நூல் : மரங்களின் மறைவாழ்வு ஆசிரியர் : பீட்டர் வோலிபென் மொழியாக்கம் : லோகமாதேவி பக்கம் : 318 விலை : ரூ. 390 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669,கே.பி.சாலை, நாகர்கோவில்.
ஒரு கைப்பிடிக் காட்டு மண்ணில் இந்த பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஒரு தேக்கரண்டி காட்டு மண்ணில் பல மைல் நீளமுள்ள பூஞ்சை இழையங்கள் இருக்கின்றன. - பீட்டர் வோலிபென்
வாழ்க்கையின் சில தருணங்கள் நமக்குப் புதிதாக சில விஷயங்களைக் காட்டும் போது உணர்த்தும் போது நாம் வியப்படைவோம் ; சில சமயங்களில் ஆழமான அதிர்ச்சியும் அடைவோம். பீட்டர் வோலிபென் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலை வாசித்த போது நான் வியப்படையவும் செய்தேன். அதிர்ச்சி அடையவும் செய்தேன். இதுநாள் வரை மரங்கள் குறித்து அறிந்திருந்தது எத்தனை எல்லைக்குட்பட்டது என்பதை இந்நூலின் வாசிப்பு எனக்குக் காட்டியது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன் மரங்களை நான் நோக்கிய விதத்துக்கும் இந்தப் புத்தகத்தை வாசித்த பின் மரங்களை நான் நோக்கும் விதத்துக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கிறது.
ஒரு தனி மனிதனைப் போல மரத்தை தனி மரம் என்று அத்தனை தீர்க்கமாக வரையறுத்துக் கூற முடியாது. எந்த மரமும் தனி மரம் அல்ல. அதன் பூக்கள் காற்றில் பறந்து பரவுகின்றன. விதைகள் பறவைகள் மூலமும் பிராணிகள் மூலமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்கின்றன. புவியின் மேற்பரப்பில் சற்று இடைவெளியுடன் இருக்கும் மரங்கள் கூட புவிக்குக் கீழே வேர்வெளியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன. மரங்களின் வேர் முடிச்சுகளில் இருக்கும் பூஞ்சைகள் ஓர் வனத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மரங்களையும் இணைக்கின்றன.
மரங்கள் கூட்டு வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு மரம் இன்னொரு மரம் பலவீனமாக இருந்தால் அதற்கு உணவளித்து உதவுகிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையை மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சைகள் மூலம் பலவீனமாக இருக்கும் மரத்துக்கு அனுப்புகிறது. அதே பூஞ்சை வலைப் பின்னல் மூலம் காட்டில் வெட்டப்பட்டு துண்டாகக் கிடக்கும் மரங்களுக்கும் உணவளித்து அவை உயிருடன் இருக்க உதவுகிறது.
தண்ணீருக்காக மரங்களின் வேர்கள் ஒலியெழுப்புகின்றன. மரங்கள் தங்களுக்குள் மீயொலி மூலம் பேசிக் கொள்கின்றன. பட்டை உரிந்து வலியுடன் இருக்கும் மரங்களுக்கு மற்ற மரங்கள் ஆதரவளிக்கின்றன. தங்கள் நிழலில் வளரும் மரங்கள் நீண்ட காலம் உயிர்த்திருக்கவும் தேவை ஏற்பட்டால் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து தனது வளர்ச்சி பாணியை புதிதாக மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றன.
மாந்தரின் இனப் பெருக்கத்தில் லட்சக்கணக்கான அணுக்களில் ஒன்று மட்டும் கருவாக உருவாவதைப் போல ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான விதைகளில் ஒன்று மட்டுமே முளைத்து மரமாகும் வாய்ப்பைப் பெறுகிறது.
நூற்றுக்கணக்கான ஜீவராசிகள் தன்னைச் சார்ந்து வாழும் நிலையை அந்த உயிர்களுக்கு வழங்குகிறது வனத்தின் ஒவ்வொரு மரமும்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் தோறும் நாம் இதுவரை மரங்கள் குறித்த அறியாமையையே இத்தனை நாள் கொண்டிருந்தோம் என்னும் உண்மையை உணர்வோம்.
நாம் ஒரு மரம் குறித்து முழுமையாக அறிந்தோம் என்றால் புவியின் சாரம் குறித்து ஒரு கைப்பிடியளவு அறிகிறோம் எனத் துணிந்து சொல்லலாம்.