Monday, 17 November 2025

மழையில் மேற்கொண்ட பணி (நகைச்சுவைக் கட்டுரை)

இரண்டு நாட்களாக நல்ல மழை. இன்று திங்கள். வாரத்தின் முதல் நாள். செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் மனதில் வரிசை கட்டி நின்றன. எனது தொழிலில் வேலையில் என்னுடைய பகுதியை மட்டும் நான் செய்து முடித்தால் போதாது. அதனுடன் தொடர்புடைய மற்றவர்களும் அவர்கள் பணியைச் செய்திருக்க வேண்டும். என்னுடைய பணியை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்து விட்டு அடுத்தவர்கள் அவர்கள் பகுதியைச் செய்யட்டும் எனக் காத்திருக்க வேண்டும். சமயத்தில் இவ்விதம் காத்திருப்பதே பணி என்றாகி விடும்.  

சென்ற வாரம் ஒரு பெரிய சொத்து தொடர்பான ஆவணங்களை ஊரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஊரில் இருக்கும் ஒரு வழக்கறிஞரிடம் சட்ட அபிப்ராயம் தெரிந்து கொள்ள கொடுத்திருந்தேன். ஊரில் ஏற்கனவே இரண்டு பேரிடம் சட்ட அபிப்ராயம் கேட்டுக் கொண்டேன். பெரிய சொத்து என்பதாலும் மதிப்பும் பெரியது என்பதாலும் 1 க்கு 3 பேரிடம் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தேன். நான் சந்தித்த வழக்கறிஞர் ‘’சார் ! நான் செல்ஃபோன் ரொம்ப குறைவா யூஸ் பண்ணுவன்’’ என்றார். ‘’நானும் அப்படித்தான் சார்’’ என்றேன். ‘’கோர்ட்ல இருக்கும் போது கிளைண்ட் கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஃபோன் எடுக்க மாட்டன்’’என்றார். ‘’நான் எஸ்.எம்.எஸ் பண்றன் சார் ‘’ என்றேன். 

இன்று காலை நினைவுபடுத்தல் குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரிடமிருந்து பதில் வந்தது. இன்று மாலை 6.30க்கு அலுவலகத்தில் சந்திக்கவும் என்று. இன்று முழுக்க மழை. மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து ஒரு குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். மழை என்பதால் பேருந்தில் பயணம் செய்ய விரும்பினேன். பேருந்து நிறுத்தத்தில் சென்று நின்றதுமே பேருந்து வந்தது. இன்று கிளம்பும் போது பயணச்சீட்டுக்கான தொகையை நாணயங்களாக பாக்கெட்டில் வைத்திருந்தேன். ரூ.1, ரூ.2 நாணயங்கள். இப்போது ரூபாய் நாணயங்களின் அளவு மிகவும் சிறிதாகி விட்டது. இரண்டு நாணயங்களும் ஒரே அளவில் இருக்கின்றன. என்ன எழுதியிருக்கிறது என்பதை கண் கூர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. வயதாகி விட்டதோ ? பயணச்சீட்டுக்குத் தேவையான நாணயங்களைக் கொடுத்து சீட்டு பெற்றுக் கொண்டேன். 

விதவிதமான மக்கள் உடன் பயணித்தனர். எனக்கு பல விதமான மக்களைப் பார்ப்பதும் அவர்களுடன் உடனிருப்பதும் மகிழ்ச்சிக்குரியவை எப்போதும். 

இறங்க வேண்டிய இடம் வந்தது. 

இறங்கி வழக்கறிஞர் அலுவலகம் நோக்கி நடந்தேன். மழை கொட்டிக் கொண்டிருந்தது. இந்த மழையில் வீட்டிலிருந்து கிளம்பி வந்திருப்பாரா என்ற ஐயம் ஏற்பட்டது. செல்ஃபோன் மூலம் இருக்கிறாரா எனக் கேட்டு விட்டு கிளம்பியிருக்கலாமோ என விசனப்பட்டேன். அவர் அலுவலகம் முன் சென்ற போது நேரம் 6.20. குறித்த நேரத்துக்கு 10 நிமிடம் முன்னதாகவே வந்து விட்டேன் என்ற நிறைவுடன் உள்நுழைந்தேன். வழக்கறிஞர் சில வினாடிகளுக்கு முன்பு தான் வந்திருந்தார். தனது ரெயின் கோட்டை கழற்றி தன் இரு சக்கர வாகனத்தின் மேல் வைத்துக் கொண்டிருந்தார். 

இருவரும் ஒன்றாக அலுவலகம் உள்ளே சென்றோம். 

ஆவணங்கள் குறித்த அவரது அவதானங்களைச் சொன்னார். விஷயத்தை நுணுக்கமாக அணுகியுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டேன். அவரிடம் ஆவணங்களைப் பெற்று பேருந்து நிறுத்தம் வந்து பேருந்தில் ஏறி ஊர் வந்து மழையில் குடை பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.