நான் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவன். அந்த நம்பிக்கையை எனது மூதாதை பாரதியிடமிருந்து நான் இளம் வயதில் பெற்றுக் கொண்டேன். தேசம் முழுமைக்கும் சிந்திக்கும் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் சிந்திக்கும் அரசியலே தேசிய அரசியல். இந்திய ஜனநாயகம் எல்லா விதமான அரசியல் சக்திகளையும் தனது கூடாரத்தின் கீழ் கொண்டு வருகிறது ; அதில் மொழி ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஜாதி ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். தொழிலாளர் யூனியன்களை கையில் வைத்துக் கொண்டு அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். மத ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் அதிகாரம் மையப்புள்ளி. அதனை நோக்கி பல்வேறு விதமான குழுக்கள் முன்னேறி வருவது ஜனநாயகத்தின் இயல்புகளில் ஒன்று. அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அரசியல் கட்சிகளின் விருப்பங்களில் ஒன்று எனினும் அதிகாரம் செயல்படும் விதம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடன் முடிந்து விடும் ஒன்று அல்ல. நுணுக்கமாக கவனித்துப் பார்த்தால் ஜனநாயக அரசியலில் உண்மையான அதிகாரம் உயர் அதிகாரிகளிடமும் அரசு ஊழியர்களிடமும் மட்டுமே இருக்கிறது. அவர்களே பல ஆண்டுகள் பணியில் இருப்பவர்கள். எல்லா அரசியல்வாதிகளும் ஐந்தாண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும். மீண்டும் தொடர மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டும். இந்திய அரசியலைப் புரிந்து கொள்ள இந்தப் புள்ளியை புரிந்து கொள்ளுதல் அவசியம் என நினைக்கிறேன்.
தேசியக் கட்சிகள் அரசியலை நோக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் பிராந்தியக் கட்சிகள் செயல்படுத்துவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. அனைவருமே அதிகார அரசியலில் இருக்கின்றனர் என்றாலும் இந்த வேறுபாடு ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என்னும் நிலையில் இருக்கவே செய்யும்.
பிராந்திய அரசியலை செய்யும் பிராந்தியக் கட்சிகள் தங்கள் பிராந்தியத்தின் அரசியலை தாங்கள் மட்டுமே செய்ய முடியும் என எண்ணத் தொடங்குகின்றன ; நம்ப முற்படுகின்றன. தங்கள் பிராந்தியத்தில் அவர்கள் வலுவானவர்களாக இருக்கலாம். தங்கள் பிராந்தியத்தின் முழு அரசியலையும் தங்கள் கையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் பிராந்தியத்தில் அவர்களால் பெரும் முன்னேற்றத்தையோ அல்லது வளர்ச்சியையோ உருவாக்கிட முடியாது. ஏனென்றால் பிராந்திய சக்திகளுக்கு சமூகங்களைப் பிரிக்க மட்டுமே தெரியும். மக்களைப் பிரித்து அவர்களைத் தனித்தனியாக வைத்துக் கொண்டு அதன் மூலம் அரசியல் அதிகாரத்துக்கு அவர்களுக்கு வரத் தெரியும். இவ்விதமான சக்திகள் நன்றாக அறிந்த விஷயம் என்பது தங்கள் பிராந்தியம் வளர்ச்சி பெறும் எனில் வளர்ச்சி அடைந்த சமூகத்தின் மக்கள் தங்களை எளிதில் புறக்கணிப்பார்கள் என்பதாகும். எனவே வளர்ச்சியை உருவாக்கும் எந்த பணியையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை என்பதே உண்மை.
நான் இங்கே தேசியக் கட்சிகள் எனக் குறிப்பிடுவது காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம், பாரதிய ஜனதா ஆகிய மத்திய அதிகாரத்துக்கு வந்த கட்சிகளையும் மத்திய அதிகாரத்துக்கு வராத பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை அனைத்தையும் தான்.
எனது நண்பர் ஒருவர் பிராந்தியக் கட்சி ஒன்றின் உறுப்பினர். அவருக்கு தேசியக் கட்சிகள் மீதும் தேசியம் மீதும் சிறு இளக்காரம் எப்போதும் உண்டு. அவர் புரிந்து கொள்ள வேண்டியது ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என்பதையே.
பின்குறிப்பு (1) :
நாடெங்கும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கும் தேசியக் கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜ.க ஆகிய கட்சிகள் உள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநிலக் கட்சிகளின் பட்டியலில் இருக்கும் கட்சிகளில் பல ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்பட்டாலும் தேசியத்தின் மீது முழு நம்பிக்கை கொண்ட கட்சிகள். உதாரணம் : திருணமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகியவை.
பின்குறிப்பு (2)
தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சி என்னும் கட்சி இடம் பெற்றுள்ளது. கான்ராட் சங்மா தலைவராக உள்ள அந்த கட்சி மேகாலயா தவிர மற்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிடுவதாலும் அந்த மாநிலங்களில் கணிசமான வாக்குகளைப் பெறுவதாலும் தேசியக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
பின்குறிப்பு (3)
பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் உத்திரப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் சக்திகள். 3 முறை சமாஜ்வாதி கட்சியும் 4 முறை பகுஜன் சமாஜ் கட்சியும் அந்த மாநிலத்தை ஆண்டுள்ளன. பிற மாநிலங்களிலும் அவை செயல்படுகின்றன. எனினும் பகுஜன் சமாஜ்க்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. அரசியல் தெரிந்த எனது நண்பர் அதற்கான காரணத்தை யூகித்துக் கொள்வார் என எண்ணுகிறேன்.