Friday, 17 October 2025

ஸ்கைலேப்

 வீட்டில் இருந்து 1 கி.மீ தொலைவில் மரங்கள் அடந்த ஒரு பகுதி இருக்கிறது. நன்கு வளர்ந்த 5 புங்கன் மரங்கள் அங்கு உண்டு. அதில் 3 மரங்களின் கீழே ஒரு சிமெண்ட் பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. மதிய நேரத்திலோ மாலை நேரத்திலோ நான் அங்கு சென்று சிறிது நேரம் அமர்வேன். இன்று அமர்ந்திருந்த போது என்னருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தேவையான பண்டங்களை வாங்க இங்கே வந்திருக்கிறார். அவரிடம் எதிரில் இருக்கும் மரத்தில் சில பகுதிகளில் படர்ந்திருக்கும் மஞ்சள் நிறத்தில் பூ கொண்ட கொடியைக் காட்டி ‘’ அந்த கொடி என்ன அண்ணன்?’’ என்ற அறிவினாவைக் கேட்டு உரையாடலைத் தொடங்கினேன். மரத்தில் அவ்விதம் படர்ந்திருக்கும் கொடி புள்ளுருவி என்பதை நான் அறிவேன். உரையாடலைத் துவங்கும் முகமாக அவ்விதம் கேட்டேன். 

‘’அது புள்ளுவி தம்பி’’ என்றார் அவர். 

‘’அப்படினா?’’

‘’இது மரத்துல வளர்ற கொடி . பறவைகள் உடம்புல இதோட விதை ஒட்டிகிட்டு மரத்துக்கு மரம் போகும். இந்த புள்ளுவி மண்ணுல வளராது. மரத்துல ஒட்டிட்டு மரத்தோட தண்டுல இருந்து சத்தை எடுத்துக்கிட்டு வளரும். புள்ளுவி ஒரு மரத்தில பாஞ்சுட்டா அது அந்த மரத்தையே அழிச்சிடும். மரத்தில இருக்கற புள்ளுவியை மட்டும் அழிச்சா போது அது இருக்கற மரக்கிளையையே வெட்டி விட்டுற்றணும். அப்ப தான் மரம் பிழைக்கும். ‘’

’’ஓகோ அப்படியா’’ 

பின்னர் அவருடைய கிராமம் எது என்று கேட்டேன். அவர் கிராமத்தின் பெயரைச் சொன்னார். அந்த கிராமத்துக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நினைவுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 

’’உங்க பேர் என்ன அண்ணன்?’’

‘’ஸ்கைலேப்’’

எனக்கு இந்த பெயர் புதிதாக இருந்தது. நான் யோசித்துப் பார்த்தேன். பைபிளில் இந்த பெயர் இருக்கிறதா என என் மனம் துழாவியது. ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. 

‘’உங்க பேருக்கு என்ன அர்த்தம் அண்ணன்?’’

‘’இது அமெரிக்காவோட ராக்கெட் ஒண்ணோட பேரு. நான் 1979வது வருஷம் பிறந்தேன். அந்த வருஷத்துல அமெரிக்கா இந்த ராக்கெட்டை விண்வெளிக்கு ஏவுச்சு. ஆனா அந்த ராக்கெட் ஃபெயிலியர் ஆகி கடல்ல விழுந்துடுச்சு. அப்ப இது ஒரு பெரிய செய்தியா இருந்துச்சு. அதனால எனக்கு அந்த ராக்கெட்டோட பேர வச்சிட்டாங்க.’’

எனக்கு அவர் சொன்ன தகவல் மிகவும் புதிதாக இருந்தது. 

‘’உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நீங்க உங்க பேர் கேட்கப்பட்டு சொல்லப்படற ஒவ்வொரு தடவையும் நீங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் இந்த விளக்கத்தைக் கொடுத்திட்டே இருக்கீங்க இல்லையா?’’

‘’ஆமாம் தம்பி 46 வருஷமா என் பேருக்கு விளக்கம் சொல்லாத நாள் கிடையாது’’

‘’நீங்க கிருஸ்தவரான்னு எல்லாரும் கேப்பாங்களே?’’

‘’ஆமாம் தம்பி’’

நான் கேட்டேன் : ‘’நீங்க கிருஸ்தவரா?’’

‘’இல்ல தம்பி . ஹிந்து’’

‘’உங்களுக்கு பொன்னு பாத்தப்ப இந்த விளக்கம் எல்லாருக்கும் கொடுத்திருப்பீங்களே’’

‘’ஆமாம் தம்பி. பொன்னு வீட்டுக்காரங்களை சமாளிக்கறது பெரிய வேலை ஆயிடுச்சு.’’

’’உங்களுக்கு எட்வின் ஆல்ட்ரின் தெரியுமா?’’

அவர் யோசித்தார். 

‘’நிலவுக்கு அமெரிக்கா ஒரு விண்கலத்தை அனுப்புச்சு. அதுல போனவங்க ரெண்டு பேர். எட்வின் ஆல்ட்ரின் , நீல் ஆம்ஸ்ட்ராங். ஆக்சுவலா எட்வின் ஆல்ட்ரின் தான் கேப்டன். அவர் தான் விண்கலம் நிலவுக்குப் போனதும் நிலவுல முதல் காலடி எடுத்து வச்சிருக்கணும். ஆனா அவர் தயங்கிட்டார். அதனால நீல் ஆம்ஸ்ட்ராங் தன்னோட காலடியை நிலவுல வச்சார். இதன் மூலமா நிலவுல கால் வச்ச முதல் மனுஷனா நீல் ஆம்ஸ்ட்ராங் ஆனார். நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னார் : ‘’என்னோட ஒரு சின்ன காலடி. ஆனா மனுஷகுலத்துக்கு இது மிகப் பெரிய பாய்ச்சல்''

ஸ்கைலேப் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 

''கொஞ்ச வருஷம் முன்னாடி நாம விக்ரம் லேண்டரையும் பிரக்ஞான் ரோவரையும் நிலாவுக்கு அனுப்பினோம்.’’

’’ஆமாம் சார் நான் வீடியோ பார்த்தன்.’’ 

‘’உங்க பேருக்கு அர்த்தம் கேக்கப்படற ஒவ்வொரு தடவையும் நீங்க மனிதனோட விண்வெளி முயற்சிகள் பத்தி கேக்கறவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. அந்த பரப்புரைக்கு அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வாய்ப்பா பயன்படுத்திக்கீங்க’’

ஸ்கைலேப் சிரித்தார். 

’’உங்களுக்கு இந்த பேரை வச்சுது யாரு?’’

‘’என்னோட சித்தி சார்’’

‘’அவங்க நியூஸ் பேப்பர் படிக்கற வழக்கம் உள்ளவங்களா?’’

‘’ஆமாம் சார் எப்போதும் ஏதாவது படிச்சுக்கிட்டே இருப்பாங்க’’

ஸ்கைலேப்பின் சித்தி குறித்த உளச்சித்திரம் ஒன்றை கற்பனையில் எழுப்பிக் கொண்டேன். யோசித்துப் பார்த்தால் ஸ்கைலேப் ராக்கெட் இலக்கை எட்டவில்லை ; தனது பயணத்தில் பாதியில் திசைமாறி ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது. இருப்பினும் சித்தி அதனை தோல்வியின் சின்னமாகப் பார்க்கவில்லை ; முயற்சியின் சின்னமாகப் பார்க்கிறார். அது ஒரு ஆக்கபூர்வமான பார்வை என்று எனக்குப் பட்டது. அந்த சித்தியை ஒரு கதாபாத்திரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது.