரின் உறவில் அப்பூசல் குறித்த நினைவே பூதாகரமாகி நிற்கும். 

ஜனநாயகத்தில் அரசியல் பேச்சு என்பது கட்சியினர் தங்கள் பரப்புரையின் போது தங்கள் கருத்தைத் தெரிவிப்பது. அது ஒருவர் ஒரு பெருந்திரளை நோக்கிப் பேசுவது எழுதுவது ஆகியவையே. ஒருவர் நூறு பேருக்கு ஒருவர் ஆயிரம் பேருக்கு என்ற கணக்கில் அது நிகழும். இரண்டு பேர் சந்தித்து உரையாடும் போது - அவர்கள் அறிமுகமானவர்களோ பரிச்சயமானவர்களோ நண்பர்களோ உறவினர்களோ - அரசியல் விஷயங்கள் பேசாமல் இருப்பது நலம் பயப்பது ; நன்மை தருவது. 

சினிமா குறித்த பேச்சும் இத்தகையதே. இருவர் பேசிக் கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவிதமான ரசனை இருக்கும். இன்னொருவருக்கு இன்னொரு விதமான ரசனை இருக்கும். அவர்கள் உரையாடலில் சினிமா வந்தால் அந்த உரையாடல் பூசலில்தான் சென்று நிற்கும். விளையாட்டு குறித்த பேச்சும் அவ்வாறே. 

நான் எவருடன் உரையாடும் போதும் 1. அரசியல் 2.சினிமா 3. விளையாட்டு ஆகிய விஷயங்களைப் பேசுவது இல்லை.