Friday, 7 November 2025

ஜனநாயக அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். என்னுடைய சில நகைச்சுவைக் கட்டுரைகள் சீரியசானவை என்று. அவர் கூறியதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்.  

தமிழ்ச் சமூகத்துக்கு ஜனநாயக தேர்தல் அரசியல் எழுபத்து ஐந்து ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிரதானமான ஒரு அரசியல் சக்தியாக இருந்தது. அதன் எதிர்ப்புறத்தில் திராவிட இயக்கம் இருந்தது. பின்னர் கம்யூனிஸ்டுகள் இந்திய தேசிய காங்கிரஸுக்கு மாற்று சக்தியாக உருவாக முயன்றனர். அந்த இடத்தை திராவிட இயக்கம் எடுத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளை சுருக்கினர். இந்திய தேசிய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் எனப் பிரிந்தது. திராவிட இயக்கம் இரண்டு திராவிடக் கட்சிகளாகப் பிரிந்தது. கம்யூனிஸ்டு கட்சியும் இரண்டானது. ஜனநாயக தேர்தல் அதிகார அரசியலில் கட்சிகள் அதிக எண்ணிக்கையிலாகி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என எண்ணுவது இயல்பானது. தமிழ்ச் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அதிகாரத்தின் மீது கொள்ளும் பற்று என்பதும் அதிகாரத்தின் மீது கொள்ளும் ஈர்ப்பு என்பதும் பெரும்பான்மையாக விரவிக் கிடப்பது. இங்கே கட்சிகள் தங்களை பழைய மன்னராட்சியின் தொடர்ச்சியாக எண்ணிக் கொள்கிறார்கள். தமிழகத்தின் சராசரி மனிதன் ஓர் அரசு அலுவலகத்தினுள் நுழைய மிகவும் தயங்குவான் ; விரும்பவே மாட்டான். அங்கே ஊழலும் லஞ்சமும் மலிந்து கிடக்கிறது என்பதும் சென்றால் கையில் இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள் என்பதும் அவன் அச்சம் கொள்வதற்கான காரணங்கள். அவன் சாமனியமாக செல்ல நேரிடும் போக்குவரத்துத் துறை ( இரு சக்கர வாகனம் பதிவு செய்ய, ஓட்டுநர் உரிமம் பெற), வருவாய்த்துறை ( தனது சொந்த இடத்துக்கு பட்டா வாங்க) ஆகிய அலுவலகங்களுள்ளேயே இந்த நிலைமை. மற்ற அலுவலகங்கள் இதை விட மோசமான நிலைமை. தமிழ்ச் சமூகத்துக்கு இந்த நிலையின் மீது தீராக் கோபம் இருக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு மிக மோசமாக அனுபவம் ஆகும் அரசு நிர்வாகம் மீது கோபம் கொள்வது ஒரு புறமும் இத்தகைய நிர்வாகத்தை சீர்திருத்தாமல் இருக்கும் அரசியல் கட்சிகளின் மீது பெரும் பற்று கொள்வது இன்னொரு புறமும் என முரணான நிலையில் தமிழ்ச் சமூகம் கடந்த 60 ஆண்டுகளாகவே இருக்கிறது. தங்கள் மாவட்ட ஆட்சியர் யார் என்று நேரில் பார்த்திருக்காதவர்கள் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூட அறியாதிருப்பவர்களே சட்டமன்ற உறுப்பினரையும் பாராளுமன்ற உறுப்பினரையும் பெரிய பதவியில் இருப்பவர்கள் என்று எண்ணுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு துணை தாசில்தார் அளவுக்குக் கூட அதிகாரம் இல்லை என்பதை சாமானிய பொதுமக்கள் அறிந்திருக்கிறார்களா என்பது ஓர் ஐயமே. சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதனை உணர்ந்திருக்கிறார்களா என்பது இன்னும் பெரிய ஐயம். 

சமூகம் முன்னேற அரசியல் கட்சிகள் மிகச் சிறு பங்கே ஆற்ற முடியும். ஏனென்றால் அவர்கள் ஜனநாயக தேர்தல் அதிகார அரசியலில் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிக்கும் எவ்விதம் பதவிக்கு அதிகாரத்துக்கு வருவது என்பதே அவற்றின் இயங்குமுறையைத் தீர்மானிப்பதாக இருக்கும். எதைச் செய்தால் அதிக வாக்குகளைப் பெற முடியுமோ அதனையே அவர்கள் முயல்வார்கள். 

தமிழ்ச் சமூகம் முன்னேற ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் மிகச் சிறு அளவே உதவும். கல்வி , வணிகம், விளையாட்டு , சுகாதாரம், பண்பாடு ஆகிய விஷயங்களில் பயிற்சி அளிக்கும் சமூக அமைப்புகள் மட்டுமே பெரும்பாலான மக்களுக்கு ஆக்கபூர்வமான உதவியை அளிக்க முடியும். தமிழ்ச் சூழலில் அவ்வாறான சமூக அமைப்புகள் குறைவாக இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் எங்கும் பரவி சமூகத்தை அரசியல்ரீதியில் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றனர். கட்சி ரீதியான அரசியல் ரீதியான பிளவு தமிழ்ச் சமூகத்தில் சமூக அமைப்புகள் உருவாகி நிலைபெறுவதை மிகக் குறைவாக ஆக்கியிருக்கிறது. இந்நிலைக்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகளை மட்டும் பொறுப்பாக்கிட முடியாது. பொதுமக்களுக்கும் இதில் பெரும்பான்மையான பங்கு இருக்கிறது.