பண்டிகைகளுக்கு முதல் தினம் ஒரு பயணம் மேற்கொள்வதை கடந்த பல ஆண்டுகளாகவே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒரு முக்கிய பண்டிகை சமூகத்தின் எல்லா மனிதனின் நுண் அம்சமும் நுண் பங்களிப்பும் கொண்டது. ஒரு பண்டிகை நாளை நோக்கி தங்கள் கவனத்தை வைத்துக் கொள்வதும் பண்டிகை நாளுக்கு முன்போ அல்லது பின்போ அல்லது பண்டிகை நாளன்றோ முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுப்பதையோ அல்லது செயல்படுத்துவதையோ தமிழ்ச் சமூகம் வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்ச் சமூகம் கொண்டாடும் பெரும் பண்டிகைகள் என தீபாவளி, பொங்கல், சித்திரைப் பிறப்பு, ஆயுத பூஜை, திருக்கார்த்திகை ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். விநாயகர் சதுர்த்தியும் இவற்றின் வரிசையில் இணையும் பண்டிகை. ஜனவரி முதல் தேதியும் மக்களால் ஆர்வமாக நோக்கப்படும் தினம். ஆபிரகாமிய மதத்தினர் கிருஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய பண்டிகைகளைப் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.
பண்டிகைக் காலத்தில் நாட்டு மக்களின் முகங்களைப் பார்த்தவாறே பயணிப்பது என்பது ஒரு முக்கியமான அனுபவம். அந்த காலகட்டத்தில் மக்கள் முகங்களில் வாழ்க்கை மீதான நம்பிக்கை மேலும் கூடுதலாக இருக்கும். பண்டிகை தங்கள் வாழ்வில் ஒரு புதிய துவக்கத்தை உருவாக்கும் என்னும் தீரா நம்பிக்கை கொண்டிருப்பர்.
இன்று காலை 9.30 மணி அளவில் திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவில் செல்வது என முடிவு செய்தேன். அந்த நேரத்தில் எடுத்த முடிவு. கடந்த ஓரிரு மாதங்களாகவே திருவாசகம் உதித்த அந்த மண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது. மாணிக்கவாசகரின் யாத்திரைப் பத்தில் வரும் ‘’போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே’’ என்னும் வரி என் மனத்தை நிரம்பியிருந்தது. உன்னதமான பக்தரான மாணிக்கவாசகர் உலகியலில் உழலும் இன்ப துன்பங்களில் சிக்கியிருக்கும் மிக மிகச் சிறிய உயிர்களாகிய நம்மையும் அவருடன் சேர்த்துக் கொண்டு நாம் போவோம் என்கிறார். அறியாமை இருளிலிருந்து சுடர்ந்து கொண்டிருக்கும் ஒளிக்கு செல்லும் காலம் வந்து விட்டது என நம் அனைவருக்கும் அறிவிக்கிறார். நம் உடலும் மனமும் காலத்தின் எல்லைக்குட்பட்டவை ; பிரும்மாண்டத்தின் முன் ஒப்பு நோக்கையில் அணுவினும் அணுவான காலத்தில் இருப்பவை நம் உடலும் மனமும். நாம் அதனை அதாவது நம் உடலையும் மனத்தையும் தீவிரமாகப் பற்றி இருக்கிறோம். அது சுழல். மேலும் மேலும் என ஆழத்தில் சிக்க வைப்பது. அந்த பொய்யை விட்டு மெய்யான சாரத்தின் உடையவான இறைவனின் திருவடிகளில் புகுவோம் என்கிறார் மாணிக்கவாசகர். இந்த வரிகள் என் மனத்தை சலனமுறச் செய்து கொண்டேயிருந்தன.
காலை 10 மணிக்கு ஆவுடையார் கோவில் பயணமானேன். தமிழகத்தில் ஆலயங்கள் மதியம் 12 மணி அளவில் நடை சாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறப்பது வழக்கம். எனவே காலை 10 மணிக்குப் புறப்பட்டால் மாலை 4 மணியை ஒட்டி அங்கேயிருக்கலாம் எனத் திட்டமிட்டேன். திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். கடைவீதிகளில் மக்கள் அப்போது தான் குழுமத் தொடங்கியிருந்தார்கள். இப்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் நேரம் என்பது காலை 9 மணிக்கு மேல் என்று ஆகி விட்டிருக்கிறது. பொதுவாக 90 சதவீத வீடுகளில் காலையில் எழும் நேரம் என்பது காலை 6.30 . அவ்விதம் எழுபவர்கள் தாங்கள் காலையில் மிக முன்னதாக எழுவதாக எண்ணத் தலைப்படுகின்றனர். காலை 5.30 என்பது ஊர் விழிக்கும் நேரம் என இருப்பது ஊருக்கும் மக்களுக்கும் மிக அதிக நலம் பயக்கும் என்பது என் அபிப்ராயம். பலர் காலை 5.30 ஐ கண்ணால் கண்டிருப்பார்களா என்பது ஐயமே. முன்னர் காலை 10 மணி என்பது வங்கிகளும் அரசு அலுவலகங்களும் பணி துவங்கும் நேரம். இன்று அந்த போக்கு சமூகத்தின் கடைசி சாமானியர் வரை வந்தடைந்து விட்டது.
பேருந்து 20 கி.மீ சென்றதும் மழை பொழியத் தொடங்கியது. திருவாரூரில் சற்று நேரம் முன்பு பெருமழை பொழிந்து பின்னர் இருந்த தூவானத்தைக் காண முடிந்தது. நான் பயணித்து வந்த பேருந்து திருத்துறைப்பூண்டி வரை செல்லக் கூடியது. அதிலிருந்து இறங்கி முன்னால் ஏதும் வண்டி இருக்கிறதா என்று பார்த்தேன். எந்த பேருந்தும் இல்லை. மீண்டும் அதே பேருந்தில் ஏறிக் கொண்டேன். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் கச்சனம் தாண்டி ஒரு ஊரில் சாலையிலிருந்து மிக அருகில் ஒரு நாகலிங்க மரம் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் அந்த பாதையில் சென்றால் அங்கே சென்று அதன் முன் சில நிமிடங்கள் நிற்பதும் பேருந்தில் செல்லும் போது அந்த மரத்தை ஜன்னல் வழியே பார்ப்பதும் என் வழக்கம். இன்றும் அதனைக் கண்டேன். நான் அதனைக் காண்கிறேன் என்பது அந்த மரத்துக்குத் தெரியும். திருத்துறைப்பூண்டியிலும் நல்ல மழை. அங்கே ஒரு உணவகத்தில் மதிய உணவு அருந்தி விட்டு முத்துப்பேட்டை பயணமானேன். அந்த சாலையில் கிராமங்களே மிகுதி. இந்த பாதை இரு சக்கர வாகனத்துக்கு ஏற்றது. அதுவும் காலையில் 5 மணிக்குப் புறப்பட வேண்டும். காருக்கோ பேருந்துக்கோ இந்த பாதை உகந்தது அல்ல. பேருந்தில் வசந்த் என்ற சிறுவனையும் சோம வர்ஷிணி என்ற சிறுமியையும் சந்தித்தேன். இருவரும் அண்ணன் தங்கைகள். சோம வர்ஷிணியிடம் அந்த பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்டேன். அந்த சிறுமிக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘’மழையெனப் பொழியும் நிலவின் அலைகள்’’ என்பது அந்த பெயரின் அர்த்தம். அதனை விளக்கிச் சொன்னேன். மெல்ல மெல்ல முத்துப்பேட்டை சென்ற போது மாலை மணி 4. அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்ல 5. அறந்தாங்கியை அடைந்த போது 5.40 . 6 மணிக்கு ஆவுடையார் கோவில் சென்று சேர்ந்தேன்.
முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து அறந்தாங்கி வரை செல்லும் பாதையை அதிலிருக்கும் ஊர்களை ’’தென்னையின் நிலம்’’ என்று கூற முடியும். அப்பிரதேசத்தின் தோற்றமே வேறு விதமாய் இருக்கும். ஊர் முழுக்க தென்னந்தோப்புகள். வீதிகளில் பெரிய பெரிய வீடுகள். என் அருகில் பயணித்தவரிடம் ‘’கஜா’’ புயலில் இந்த பகுதியின் தென்னை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வீழ்ந்தனவே அந்த இழப்பிலிருந்து விவசாயிகள் மீண்டு விட்டார்களா என்று கேட்டேன். ‘’ சார் ! பாதிக்குப் பாதி மரம் முரிஞ்சு விழுந்துடுச்சு. மீதி மரம் அடியோட ஆட்டம் கண்டு வேர் பாதிக்குப் பாதி அறுந்துடுச்சு. பாதி அறுந்த வேர்ல இருந்து புது வேர் உருவாகி வந்து அந்த மரம்லாம் புது மரம் மாதிரி காய்க்க ஆரம்பிச்சிடுச்சு. கஜா புயலுக்கு அப்புறம் இப்ப தென்னைலாம் குலை குலையா காய்க்குது. இப்ப ஒரு காய் 31 ரூபாய் சார்’’ என்றார். அவர் சொன்ன தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. தென்னை மரங்களைப் பார்க்கும் போது நான் எப்போதும் ஒரு விஷயம் எண்ணுவேன். தென்னை உற்பத்தியில் உலகில் நாம் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். முதலிடத்தில் இந்தோனேஷியா உள்ளது. நம்மை விட 20 சதவீதம் அதிகமாக தென்னை உற்பத்தி செய்கிறார்கள். பிலிப்பைண்ஸ் நம்மை விட 1 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். இந்திய விவசாயிகள் சற்று முயன்றால் உலக அளவில் தென்னை உற்பத்தியில் நாம் முதலிடம் பெற முடியும்.
மாலை 6.30 அளவில் ஆவுடையார் கோவில் சென்று சேர்ந்தேன். ஆலயத்தின் எதிரே ஒரு திருக்குளம் உள்ளது. அங்கே சென்று கை கால்களைக் கழுவிக் கொண்டு ஆலயத்தினுள் சென்றேன். மாணிக்கவாசகர் நிர்மாணித்த ஆலயத்தினுள் நுழைவது என்பதே பெரும் பேறு. இறைவன் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய பரியை நரியாக்கிய திருவிளையாடல் புரிந்தார் என்பது ஐதீகம். மாணிக்கவாசகர் தன் ஞானகுருவை சந்தித்து அவரால் நயன, வசன, ஸ்பரிச தீட்சை பெற்ற தலம் ஆவுடையார் கோவில். சிவபெருமானே அந்த ஞானகுரு என்கிறது சைவ மரபு. ஆவுடையார் கோவில் ஆலயத்தில் பலிபீடம் கிடையாது . கொடிமரம் கிடையாது. நந்தி கிடையாது. ஆவுடை மட்டுமே இருக்கும். மாணிக்கவாசகர் தன் குருவிடம் ஞானோபதேசம் பெற்ற இடம் ஆலயத்தின் ஒரு பகுதியில் உள்ளது. அதன் முன் கண் மூடி அமர்ந்திருந்தேன்.
இந்த ஊரில் குறைந்தது 3 நாட்களாவது முழுமையாகத் தங்கியிருந்து ஆத்மநாத சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. குறைந்தபட்சம் முதல் நாள் இரவு வந்து அல்லது அதிகாலை நேரம் அந்த ஊருக்கு வந்து ஐந்து கால பூஜையும் காண வேண்டும் என எண்ணினேன் ; விரும்பினேன் ; வேண்டினேன்.
இரவு உணவை அங்கே அருந்தி விட்டு அறந்தாங்கி சென்றேன். வந்த வழியே திரும்பிச் செல்வது பெரும் பயணமாகத் தோன்றியது. எனவே அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை வந்தேன். புதுக்கோட்டையில் பேருந்தில் ஏறி பயணச்சீட்டு எடுத்து விட்டு கண் மூடினேன். விழித்துப் பார்த்தால் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைந்து கொண்டிருந்தது. அடுத்த பஸ் மாறி கண் மூடினேன். சுவாமிமலை அருகே சென்று கொண்டிருந்த போது விழித்தேன்.
கும்பகோணம் வந்த போது நேரம் 1 மணி. அந்த நேரத்திலும் கும்பகோணம் மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்ததைக் காணும் போது ஆச்சர்யம் ஏற்பட்டது. கும்பகோணம் அவ்விதமான ஊர். இரவு 2.15க்கு ஊர் வந்து வீடடைந்தேன்.