காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
-பட்டினத்துப் பிள்ளை
இணையம் கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கும் பரவலாகி உள்ளது. கல்வித்துறையில் இணையத்தின் பரவலாக்கம் கற்பித்தலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது என்றே சொல்லலாம். நான் பள்ளிக்கல்வியும் கல்லூரிக் கல்வியும் என மொத்தம் 21 ஆண்டுகள் பயின்றிருக்கிறேன். எனக்கு மொழியின் மீது ஆர்வமும் ஈர்ப்பும் உண்டு. மிகச் சிறு வயதிலிருந்தே அவை என்னிடம் உண்டு. எனக்கு சொற்களை காட்சிகளாக கற்பனை செய்து கொள்ளும் திறன் சின்ன வயதிலிருந்தே இருந்திருக்கிறது. அதனால் தான் பாலனாயிருந்த பருவத்திலிருந்தே நான் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தேன். காணும் காட்சிகளை உணரும் உணர்வை சொல்லாக்கும் திறன் அதன் மறுபக்கமாக என்னுள் இருந்திருக்கிறது ; அதனை உணரத் தொடங்கிய போது எழுதத் தொடங்கினேன். எழுதக் கூடியவனாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் விருப்பம் வேட்கையும் எனது பால பருவத்திலிருந்து இருந்தாலும் இளமைப் பருவத்தில்தான் எழுதத் தொடங்கினேன். மொழிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடம் கணிதம். எண்களின் புதிர்த்தனமையும் துல்லியத் தன்மையும் என்னை ஈர்த்தன. அதன் பின்னர் வரலாறு, புவியியல் ஆகியவற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தேன். பதினைந்து வயதுக்குப் பின்னர் அறிவியலும் தொழில்நுட்பமும் பயில வேண்டியிருந்தது. மொழியில் கணித்தத்தில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் பயில்வதில் பெருவேகம் கொள்ள முடியவில்லை. மொழியின் மீது ஆர்வம் கொண்ட மனம் இயங்கு விதமும் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளும் உருவாக்கும் மனம் இயங்கும் விதமும் வேறுவேறானவை. மொழியோ கணிதமோ சமூகவியலோ பயின்றிருந்தால் நான் பயின்றிருக்கக் கூடிய படிப்பும் தொழில்நுட்பம் பயின்றதால் பெற்ற பட்டமும் தூரம் கொண்டவை. 21 வயதில் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவுடன் எனது கல்லூரிக் கல்வி நிறைவு பெற்று விட்டது. பொறியியல் பட்டம் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் எம். ஈ படிக்க விரும்பி கல்லூரியில் விண்ணப்பத்தை வாங்கினேன். பகுதி நேரக் கல்லூரியில். கல்லூரியின் நிர்வாகக் காரணங்களால் அந்த பட்டப்படிப்பை அவர்களால் தொடங்க முடியவில்லை. இப்போதும் ஏதேனும் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று நினைப்பேன்.
இணையம் பரவலாவதற்கு முன் அறிவியலும் தொழில்நுட்பமும் புத்தகங்களில் இரு பரிமாண வடிவில் மட்டுமே படித்தறிவதாக இருக்கும். ஒரு நுரையீரல் குறித்த பாடம் நடத்தப்படுகிறது எனில் அதில் நுரையீரலின் வரைபடம் இருக்கும். அந்த வரைபடம் நூலின் அளவுக்கு ஏற்றவாறு பெரிதுபடுத்தப்பட்டு இருக்கும். ஒரு கான்கிரீட் தூணின் படம் இரு பரிமாணத்தில் மட்டுமே இருக்கும். ஒரு என்ஜினின் உள்பாகங்களும் அவ்வாறே. இணையம் வந்ததற்குப் பின் ஒரு நுரையீரல் என்றால் அது எங்கே இருக்கிறது என்பதை எப்படி இயங்குகிறது என்பதை நம் கண்களால் முப்பரிமாணத்தில் காண இயலும். ஒரு கான்கிரீட் தூண் எவ்விதம் கம்பிகளாலும் கான்கிரீட்டாலும் உருவாக்கப்படுகிறது என்பதன் காணொளியைக் காண முடியும். கல்வியியலில் இந்த விஷயம் ஒரு பாய்ச்சல். 2000க்குப் பின் பிறந்தவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு. ஒரு பாடம் குறித்து விரும்பிய பொழுதில் விரும்பிய விரிவுரைகளை காணொளிகள் மூலம் கேட்க முடியும் காண முடியும் என்பது பெரும் வாய்ப்பு.
இன்று இணையத்தில் ஒரு மனித உடல் பிணக்கூறாய்வு ( போஸ்ட் மார்ட்டம்) செய்யப்படுவதைக் கண்டேன். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது கல்லூரியின் சார்பாக மருத்துவ மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடைமுறைப் பாடமாக அதனைக் காட்டுகிறார். 45 நிமிடம் நிகழ்ந்த அந்த பிணக்கூறாய்வின் மூலமாக நான் இது நாள் வரை அறிந்திராத கவனப்படுத்திக் கொள்ளாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன். உணர்ந்து கொண்டேன். அந்த பாடம் என்னைப் பலவாறாக யோசிக்கச் செய்தது. என்னைப் பலவிதத்தில் பரவசப்படுத்தியது. நாம் ஒன்றைக் கற்கும் போது நாம் வளர்கிறோம். கற்பிக்கப்படும் கல்வி மாணவனுக்கு கணக்கற்ற சாத்தியங்களை உண்டாக்கித் தருவதால் ஆசிரியனை இறைவன் என்கிறது நமது மரபு. ‘’ஆசார்ய தேவோ பவ’’ என ஆசிரியனை வணங்குகிறோம் நாம்.
காதின் அருகில் இருக்கும் தசை ஒரு அறுவைசிகிச்சைக் கத்தியால் கிழிக்கப்பட்டு தலையின் ஒரு பாதி கூறிடப்படுகிறது. மரணித்து நிறைய நேரம் ஆகியிருந்ததால் குருதி அதிகம் வரவில்லையா அல்லது தலைப்பகுதியில் ஒப்பீட்டளவில் ரத்த ஓட்டம் குறைவா எனத் தெரியவில்லை ; ரத்தம் அதிகம் வரவில்லை. முகம் பிய்த்து எடுக்கப்படுகிறது. தோல் உரித்தல் என்னும் பதத்துக்கு என்ன அர்த்தம் என்பதை இன்று நேரடியாகப் பார்த்தேன். பின்னர் ஒரு ரம்பத்தைக் கொண்டு மண்டை ஓட்டை அறுத்தார்கள். ஐந்து நிமிடம் அறுத்திருப்பார்கள். பின்னர் அதனை உடைத்து மூளையை வெளியே எடுத்தார்கள். கொழ கொழ என இருந்தது. இரு பரிமாணத்தில் பார்க்கும் போதும் அதனை வைத்து விளக்கப்படும் போதும் மூளையை காலிஃபிளவர்க்கு ஒப்பிடுவார்கள். ஆனால் மூளை வெட்டப்பட்ட வெண்டைக்காய் போல் இருந்தது. மூளையைத் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டார்கள். அதன் பின் மார்பு அறுக்கப்பட்டது. அறுவைசிகிச்சைக் கத்தி வெள்ளைக் காகிதத்தில் மார்ஜின் போடுவது போல எளிதாக மேல்தோலைக் கிழித்து விடுகிறது. மார்பின் எலும்பும் தோள்பகுதிக்கு செல்லும் எலும்பும் சந்திக்கும் சந்தியை ரம்பத்தால் அறுத்து அந்த எலும்பை உடைத்து விலக்குகிறார்கள். இரைப்பை, கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் ஆகியவை தனித்தனியே வெளியே எடுக்கப்படுகிறது. இரைப்பையில் செரிமான திரவங்கள் சுரந்து இருக்கின்றன. அந்த உடலுக்குரியவர் இறந்து ஒருநாள் அல்லது 24 மணி நேரத்துக்குள் தான் இருக்கும் என்று தோன்றியது. இதயத்தை ஆழமாகத் தோண்டி எடுத்தார்கள். பெரிக்கார்டியல் திரவம் இதயத்தைச் சூழ்ந்திருப்பதைக் கண்டேன். சிறுநீரகத்தை வெளியே எடுத்தார்கள். மஞ்சள் நிறத்தில் தோலின் ஆழத்தில் கொழுப்பு இருந்தது. உடல் பருமனுக்கு காரணம் இந்த பொருள் தானா என நினைத்துக் கொண்டேன்.
கண்ணால் நாம் காணும் நம் வெளித்தோற்றத்தையும் பிறரின் வெளித்தோற்றத்தையும் மட்டுமே நாம் உடல் என எண்ணுகிறோம். உடலின் மிகச் சிறு பகுதி நாம் காணும் பகுதி. நமது உடலைக் கூட நாம் முற்றறிவதில்லை. எனது அறிதல்கள் எவ்வளவு சிறிய அளவு என்னும் எண்ணம் வந்தது. கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்தேன். புரிதலின் அறிதலின் பல கதவுகள் திறப்பதாக உணரத் தொடங்கினேன்.
இந்த உலகில் மனிதர்கள் எத்தனை புற பாகுபாடுகளை உருவாக்கிக் கொண்டு அதனை நம்பிக் கொண்டு ஒருவரோடொருவர் பூசலிட்டு மோதி தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்த போது ஒரு கணம் கண் கலங்கினேன்.
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார்.
போவோம் ; காலம் வந்தது காண் ; பொய் விட்டு ,உடையான் கழல் புகவே என்கிறார் மாணிக்கவாசகர்.
ஹரிச்சந்திரா காட் மயானத்தில் அன்றெரிந்த உடலின் சாம்பலை அபிடேக திரவியமாய் ஏற்று கண் விழிக்கிறான் காசியின் விசுவநாதன்.