இன்று காலையிலிருந்து இங்கே நல்ல மழை. மாடியில் மழைநீர் பூமிக்குச் செல்ல இரண்டு குழாய்கள் உள்ளன. அதில் ஒரு குழாயின் அடியில் வாளியை வைத்து தண்ணீர் பிடிக்க முடியும். அவ்விதம் இரண்டு வாளி தண்ணீர் பிடித்து குளியலறை வாளியில் அதனை நிரப்பி அதில் குளித்தேன். நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது ஒவ்வொரு மானுடனும் பயில வேண்டிய நெறி ; வழிபாட்டுணர்வுடன் மேற்கொள்ள வேண்டிய செயல். தேவைக்கு அதிகமாக ஒரு துளி நீரைக் கூட பயன்படுத்தாத வாழ்க்கைமுறைக்குள் நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விடாமல் மழை பெய்து கொண்டிருந்ததால் காலை 9 மணிக்கு மேலும் ஒட்டுமொத்த ஊரும் அடங்கிக் கிடந்தது. மழை பொழிவதால் அன்றாடம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றாமல் இருப்பதை என் மனம் ஏற்பதில்லை. மழை பெய்து கொண்டிருக்கும் தினத்திலும் அன்றைய தினத்தில் செய்ய உத்தேசித்திருந்த பணிகளை நான் செய்யவே செய்வேன். ஒருமுறை மழை ‘’சோ’’ எனக் கொட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கு போஸ்ட் ஆஃபிஸில் ஒரு வேலை இருந்தது. ஒரு குடை எடுத்துக் கொண்டு நடந்து சென்றேன். அலுவலகச் சாளரத்தில் இருப்பவர் ‘’என்ன சார் இவ்வளவு மழை கொட்டிக் கொண்டிருக்கையிலும் வந்திருக்கிறீர்களே ?’’ என்று கேட்டார். ‘’எவ்வளவு மழை பெய்தாலும் நீங்கள் பணிக்கு வந்து விடுகிறீர்களே அதே போல’’ என்று பதில் சொன்னேன். இன்று ஒரு நண்பரை சந்தித்து முக்கியமாக சில விஷயங்கள் பேச வேண்டியிருந்தது ; காலை 10.30 மணி அளவில் அவரைக் காண நடந்து சென்றேன். கையில் ஒரு குடை. மழை பொழிந்து கொண்டிருக்கையில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது என்பது உகந்தது அல்ல. எனக்கு கையில் குடையுடன் நடக்கப் பிடிக்கும். நண்பரைச் சந்தித்து முக்கியமான சில விஷயங்கள் விவாதித்தேன். எங்கள் உரையாடல் மதியம் 1 மணி வரை நீடித்தது. நண்பருடன் உரையாடியது மூலம் சில விஷயங்களை தொகுத்துக் கொண்டேன். பின்னர் நடந்து வீட்டுக்கு வந்து உணவருந்தினேன். மதியம் 2.30 மணி அளவில் காலை நண்பருடன் பேசியதன் நீட்சியாக சில விஷயங்கள் மனதுக்குப் புலப்பட்டன. மழை கொஞ்சம் விட்டிருந்தது. இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு நண்பரைக் காணச் சென்றேன். நண்பர் மதியத் தூக்கத்தில் இருந்தார். அவரை எழுப்பி மனதுக்கு புலப்பட்ட விஷயங்களைச் சொன்னேன். அவர் அரைத்தூக்கத்தில் இருந்தார். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என புறப்பட்டு விட்டேன். மாலை 5 மணி அளவில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு மீண்டும் நண்பரைக் காணச் சென்றேன். அவரைப் பார்த்ததும் அவரிடம் ‘’ இன்னைக்கு உங்களுக்கு குட் மார்னிங், குட் ஆஃப்டர்நூன், குட் ஈவினிங் மூன்றும் சொல்லியிருக்கிறேன்’’ என்றேன். அவருடன் 2 மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். பின்னர் நடந்து வீடு வந்து சேர்ந்தேன்.