Wednesday, 12 November 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

18 வயது நிரம்பியவுடன் நான் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டேன். அப்போதே இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றேன். அதன் பின் என்னுடைய 12ம் வகுப்பு பள்ளிச் சான்றிதழை சான்றாக அளித்து வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயரை இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பித்தேன். என் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. 1999ம் ஆண்டிலிருந்து என்னுடைய வாக்கைச் செலுத்தி வருகிறேன். 

கட்சி அரசியலுக்கும் வாக்குரிமைக்கும் நேரடித் தொடர்பு கிடையாது என்பது என் புரிதல். உலகில் இன்றைய தேதியில் கூட உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு இன்னும் ஜனநாயக ஆட்சி முறை கிடைக்கவில்லை. சர்வாதிகாரிகளும் மன்னர்களும் ராணுவ ஆட்சியாளர்களும் சாமானிய மக்களை ஆட்சி செய்கின்றனர். 

உலகில் ஜனநாயக ஆட்சியின் கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் இந்திய நாட்டின் குடிமக்களாகிய நாம் ஆவோம். 

நம் நாட்டின் அரசியலமைப்பு நமக்கு வாக்குரிமையை அளித்துள்ளது. 

***

நம் நாட்டில் தேர்தல்களை நடத்துவது என்பது ஒரு பெரும் நிகழ்வு. 1952ம் ஆண்டிலிருந்து இன்று வரை தேர்தல் ஆணையம் அந்த பணியை சிறப்பாக நிகழ்த்தி வருகிறது. சாமானிய அரசு ஊழியர்களான தேர்தல் ஆணைய ஊழியர்களே அதன் முழுப் பெருமைக்கும் உரியவர்கள். வாக்குச் சீட்டு காலத்திலிருந்து இன்றைய மின்னணு வாக்கு எந்திரம் வரை தேர்தல் பணிகள் என்னும் பெரும் பணிகளை அவர்களே செவ்வனே செய்து வந்துள்ளார்கள். ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்ட அனைவருமே அந்த அரும்பெரும் பணியின் மதிப்பை உணர்வார்கள். 

***

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது இந்திய ஜனநாயகத்தின் இந்திய தேர்தல் நடைமுறைகளின் இயல்பான பணிகளில் ஒன்று. அரசு குறித்து அரசின் இயங்குமுறை குறித்து சாமானியப் புரிதல் கொண்ட சாமானியனுக்குக் கூட தெரிந்த ஒரு நடைமுறை. 

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழக முதலமைச்சரும் வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பு என்பது மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு விஷயம். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்களே தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழக முதல்வரின் எதிர்ப்பு என்பது மாநில அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்துவது அன்றி வேறல்ல. 

2002ம் ஆண்டு நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என் நினைவில் இருக்கிறது. வாக்குச்சாவடியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வாக்குச்சாவடியில் ஒரு அரசு அதிகாரி இருந்தார். வாக்காளர்கள் தங்கள் பெயர் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டு சென்றனர். நானும் என் பெயர் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டேன்.  அப்போது இணையம் சாமானியப் பயன்பாட்டுக்கு வந்திருக்கவில்லை. 

இரண்டு தினங்கள் முன்பு மாநில அரசு ஊழியர் ஒருவர் வீட்டுக்கு வந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் படிவத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றார். இன்று அதனை பூர்த்தி செய்தேன். மிக எளிய படிவம். பள்ளி மாணவன் கூட பூர்த்தி செய்ய முடியும்.