Saturday, 4 October 2025

மூன்று விவசாயிகள்

எனது நண்பர் ஒருவர் விவசாயி. அவரை அவ்வப்போது சந்திக்கச் செல்வேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பூம்புகார் கடற்கரைக்குச் செல்வோம். பூம்புகார் செல்ல வேண்டும் எனத் தோன்றினால் அவருக்கு ஃபோன் செய்வேன். அவர் கிராமம் கடற்கரைக்கு அருகில் இருக்கிறது. அவர் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு செல்வேன். நேற்று ஃபோன் செய்த போது தனது வயலை உழுது கொண்டிருப்பதாகக் கூறினார். நான் அவர் வயலுக்குச் சென்றேன். நாகப்பட்டினம் - சிதம்பரம் சாலையில் பிரதான சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அவர் வயல் இருக்கிறது. தமிழ்நாட்டின் மிக அதிக வளைவுகள் கொண்ட சாலை நாகப்பட்டினம் - சிதம்பரம் சாலை. காவிரி வடிநிலப் பகுதி என்பதால் இங்கே அனைத்து சாலைகளும் எண்ணிக்கையில் அதிகமான வளைவுகளைக் கொண்டிருக்கும். இப்போது சாலைகள் அகலமாக்கப்பட்டு பிரும்மாண்டமான சாலைகளாக இருக்கின்றன. வளைவுகள் மிகச் சிறிய எண்ணிக்கைக்கு குறைக்கப்பட்டுள்ளன. புறவழிச் சாலை இப்போது நண்பரின் வயலுக்கு 100 மீட்டர் தொலைவுக்கு வந்து விட்டது. கை டிராக்டர் வயலை உழுது கொண்டிருந்தது. 

அவரது வயலில் விவசாயப் பணியாளர்கள் இருவர் வேலை செய்து விட்டு கரையேறி இருந்தனர். ஊதியத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். நண்பர் கை டிராக்டர் இயக்குபவருடன் சேர்ந்து அதனைக் கழுவிக் கொண்டிருந்தார். நான் விவசாயப் பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். 

‘’அண்ணன் ! எலெக்‌ஷன் வருது. யாருக்கு ஓட்டு போடறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?’’ என பேச்சைத் துவக்கினேன். 

‘’1967ல இருந்து நான் ஒரு கட்சிக்கு மட்டும்தான் ஓட்டு போட்டிருக்கன்’’

‘’நீங்க சொல்றது உண்மை போல தெரியும் ; ஆனா உண்மை இல்ல அண்ணன்’’

விவசாயத் தொழிலாளர் யோசித்தார். 

‘’நீங்க கட்சியில பொறுப்புல இருக்கிறீங்களா?’’

‘’இல்ல தம்பி ‘’ 

‘’கட்சி மெம்பரா ? கட்சிக்கரை போட்ட வேட்டி கட்டுவீங்களா?’’ 

‘’அதெல்லாம் கிடையாது தம்பி. ஆதரவு மட்டும் தான்’’

‘’உங்க தொகுதியில நீங்க மானசீகமா இருக்கற கட்சி மட்டுமா அறுபது வருஷமா தனித்து போட்டி போட்டிருக்கு ? கூட்டணிக் கட்சிகளுக்கு உங்க தொகுதியை பல தடவை கொடுத்திருக்காங்க இல்லயா?’’

விவசாயத் தொழிலாளர் யோசித்துப் பார்த்து விட்டு நான் எண்ணுவதைப் புரிந்து கொண்டு ‘’ஆமாம் தம்பி’’ என்றார். 

‘’அப்ப நீங்க ஒரு கட்சிக்கு மட்டும் ஓட்டு போட்டது இல்ல. நிறைய கட்சிக்கு ஓட்டு போட்டிருக்கீங்க. ஆனா இப்பவரைக்கும் ஒரே கட்சின்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க’’

விவசாயத் தொழிலாளர் அமைதியாக இருந்தார். 

‘’எந்த கட்சிக்கு வேணாலும் ஆதரவாளரா இருங்க அண்ணன்! ஆனா ஓட்டு போடும் போது அப்பப்ப என்ன சூழ்நிலை இருக்கோ அத அனுசரிச்சு ஓட்டு போடுங்க. ஒரு கட்சிக்கு மட்டும்தான் ஓட்டு போடணும் நினைச்சா அது உங்களுக்குத்தான் நஷ்டம். இப்ப கிராமத்துல நீங்க இருக்கற பகுதியில 500 ஓட்டு இருந்தா அரசியல்கட்சிகளுக்கு இதுல 300 பேர் இந்த கட்சிக்கு ஓட்டு போடுவாங்க. 150 பேர் இந்த கட்சிக்கு போடுவாங்க. 30 பேர் இவங்களுக்கு போடுவாங்கன்னு தெரியும். அந்த அந்த கட்சியும் அதை அப்படியே மெயிண்டன் பண்ண செய்வாங்க. முடிஞ்சா அதிகப்படுத்துவாங்க இல்லன்னா குறையாம பாத்துப்பாங்க. 300 ஆதரவாளர் இருக்கற கட்சி இந்த ஏரியால நமக்கு எப்படியும் அதிக ஓட்டு வந்துறும்னு அங்க செஞ்சு கொடுக்க வேண்டிய எந்த விஷயமும் செய்ய மாட்டாங்க. 150 ஓட்டு வச்சிருக்கற கட்சி இந்த ஏரியால நமக்கு அதிக ஓட்டு இல்லன்னு எதுவும் செய்யமாட்டாங்க. நீங்க 500 பேரும் சூழ்நிலையை அனுசரிச்சு ஓட்டுப் போடுவீங்கன்னா எல்லா கட்சியும் உங்க கிட்ட வரும். உங்க பகுதிக்கு என்ன செய்ய முடியும்னு பாத்து வேலை செய்வாங்க’’

அறுபது ஆண்டுகளாக அவர் எடுக்கும் முடிவுக்குப் பின்னால் யோசிக்க வேண்டிய இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என அவர் யோசிக்கத் தொடங்கினார். 

’’அண்ணன்! இந்த மண் களிமண்ணா இருக்கே. இத இரு மண்ணா மாத்த முடியுமா?’’

‘’மக்குன சாண எரு , மக்குன குப்பை, மக்குன எரு தழை இதெல்லாம் கொட்டுனா நிச்சயமா ஒரு வருஷம் ரெண்டு வருஷத்துல மண்ணோட தன்மை மாறும். ’’

புறவழிச்சாலைப் பணிகளுக்கு நெய்வேலியிலிருந்து பழுப்பு நிலக்கரி சாம்பல் கொண்டு வந்து கொட்டப்படுவதை வரும் வழியில் பார்த்திருந்தேன். 

‘’மண்ணுல ஃபிளை ஆஷ் கொட்டுனாலும் மண் இருமண் ஆகுமா?’’

‘’ஆகும் தம்பி’’ 

’’மண் இருமண் ஆனா கம்பு, கேழ்வரகு பயிர் செய்ய முடியும் இல்லயா?’’

‘’பண்ணலாம் தம்பி . கோடையில பண்ணலாம்’’

‘’விவசாயி ஒரே மாதிரி பயிர் பண்ணக் கூடாது. ஊர்ல எல்லாரும் நெல் பயிர் பண்றீங்க. கையிருப்பு தேவைக்கு மேலே போயிடும். உபரியா நெல் இருந்தா விலை கிடைக்காது. எந்த பயிர் ஷார்ட் சப்ளையா இருக்கோ அதுக்குதான் விலை கிடைக்கும்.’’

‘’நீங்க சொல்றது உண்மைதான் தம்பி ‘’ என்றனர் இருவரும்.  வண்டியைக் கழுவி முடித்த நண்பர் வந்து இருவருக்கும் அன்றைய ஊதியம் கொடுத்து அனுப்பினார்.

நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற போது  மாலை நேரம் 6 மணி. வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். உள்ளே கந்த சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது. 

வேக வைத்த மரவள்ளிக் கிழங்கை மிளகாய்த்தூள் தூவி எனக்கும் நண்பருக்கும் கொண்டு வந்து கொடுத்தனர். 

‘’இந்த மரவள்ளிக் குழங்கு லட்சக்கணக்கானோர் உயிரை சாவிலிருந்து காத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா’’ என்று நண்பரிடம் கேட்டேன். 

நண்பருக்கு அந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை. 

‘’மரவள்ளிக் கிழங்கு நம் நாட்டுப் பயிர் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?’’ என்று கேட்டேன்.

அதுவும் நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

‘’அதாவது இந்த கிழங்கின் கூழில் ஸ்டார்ச் அதிகம். போர்ச்சுகீசியர்கள் இதனை துணிக்கு கஞ்சி போட பயன்படுத்தினர். அவர்கள் மூலம் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு இப்பயிர் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் தாது வருஷப் பஞ்சம் வந்த போது திருவிதாங்கூர் மன்னர்கள் அவர்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சித் தொட்டிகள் திறந்து மரவள்ளிக் கிழங்கு கஞ்சியை மக்களுக்கு அளித்து தங்கள் பிரஜைகள் உயிரைக் காத்தார்கள். மக்கள் புதிய உணவு என அருந்தத் தயங்கிய போது திருவிதாங்கூர் மன்னர் நேரடியாக கஞ்சித் தொட்டிக்கு வந்து அவரே அதனை அருந்தி மக்கள் தயக்கத்தைப் போக்கினார். இன்று கேரளாவில் முக்கிய உணவாக மரவள்ளிக் கிழங்கு இருக்கிறது. ‘’

நாங்கள் கிழங்கு அருந்திக் கொண்டிருந்த போது நண்பரின் சகோதரரின் மகன் அங்கே வந்து எனக்கு வணக்கம் சொன்னான். நான் என் அருகில் அவனை அமர்த்திக் கொண்டேன். 

நான் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது அவன் பிறந்தான். அன்று மருத்துவமனைக்குச் சென்று அவனைக் கைக்குழந்தையாகப் பார்த்தது அவனை ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் என் நினைவில் எழும். 

‘’இப்ப என்ன படிக்கற’’

’’பி.எஸ்சி கெமிஸ்ட்ரி ஃபைனல் இயர்’’

‘’படிச்சுட்டு என்ன செய்யப் போற?’’

‘’காம்பெடிடிவ் எக்ஸாம் எழுதப் போறன்’’

’’தம்பி! மேல ரெண்டு வருஷம் மாஸ்டர்ஸ் படி.’’

அவன் யோசித்தான். 

’’தம்பி! இந்தியாவில 100 பேர் டிகிரி படிச்சா அதுல 10 பேர்தான் மாஸ்டர்ஸ் பண்றாங்க. 1 த்தர் தான் பி ஹெச் டி பண்றாங்க. நீ பி ஹெச் டி பண்ணா அதுல கிரவுட் கம்மி. ஈஸியா டீச்சிங் லைன்ல போயிடலாம். யோசிக்காம பி ஹெச் டி வரைக்கும் படி. திருவாரூர்ல மத்திய அரசாங்கத்தோட செண்ட்ரல் யுனிவர்சிட்டி இருக்கு. அதுல நம்ம மாநிலத்துக் காரங்க ரொம்ப கம்மியா சேர்ராங்க. அங்க அட்மிஷன் கிடைச்சா காலேஜ் ஃபீஸ் , ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் பில் எல்லாம் மத்திய அரசாங்கமே கட்டிடும். ஜனவரில எண்ட்ரெண்ஸ் எக்ஸாம் இருக்கும். அத எழுதனும். என்னோட ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்க. ஒரு தடவைக்கு மூணு தடவை ஃபோன் பண்ணாதான் நான் எடுப்பன். இந்த விஷயமா என்ன வேணும்னாலும் காண்டாக்ட் பண்ணு’’