எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நானாவித அலுவல்களில் ஈடுபடுபவர். காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருப்பார். எனக்கு அவரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 30 ஆண்டுகளாக அவர் அப்படித்தான். அவரது அலைபேசிக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அனைத்துக்கும் அவர் பதிலளிப்பார். எவ்வளவு கறாராக கணக்கிட்டாலும் அவருக்கு ஒரு நாளைக்கு 30 அழைப்புகளாவது வரும் ; அவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது மேற்கொள்வார். இது என்னுடைய கணக்கீடு. நண்பரிடம் கேட்டால் இதற்கு மூன்று மடங்கு எனக் கூறக் கூடும் ! ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள் வருகின்றனவே என்று அவர் சலிப்பு அடைந்ததில்லை ; எல்லா அழைப்புகளுக்கும் மிகப் பொறுமையாக பிரியமாக பதிலளிப்பார். அழைப்புகள் தவறிய அழைப்புகளாக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் மீண்டும் அழைத்துப் பேசுவார். கடந்த ஒரு வருடமாக நானும் அவரும் வாரத்துக்கு ஒரு நாளாவது சந்திக்கிறோம். அவரிடம் இருப்பது ஐ-ஃபோன். என்னிடம் இருப்பது சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி. தொழில்ரீதியில் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது ஆவணங்கள், வரைபடங்கள், இட அமைவுகள் ஆகியவற்றை அனுப்ப பெரும் உதவியாய் இருக்கும் என்பதை மிக மென்மையாய் எனக்கு சுட்டிக் காட்டினார். அவர் நயத்தக்க நாகரிகம் கொண்டவர். எதையும் எவரிடமும் வற்புறுத்த மாட்டார் ; ஒருவர் பிறர் சொல்லி கேட்பதை விட தானாகவே யோசித்தோ உணர்ந்தோ எடுக்கும் முடிவு சிறப்பானது எனப் புரிந்தவர். நான் அவரிடம் என்னிடம் ஜி.எஸ்.எம் அலைபேசியும் கணிணியும் இருப்பதால் மேற்படி விஷயங்களை மேலாண்மை செய்து விடுகிறேன் எனக் கூறினேன். உண்மையில் நான் இப்போது தீவிரமாகச் சிந்திப்பது இந்த ஜி.எஸ்.எம் ஃபோன் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு லேண்ட் லைன் தொலைபேசியை பயன்படுத்தலாமா என்பதைக் குறித்தே. நான் அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லி சொல்வேன். ‘’சார் ! எல்லாத்தையும் விட நமக்கு நம்ம மனநிலையும் உடல்நிலையும் முக்கியம் சார். நாம ஒவ்வொரு டயத்துல ஒவ்வொரு மாதிரியா இருப்போம். மனுஷ வாழ்க்கையோட அமைப்பு அந்த மாதிரி. நீங்க எந்த வெளித் தொந்தரவும் இல்லாம 30 நிமிஷம் பூஜை அறையில சாமி கும்பிடனும்னு நினைப்பீங்க. குழந்தைகளோட விளையாடணும்னு நினைப்பீங்க. எந்த விஷயத்தைப் பத்தியாவது முக்கிய முடிவு எடுக்கணும்னு அமைதியா யோசிப்பீங்க. இந்த மாதிரி மனநிலைகளை இன்ஃபுளூயன்ஸ் செய்யறது மாதிரி ஏதாவது ஃபோன் வரும். உங்க நம்பர் ஆயிரம் பேர்ட்டயாவது இருக்கும் ( நண்பர் சொன்னார் : ’’ஆயிரமா என்னப்பா இவ்வளவு கம்மியா சொல்ற. மினிமம் 10,000 பேர்ட்டயாவது என் நம்பர் இருக்கும்’’ ) யார் நம்மகிட்ட பேசப் போறாங்கன்னு நமக்குத் தெரியாது. வர்ர ஃபோன் கால் சாதாரணமா இருக்கலாம். பேசறவங்க அவங்க சொந்த சிக்கல் எதையாவது சொல்வாங்க. நம்ம மனநிலையை ரொம்ப ஸ்லைட்டா அது இன்ஃபுளூயன்ஸ் பண்ணா கூட மனசோட கிரியேட்டிவிட்டிக்கு அது பெரிய இடைஞ்சல். நீங்க ஃபோனை கம்மியா யூஸ் பண்ணனும் நினைக்க ஆரம்பிங்க சார். நீங்க இப்படி நினைக்க ஆரம்பிச்சாலே யூசேஜ் குறைஞ்சிடும்’’ என அவரிடம் கூறினேன். அவர் மிக நாசூக்காக ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது தொழில்ரீதியாகப் பயன் உள்ளது என்பதை மெல்லக் கூறுவதும் நான் அவருக்கு தடாலடியாக ஃபோன் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று சொல்வதும் நடக்கும். கடந்த ஒரு மாதமாக நண்பரின் ஃபோனுக்கு அழைத்தால் அவ்வப்போது ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று தகவல் தெரிவிக்கிறது அலைபேசி நிறுவனம். பொதுவாக ஒருவருக்கு ஃபோன் செய்து அவருடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தால் ஃபோன் செய்பவருக்கு சிறு சோர்வு உருவாவது இயல்பு ; ஆனால் எனக்கு நண்பரின் ஃபோன் அவ்வப்போது சுவிட்ச் ஆஃப் ஆவது நல்ல விஷயமே என்னும் மகிழ்ச்சி உருவானது.