பொறியியல் கல்லூரியில் எங்களுக்கு பாடம் எடுத்த ஒரு பேராசிரியர் இருந்தார். அவரது பூர்வீகம் குமரி மாவட்டம். கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகளுக்கு இடையே இரு பருவத் தேர்வுகள் நடக்கும். கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு வழக்கம் உண்டு. செமஸ்டர் தேர்வுகள் என்றால் முக்கியத்துவம் கொடுத்து படிப்பதும் பருவத் தேர்வுகளுக்கு எந்த தயாரித்தலும் இன்றி தேர்வு எழுதி மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பதும் நிகழும். பல மாணவர்கள் பூஜ்யம் எடுப்பதுண்டு. விடைத்தாள்களைக் கொடுக்கும் போது பூஜ்யம் எடுக்கும் மாணவர்களிடம் அவர் கூறுவதுண்டு. ‘’You have to score at least a single mark'' என்பார். ஒரு பாடத்தில் 8 வாரங்களில் 25க்கும் மேற்பட்ட வகுப்புகளில் அமர்ந்து 18 மணி நேரத்துக்கும் அதிகமாக பாடம் கேட்டு ஒரு தேர்வு எழுதும் போது அதில் ஒரு மாணவன் 1 மதிப்பெண்ணாவது பெற வேண்டும். சாலையில் சென்று கொண்டிருக்கும் வழிப்போக்கன் ஒருவனைப் பிடித்து அவனிடம் வினாத்தாளைக் கொடுத்து ஒரு தேர்வு எழுதச் சொன்னால் அவனால் பூஜ்யம் மதிப்பெண் மட்டுமே பெற முடியும். 18 மணி நேரம் அமர்ந்து பாடம் கேட்ட மாணவனும் பூஜ்யம் பெற்றால் சாலையில் செல்லும் வழிப்போக்கனுக்கும் மாணவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகி விடும் என்பார் பேராசிரியர். பூஜ்யத்துக்கும் ஒரு மதிப்பெண்ணுக்கும் இருக்கும் தூரம் ஒரு மதிப்பெண்ணுக்கும் 100 மதிப்பெண்ணுக்கும் இடையே இருக்கும் தூரத்தை விட அதிகம் என்று கூறுவார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை எந்த உணவையும் சமைக்கத் தெரியாமல் இருந்தேன். பின்னர் கம்மங்கூழ் செய்யக் கற்றுக் கொண்டேன். ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டம்ளர் கம்புமாவைக் கலக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ‘’சிம்’’மில் வைத்து 15 நிமிடம் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கம்மங்கூழ் தயார் என்பதே நான் அறிந்த நான் செய்த முதல் சமையல். எனது நண்பர் ஒருவர் அதனை இன்னும் சுருக்கி ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க விடு ; கொதி வந்ததும் ஒரு டம்ளர் கம்புமாவை அதில் போட்டு கலக்கு. கம்மங்களி தயாராகி விடும் என இன்னும் சுருக்கமான வழிமுறையைக் கூறினார். இவ்விதம் செய்ய 3 லிருந்து 4 நிமிடங்கள் ஆகும். அடிக்கடி கம்மங்களி தயாரித்து உண்டு கொண்டிருந்தேன்.
சமையலில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருந்த நான் 1 மதிப்பெண் பெற்றேன்.
ஒரு சதவீத மதிப்பெண் பெற்றிருக்கும் நான் எல்லா விதமான சமையலையும் அவதானிக்கத் தொடங்கினேன். ஒரு உணவுப்பொருளைப் பார்க்கும் போது அதனை எப்படி தயாரித்திருப்பார்கள் என்பதை யோசிக்கத் தொடங்கினேன். அந்த உணவு எவ்விதம் வயிற்றில் ஜீரணம் ஆகும் என எண்ணத் தொடங்கினேன். ஒவ்வொரு உணவும் எத்தனை கலோரி இருக்கும் என்ற ஒப்பீடு உண்டானது. ஒரு சோன்பப்டி சாப்பிடுவதும் அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவதும் கலோரி கணக்கில் சமம் என்பது தெரிய வந்த போது இந்த பார்வையே இல்லாமல் இத்தனை நாள் இருந்திருக்கிறோமே என்ற வருத்தம் ஏற்பட்டது.
கம்மங்களி செய்யத் தொடங்கியதும் எனது எதிர்காலம் குறித்து விதவிதமாக கற்பனை செய்யத் தொடங்கினேன். எனது லௌகிகக் கடமைகள் அனைத்தையும் முடிக்கிறேன். அதன் பின்னர் கோதாவரிக் கரையில் ஒரு ஏக்கர் அளவுள்ள நிலத்தில் 10 அடிக்கு 10 அடி அளவுள்ள அல்லது 10 அடிக்கு 16 அளவுள்ள ஒரு ஓலைக்குடிசை ஒன்றை உருவாக்கிக் கொண்டு அந்த நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டுக் கொண்டு கம்மங்களி செய்து சாப்பிட்டுக் கொண்டு நாளின் பெரும்பகுதி கோதாவரி நதியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இந்த கற்பனை அடிக்கடி வந்தது. சமயத்தில் அவ்விதமான வனப்பிரஸ்த வாழ்வு மேற்கொள்வதாகவே எண்ணினேன்.
நான் கம்மங்களி செய்யக் கற்றுக் கொண்டதும் அவ்வப்போது அதனை சமைத்து உண்பதும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆச்சர்யம் கொடுத்தது. கொஞ்ச நாள் ஆர்வத்தில் செய்து விட்டு விடுவேன் என எண்ணினார்கள். இருப்பினும் சமையல் எனது பழக்கங்களில் ஒன்றாக உருவாகியிருப்பதையும் கவனித்தார்கள். காலை 6.30க்கு சமைத்துக் கொண்டிருப்பேன். அப்போது சமையலறையில் தேனீர் தயாரித்துக் கொண்டிருப்பார்கள். பெரிய பர்னர் தேனீர் தயாரிக்க. சின்ன பர்னர் களி கிண்ட.
எந்த உணவைப் பற்றிய பேச்சு வந்தாலும் மனிதகுலம் 10,000 ஆண்டுகளாக எவ்விதமாக உணவு உண்கிறது என்பதைப் பற்றியும் எவ்விதமாக சமையல் செய்கிறது என்பதைப் பற்றியும் தகவல்கள் எதையாவது கூறுவேன் ; அந்த வரலாற்றுப் பெரும்பரப்பில் இப்போது நான் சமைக்கும் கம்மங்களி எந்த இடத்தில் பொருந்துகிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளும் போது வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் மேல் கீழ் ஆக பார்ப்பார்கள்.
1 மதிப்பெண் எடுத்திருந்த நான் 2 மதிப்பெண் எடுக்க முடிவு செய்தேன். கம்மங்களி செய்யக் கற்றிருந்த நான் கேழ்வரகுக் களி செய்ய முடிவு செய்தேன். கர்நாடக மாநிலத்தின் பிரபலமான உணவாகும் அது. அங்கே அதன் பெயர் ’’ராகி முட்டே’’. கேழ்வரகு மாவு வாங்கி வந்தேன். கம்பும் கேழ்வரகும் ஹோசூர் பெங்களூர் போல பக்கத்தில் இருக்கும் ஊர்கள் என்றால் கம்மங்களியும் கேழ்வரகுக் களியும் சென்னையும் பெங்களூரும் போன்ற தூரத்தில் இருப்பவை.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் கேழ்வரகு மாவை கலந்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதில் கலக்கப்படும் ஒரு ஸ்பூன் நெய் அந்த ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்கத் தேவைப்படும் நேரத்தை இரு மடங்கு ஆக்கி விடுகிறது என்பதைக் கண்ட போது வேதியியலின் பெரும் புரிதல் ஒன்றை அடைந்திருப்பதை எண்ணி உளம் பெரிதும் மகிழ்ந்தேன். கொதி வந்ததும் அதில் ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கொட்ட வேண்டும். நெய் இருப்பதால் ஒரே மணமாக இருந்தது. களி பதம் வந்தது. பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு மூடி 5 நிமிடம் ‘’சிம்’’மில் இருக்க வேண்டும். அதன் பின் அதனை ஆற வைக்க வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தின் உள்பக்கம் நெய்யைத் தடவிக் கொண்டு அதில் களியை போட்டு சுழற்றினால் பதத்துக்கு வரும். அதனை உருண்டையாக உருட்டிக் கொண்டால் கர்நாடகத்தின் உணவான ‘’ராகி முட்டே’’ தயார் !