Friday, 7 November 2025

எழுதுதல்

 இன்று காலை எழுந்து எழுத்துமேஜை முன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கு எனக்கு ஒரு பணி இருந்தது. வானம் மேகமூட்டமாக இருந்ததால் மழை வந்தால் உத்தேசித்த பணி நிகழுமா அல்லது தள்ளிப் போகுமோ என்னும் ஐயம். லௌகிகப் பணிகள் சிறியவையாயிருப்பினும் மனதின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பல ஆண்டு பழக்கம் இருப்பினும் ஒவ்வொரு எதிர்கொள்ளலும் புதிய எதிர்கொள்ளலே. வெளிநாட்டு அழைப்பு ஒன்று அலைபேசியில் ஒலித்தது. உடன் அலைபேசியை எடுத்தேன். என்னுடைய அலைபேசியில் ‘’கிரிங்’’ என்ற ஒற்றை ஒலியே அழைப்பு ஒலி. அந்த ஒற்றை ஒலிக்குப் பின் அலைபேசி ஒலி ஏதும் எழுப்பாது. வழக்கமாக எல்லா அலைபேசி அலைப்பு ஒலிகளும் ஒரு நிமிடத்துக்கு ஒலிக்கும். என்னுடைய அழைப்பு ஒலி இரண்டு வினாடிகள் மட்டுமே ஒலிக்கும். குறுஞ்செய்தி ஒலி சிறியது எனினும் என்னுடைய அழைப்பு ஒலியுடன் ஒப்பிட்டால் அதுவே மிக நீண்டது. 

நண்பன் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தான். பள்ளி நாட்களிலிருந்து எனது தோழன். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணி புரிகிறான். மொழி , சமூகம், தேசம் ஆகியவை குறித்து தீவிரமான அக்கறை கொண்டவன். அவற்றுக்கு தன்னால் இயன்ற ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்னும் தீராத ஆர்வம் கொண்டவன். இலக்கியத்தில் தீவிரமான ஆர்வம் உண்டு. பல ஆண்டுகளாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் கணிசமான படைப்புகளை வாசித்திருக்கிறான். இன்று அவன் என்னுடன் உரையாடிய போது அவனை எழுதுமாறு சொன்னேன். அமெரிக்க லௌகிக வாழ்க்கையில் எழுத்துக்கான நேரத்தையும் அதற்கான மனநிலையையும் தன்னால் அளிக்க முடியவில்லை என்று சொன்னான். 

அவனுடைய குழந்தைகள் அமெரிக்காவில் பயில்கின்றனர். அங்குள்ள பள்ளிகளில் எவ்விதம் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிகளிலேயே ஏதேனும் ஒரு நூலை வாசித்து அந்த நூல் குறித்து விரிவான கட்டுரை அல்லது மதிப்புரை எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை வியந்து கூறினான். ஒருவேளை தனக்கு அவ்விதமான பயிற்சி பள்ளி நாட்களில் இருந்திருந்தால் அது எழுதுவதற்கு உதவியாக இருந்திருக்குமோ என்ற தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்தான். 

ஜனநாயக யுகம் சட்டதிட்டங்களால் ஆனது. சட்டத்தின் ஆட்சி ஜனநாயக நாட்டிலேயே எல்லா குடிகளையும் சென்றடைய முடியும். லௌகிகத்தில் கூட எழுதப்பட்ட விஷயங்களே பெரும்பாலான விஷயங்களின் அடிப்படையாய் இருக்கின்றன. பிரிட்டிஷ் அரசு சட்ட உருவாக்கத்தையும் சட்ட செயலாக்கத்தையும்  நிர்வாகத்திடமும் நீதிமன்றத்திடமும் அளித்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இதே நிலையே நீடிக்கிறது. செய்தித்தாள்கள் இந்த சூழ்நிலையில் இடையீடாக வந்து பொதுமக்களிடம் பரவலாக வாசிப்பைக் கொண்டு சேர்த்தன. ஒரு சமூகம் பெருமளவு வளர்ச்சி பெற அந்த சமூகத்தில் வாசிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் இருப்பது முக்கியமானது. நாம் அந்த நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறோம். செல்ல வேண்டிய தூரம் இன்னும் பெருந்தொலைவாக இருக்கிறது. 

நண்பனின் குழந்தைகள் சிறு குழந்தைகள். இருவருக்கும் பத்து வயது இருக்கலாம். அங்கே பள்ளியில் வாரம் ஒரு நூலை வாசித்து மதிப்புரை எழுதி அந்த நூல் குறித்து 5 நிமிடங்கள் பேசுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினான். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து விசாரித்தான். 

‘’பி.ஜி. கருத்திருமனின் கம்பர் -கவியும் கருத்தும்’’ நூலில் உள்ள கம்பராமாயணப் பாடல்களை ஜூம் செயலி மூலம் வாசிக்கலாமா என்று கேட்டான் . நான் கணினியில் மிகக் குறைவான செயல்முறைகளை மட்டும் அறிந்தவன். ஜூம் குறித்து முயன்று பார்க்கிறேன் என்று சொன்னேன்.