Tuesday, 18 November 2025

கோடுகள் சித்திரங்கள்

 அரவிந்த் குப்தா இணையதளத்திலிருந்து தினமும் ஏதாவது ஒரு சிறுநூலை வாசிப்பதை கடந்த சில நாட்களாக வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதிலும் படங்கள் வரையப்பட்டிருக்கும் நூல்களை அதிகம் தெரிவு செய்கிறேன். கணிணியில் சித்திர நூல்கள் வாசிப்பது விருப்பத்துக்குரியதாக இருக்கிறது. 

இன்று மண்மூட்டைகளாலும் வைக்கோல் கட்டுகளாலும் வீடு கட்டும் முறையை ஒரு நூலில் கண்டேன். என்னுடைய தொழில் கட்டிடக் கட்டுமானம். இன்று கட்டுமானம் மிகச் செலவேறிய ஒன்றாக ஆகியிருக்கிறது. மண்மூட்டைக் கட்டுமானம் என்பது மண்மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி செங்கல் கட்டுமானம் போல் எழுப்புவது. செங்கல் அளவில் சிறியது என்பதால் ஒரு கல்லுக்கும் இன்னொரு கல்லுக்கும் இடையே சேறு அல்லது சிமெண்ட் பூச்சை இணைப்புப் பசையாகப் பயன்படுத்த வேண்டும். மண்மூட்டைக் கட்டுமானத்தில் அது அவசியமில்லை. ஒரு மூட்டை மேல் இன்னொரு மூட்டையை வைக்கலாம். ஒன்றின் பக்கத்தில் இன்னொன்றை வைக்கலாம். அதன் மிகுஎடையின் காரணமாக ஒன்றன் மேல் ஒன்றாக அவை படிந்து கொள்ளும். 

இப்போது வயல்களில் அறுவடைக்குப் பின் எஞ்சும் வைக்கோல் எந்திரங்கள் மூலம் சுருள் வடிவில் சுருட்டப்படுகின்றன. அவ்விதமான வைக்கோல் சுருள்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வீடு கட்டும் முறை ஒன்றை ஒரு நூலில் கண்டேன். நம் நாட்டில் அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சும் வைக்கோலை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். அது மிக அதிக கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது. வைக்கோல் சுருள்கள் கட்டுமானத்தில் பயன்படுமானால் கட்டுமானச் செலவு பெருமளவில் குறையும். 

பொருளியல் வளர்ச்சி நுகர்வு மனநிலையை தீவிரமாக்குகிறது. பொருளியல் வளர்ச்சிக்கும் நுகர்வுக்கும் பிரக்ஞை என்னும் கடிவாளம் தேவை. அவ்விதம் இருந்தால் மட்டுமே அது ஆக்கபூர்வமாக இருக்கும். இல்லையேல் அது அனைவருக்கும் அழிவைக் கொண்டு வரும்.