இந்திய நிலத்தில் மோட்டார்சைக்கிள் பயணங்கள் நிகழ்த்திய போது காலை 6 மணிக்குத் துல்லியமாக கிளம்பி விடுவேன். ஆறு மணிக்கு ஒரு நிமிடம் இரு நிமிடம் பத்து நிமிடம் என முன்னதாகக் கிளம்புவேனே தவிர ஒரு நாளும் காலை 6 ஐ தாண்ட மாட்டேன். அது ஒரு சிறப்பான நிலை. காலை மணி 6 க்கும் 6.01க்கும் இடையே இருப்பது 60 வினாடிகள் தான் எனினும் காலை மணி 6 என்பது மிகவும் சிறப்பானது. எனது பெரும்பாலான மோட்டாட்சைக்கிள் பயணங்கள் காலை 6 மணிக்குத் துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைபவை.
300 கி.மீ அளவிலான ஒரு மோட்டார்சைக்கிள் பயணத்தை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாக இருந்தது. எனக்கு திருச்சிராப்பள்ளியில் ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. மோட்டார்சைக்கிளில் சென்று வரலாம் என எண்ணினேன். வழக்கமான சாலையை விட ஒரு புதிய சாலையில் செல்லலாம் எனத் தோன்றியது. என் ஊரிலிருந்து 40 கி.மீ சுற்றளவில் உள்ள எல்லா சாலைகளும் வாரத்தில் ஒரு முறையாவது நான் பயணிக்கும் சாலைகளே . கிழக்கு திசையில் 25 கி.மீ ல் கடல் வந்து விடும். மேற்கு திசையில் 35 கி.மீல் குடந்தை. வடக்கே 40 கி.மீ தொலைவில் சிதம்பரம். தெற்கே திருவாரூர். 40 கி.மீ பயணிக்கவில்லை எனினும் ஏதேனும் பணி நிமித்தம் ஒவ்வொரு திசையிலும் 20 கி.மீ பயணமாவது நடக்கும்.
இன்று காலை 7 மணிக்குப் புறப்பட்டேன். ஊரிலிருந்து காட்டுமன்னார்குடி. அங்கிருந்து மீன்சுருட்டி ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் லால்குடி வழியே திருச்சி சென்றேன். காலை 11 மணிக்கு திருச்சியில் இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய ‘’பாரத் தர்ஷன்’’ பயணம் மேற்கொண்ட போது இந்த மார்க்கம் வழியாகவே சென்றேன். இந்த மார்க்கத்தில் உள்ள கிராமங்களும் நிலக்காட்சிகளும் என் மனதுக்கு என்றும் இனியவை. வழி நெடுக சோளம் பயிரிடப்பட்டு அறுவடை ஆகிக் கொண்டிருந்தது. சோள அறுவடை மெஷின்கள் மும்மரமாக இயங்கிக் கொண்டிருந்தன. நண்பரின் வீட்டில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கல்லணை பூம்புகார் சாலையைப் பிடித்து வந்து கொண்டிருந்தேன்.
கல்லணையில் ‘’காவிரி தகவல் மையம்’’ என ஓர் அரசுக் கட்டிடம் இருந்தது. பெயர்ப்பலகையைக் கண்டதும் அதனுள் செல்ல விரும்பினேன். பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக இயக்கத்தில் இல்லை எனக் கூறினார்கள். அங்கிருந்து திருவையாறு வந்தேன். அங்கே மதிய உணவு. பின்னர் குடந்தை. அங்கிருந்து மயிலாடுதுறை. வீட்டுக்கு வந்த போது நேரம் மாலை 5.50.