அன்பு பிரபு,
நீங்கள் நலமென நம்புகிறேன் . தங்களின் “மூன்று விவசாயிகள்” பதிவைப் படித்தேன் . நிறைய புதுத் தகவல்கள் கொண்டிருந்தது. மரவள்ளிக் கிழங்கு உயிர் காக்கும் உணவாகவே பயன்பட்டுள்ளது. ஐம்பதுகளின் இறுதியில் தமிழகத்தில் ஊர் மக்கள் பங்களிப்புடன் துவக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் சில சிறு கிராமப் பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையினால் வெந்த கிழங்கே குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டதாக அப்போது ஆசிரியராக வேலை பார்த்த என் அத்தையார் கூறக்கேட்டதுண்டு.
நான் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு MSc வேதியியல் முடித்து அந்த வருடத்திலேயே UGC-NET (eligibility for lectureship) தகுதியும் பெற்றவன். 2001 லும் 2019-20 லும் ஒரோர் ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியவன். மூன்று வருடங்கள் csir ஆராய்ச்சி நிறுவனத்தில் ப்ராஜக்ட் அசிஸ்டென்ட் ஆக PhD க்கு உழைத்தவன் ஆனால் முடிததுப் பட்டம் பெறவில்லை. பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகளாக (இடையில் ல் ஒரு ஆண்டு நீங்கலாக) தனியார் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறேன்.இந்த 25 வருடங்களாக கல்வி மற்றும் முனைவர் பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் என அனுபவங்களையும் அவதானிப்புகளையும் இங்கே பதிவு செய்கிறேன்
அந்தப் பதிவின் இறுதியில் தங்கள் சந்தித்த ஒரு கல்லூரி மாணவரைப் பற்றி பதிவிட்டுள்ளீர்கள் . அவரை மாஸ்டர்ஸ் படிக்கும் படி ஊக்கியது மிகச்சரி. ஒரு துறையின் ஆடிப்படை நிபுணத்துவம் முதுகலைப் படிப்பின் வாயிலாகவே அடைய முடியும். அதுவும் வேதியியலில் முதுகலைப் பட்டம் என்பது இன்றைய வேலைவாய்ப்புச் சந்தையில் மிக்க மதிப்பு வாய்ந்தது. கணிப்பொறி மற்றும் வணிகவியல் பட்டங்களைப் போல் உடனடியாக வேலை ஈட்டித் தருவது. அதுவும் ஐஐடி , என் ஐ டி, ஐ ஐ எஸ் சி முதலிய தேசியத் தரம் வாய்ந்த நிறுவனங்களில் பெறப்படும் முதுகலைப் பட்டம் வேலை வாய்ப்புக்கு மட்டுமல்லாது வேதியியல் துறையில் சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்ட ஆய்வு மாணாக்கனாகச் சேர உதவும் கடவுச் சீட்டாகவும் இருக்கும்.
இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே JAM (ஐஐடி , என் ஐ டி, ஐ ஐ எஸ் சி ) CUET-PG (திருவாரூர் /புதுச்சேரி முதலான மத்தியப் பல்கலைக் கழகங்கள் ) மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான படிப்பு , (உதவித்தொகையுடன் கூடியது) TIFR மும்பை , JNCASR Bangalore , ஐ ஐ எஸ் சி Bangalore நிறுவனங்கள் தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வுகள் அல்லது JAM தேர்வு மதிப்பீட்டுடன் கூடிய நேர்காணல், இவற்றுக்கெல்லாம் தயார் செய்துகொண்டு தேர்வு எழுதவேண்டும் . இந்தத் தேர்வுகள் நுட்பமான மற்றும் ஆய்வுத் திறனைச் சோதிப்பதாகவும் “ logical- ability -to -solve- problems “ என்ற வகையில் அமையும். சுயமான, திட்டமிடப்பட்ட படிப்பும், கல்லூரிப் படத்திட்டத்திற்கு வெளியேயான படிப்பும் மிக்க அவசியம். எந்த விதமான paid coaching வகுப்புகளும் பெரிதாக உதவாது.
முதுகலை முடித்ததும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் MSc வேதியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. கரிம வேதியியல் எனப்படும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியிலும் பகுப்பாய்வு வேதியியல் எனும் அனலிட்டிக்கல் கெமிஸ்டரியிலும் சற்று ஆழமான அறிவு இருந்தால் போதும் . இந்தியாவில் Biocon /syngene , Dr Reddy’s, Sun Pharma, Cipla., Aurobindo Pharma Ltd., Lupin Ltd., Glenmark Pharmaceuticals Ltd., முதலிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் (R&D centres) எல்லா பெரிய நகரங்களிலும் உள்ளன. புதியோருக்கே நல்ல சம்பளம் கிடைக்கும் . ஓரு ஈரண்டுகள் வேலை செய்தபின் கூட முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.
வேதியியலில் முதுகலை முடித்த பின்னர் வேலைக்குப் போகும் தேவை இல்லாமல் இருந்து, ஆராய்ச்சி படிப்பில் (PhD) இறங்கும் முடிவு இருந்தால், இந்த இடத்தில் தெளிவும்,கவனமும் பாரபட்சம் இல்லாத சுய பரிசோதனையும் அவசியம். ஏனென்றால் ஒரு முடிவு எடுத்து முனைவர் பட்ட ஆராய்ச்சிதான் செய்யப்போகிறேன் என்று துவங்கும் போது ஒரே ஒரு விஷயத்தை நன்றாக்க மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் . என்னவென்றால் முன்செல்லும் பாதை குறுகியதாகவும், அதிக நேரமும் பொருட் செலவும் பிடிப்பதாகவும் அதிக சேதாரத்துடனேயே பின்னெடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதே.
மத்திய அரசாங்கம் நடத்தும் GATE, CSIR-NET தேர்வுகளில் தகுதியும் உடவித்தொகையும் பெற்று அரசால் நடத்தப்படும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் (CSIR labs) ஐஐடி (IIT) , என் ஐ டி(NIT), ஐ ஐ எஸ் சி (IISc Bangalore ), ஐ ஐ எஸ் இ ஆர் (IISER), TIFR மும்பை , JNCASR Bangalore , ஆகியவற்றிலோ இணைவது சிறந்தது. ஆராய்ச்சி உதவித்தொகையும் , வருடாந்திர வழங்கல் தொகை (annual grant) யும் பொருளாதார சிரமத்தைக் குறைப்பதுடன் அந்த நிறுவனத்தின் பெயரால் ஒரு அங்கீகாரமும் கிடைக்கும். நிறுவன வளாகத்துக்கு உள்ளேயே தேவையான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் அதிக நேரம் ஆராச்சிக்குச் செலவிட முடியும் . மாநிலப் பல்கலைக் கழகங்களில் கூட, அங்கே உள்ள கட்டமைப்புகளை நன்றாக அவதானித்து உதவித்தொகை பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு இணையலாம்.
வேதியியல் முனைவர் பட்ட ஆய்வைப் பொறுத்தவரை ஆர்கானி கெமிஸ்ட்ரி PhD மட்டும் தான் வேலை வாய்ப்பை அளிக்கக் கூடியதாக உள்ளது அதுவும் மேலே சொன்ன தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்க (R&D centres) ளில் மட்டுமே . அரசாங்க வேலை வாய்ப்புகள் மிகக்குறைவே. வேதியியலிலேயே மற்ற பிரிவுகளில் (பிசிகல் மற்றும் இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி) படிக்கப்படும் முதுகலை (PG with specialization in physical or inorganic chemistry ) படிப்புகளுக்கு அத்தனை வேலை வாய்ப்புகள் இல்லை என்பதே கசப்பான உண்மை .
கடைசியாக , வேதியியலில் மட்டுமின்றி வேறு எந்தத்துறையிலும் ,முனைவர் பட்டமும் பெற்று விரிவுரையாளர் தகுதிக்கான CSIR-UGC-NET (eligibility for lectureship) தகுதியும் பெற்று ஆசிரியப்பணியைத் தேர்வு செய்வது போலக் கொடுமை வேறொன்றில்லை. அரசுக் கல்லூரி வேலைக்கு TRB எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வருமா என்றே தெரியாது. சில பல வருடங்களுக்குப் பின் சென்ற 2024 ஆகஸ்டில் நடப்பதாக இருந்த தேர்வு திடீரென காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப் பட்டது, அப்படியே நடந்தாலும் தகுதியானவர்களுக்கும் காலிப் பணியிடங்களுக்கும் உள்ள விகிதம் மலைக்கும் மடுவுக்கும் நிகர். அரசு உதவி பெரும் கல்லூரிகளில் (Aided ) UGC ஊதியத்துடனான பணியிடங்கள் , என்றோ அனுமதிக்கபடப்போகும் ஒரு பணியிடத்தை நம்பி அதே கல்லூரியில் சுய நிதிப் பிரிவில் (self-financing section ) இருபதில் இருந்தது முப்பதாயிரத்துக்கு எந்த சலுகையும் இன்றி கையறு நிலையில் கடுமையாக உழைக்கும் 35 வயதைக் கடந்த முனைவர் /முதுமுனைவர் பட்ட தாரிகள், அதிலும் roster method இல் எந்த சமூகப் பிரிவுக்கு ஒதுக்கப் படப்போகிறது என்பதும் தெரியாமல் நாளையைப் பற்றிய எந்த நல்ல நம்பிக்கையும் இல்லாமல் வேறு எங்கும் செல்ல வழி யின்றி உழைப்பவர்கள். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு roster விதி பொருந்தாத போதும் அங்கேயும் இதே அளவு தகுதி வாய்ந்த பட்டதாரிகளின் கும்பல். எனவே இனியெல்லாம் ஆசிரியப்பணி எல்லாம் வெறும் கனவே.
வேதியியலில் மட்டுமாவது ஆர்கானிக் மற்றும் அனாலிட்டிகல் கெமிஸ்ட்ரி முடித்தவர்களுக்கு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன . மற்ற பிரிவுகளுக்கும் துறைகளுக்கும் எந்த உறுதிப்பாடும் கிடையாது.