உலகியல் மிகவும் சுவாரசியமானது ; அதிலிருந்து சற்று தள்ளி இருந்தால். இன்று மண் மூட்டைகளையும் வைக்கோல் சுருள்களையும் கொண்டு கட்டுமானங்களை எழுப்பும் முறை குறித்து வாசித்தேன். அவை மிகவும் ஆர்வமூட்டின. சில நிமிடங்களுக்குப் பின் எனக்கு இரு யோசனைகள் தோன்றின. அந்த யோசனைகளும் சுவாரசியமானவை. அவை மனதில் உதித்த விதமும் சுவாரசியமானது.
அரிசி ஆலைகளில் கரித்தூள் மிக அதிக அளவில் இருக்கும். நெல்லைப் புழுங்கல் அரிசியாக ஆக்குகையில் பாய்லர் மூலம் நீரை ஆவியாக்க கரியை எரிப்பார்கள். கரி எரிந்து கரித்தூளாக எஞ்சும். உமியையும் எரிப்பதுண்டு . அதுவும் கரித்தூளாக எஞ்சும். கரித்தூள் அவர்களுடைய ஆலையில் குவிந்து கிடக்கும். அது வயலுக்கு நல்ல உரம். விவசாயிகள் அதனை எடுத்துச் சென்று ஆலையிலிருந்து அவற்றினைக் காலி செய்தாலே போதும் என ஆலையில் இருப்பவர்கள் நினைப்பார்கள். மண் மூட்டைகளை இந்த கரித்தூள் மூட்டைகளால் பதிலி செய்யலாம். ( எனது ஆலோசனையின் படி தனது 3 ஏக்கர் நிலத்தில் 1000 தேக்கு மரங்கள் நட்ட ஐ.டி கம்பெனி ஊழியர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது வயலில் அரிசி ஆலையின் கரித்தூளைக் கொண்டு வந்து கொட்டுகிறார். போக்குவரத்து செலவு கணிசமாக ஆகிறது என்பதால் நான் அதனை ஆதரிப்பதில்லை. இருப்பினும் அவர் அதிகம் தனது வயலில் கரியைக் கொண்டு வந்து கொட்டுகிறார்).
அனல் மின் நிலையங்களில் ஃபிளை ஆஷ் எஞ்சும். அதனை மூட்டைகளில் நிரப்பி அந்த மூட்டைகளைக் கொண்டு வீடு கட்டலாம். ஃபிளை ஆஷ் கற்கள் கட்டுமானத் தொழிலில் பயன்பாட்டில் உள்ளன.
அரிசி ஆலைகளின் கரித்தூள் தேக்கு பண்ணை வழியாகவும் ஃபிளை ஆஷ் எனது தொழிலின் வழியாகவும் என் கவனத்துக்கு வந்தவை. அவற்றின் மூலம் மாற்று கட்டுமான சாதனங்களில் நானும் என் சிந்தனையை முன்வைத்திருக்கிறேன்.