கட்டுமானப் பொறியியல் பட்டம் பெற்ற பின் ‘’மழைநீர் சேமிப்பு’’ மற்றும் மழைநீர் சேமிப்புக் கட்டுமானங்கள் ஆகியவற்றில் எனக்கு ஈடுபாடு இருந்தது. அப்போது இந்த விஷயம் குறித்து சிறு கவனம் எழுந்திருந்தது. இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்பதை நான் முயன்று பார்த்தேன். இப்போதும் இந்த விஷயத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.
இளைஞனாக இருந்த எனக்கு 1000 சதுர அடி பரப்பு கொண்ட பரப்பு கொண்ட நடுத்தரவர்க்க வீடொன்று ஓர் ஆண்டில் எவ்வளவு நீரை சேமிக்க முடியும் என்னும் கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். பழைய செய்தித்தாளிலிருந்து அக்டோபர் 1ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரையான 92 நாட்களில் எங்கள் பகுதியில் மழைப்பொழிவு எவ்வளவு இருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் குறித்துக் கொண்டு மொத்தம் எவ்வளவு எனக் கணக்கிட்டேன். வட கிழக்குப் பருவமழை மூலம் காவிரி வடிநிலப் பகுதிக்கு 65 செ.மீ மழை கிடைக்கிறது. ஆண்டு சராசரி 100 செ.மி.
இந்த தரவிலிருந்து நான் ஒரு விஷயத்தைக் கண்டடைந்தேன். அதாவது அக்டோபர் 1ம் தேதி 3 செமீ மழை பெய்கிறது என்றால் 1000 சதுர அடி வீட்டில் 2500 லிட்டர் நீரை சேமிக்க முடியும். அக்டோபர் 1 லிருந்து ஜனவரி 1 வரை இவ்விதமாக சேகரமாகும் மழை நீரைப் பயன்பாட்டில் கொண்டு வந்திட முடியும். எனினும் இந்த 100 நாட்களில் 65,000 லிட்டர் சேமிக்க முடியும். அதனை மேலும் 60 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். வட கிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கும் மழை நீரைக் கொண்டு ஐந்து மாதங்களுக்குத் தேவையான நீரை சேகரிக்க முடியும் எனக் கணக்கிட்டிருந்தேன். கோடைக் காலத்திலும் இதர காலங்களிலும் 35 செ.மீ மழைப்பொழிவு இருக்கிறது. அந்த மழைநீர் மேலும் மூன்று மாதங்களுக்குக் கிடைக்கும் எனில் 8 மாதத்தின் அன்றாட வீட்டின் தேவையை பூர்த்தி செய்திட முடியும் என்பது எனது கணக்கீட்டின் அடிப்படையில் எனது புரிதல்.
தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களுக்கும் தமிழகத்தின் கடலோர கிராமங்கள் அனைத்துக்கும் இந்த கணக்கீடு பொருந்தும்.
இருப்பினும் இதில் நான் நேரில் கண்டு கேட்டு பேசி அறிந்த விஷயங்கள் சில நடைமுறை யதார்த்தங்களை எனக்கு உணர்த்தின.
1. 1000 சதுர அடி வீடுகள் 2400 சதுர அடி மனைப்பிரிவில் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் ஒரு கிணறைக் கொண்டிருந்தால் அந்தக் கிணறு மழைநீரை முழுமையாகச் சேமிக்கப் பயன்படும். நம் சமூகத்தில் கிணறு என்பது ஊர் பொதுக்கிணறாகவும் கிராமத்தில் சற்று வசதி கொண்டவர்களாலும் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. சாமானியர்களுக்கு கை பம்ப் மட்டுமே நீர் பயன்பாட்டை எளிதாக்கியது. எனவே சாமானியன் மனதில் நிலத்தடி நீரை பம்ப் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்கிறது. இன்றும் கை பம்ப் பொருளியல் ரீதியில் மலிவானது. 1000 சதுர அடியில் கட்டப்படும் நடுத்தரவர்க்க வீட்டில் கிணறு என்ற விஷயம் இணைவதில்லை. மழைநீர் சேகரிப்பில் பெரிய முன்னேற்றம் நிகழ வேண்டுமாயின் நடுத்தர வர்க்க மனநிலைக்கு கிணறு என்ற விஷயம் வர வேண்டும்.
2. நடுத்தர வர்க்க வீட்டில் வசிப்பவர் எண்ணிக்கை 4 அல்லது 5 ஆக இருக்கும். இந்த எண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு அவர்கள் பயன்படுத்தும் நீரின் அளவு 1000 லிட்டர். இதற்கு அவர்கள் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பி.வி.சி டேங்க் பயன்படுத்துவார்கள். மொத்த மழைநீரையும் சேகரிக்கும் விதத்தில் பி.வி.சி டேங்க் வாங்குவது நடுத்தர குடும்பத்துக்கு மிகவும் செலவேறிய ஒன்றாக இருக்கும். கட்டிய வீட்டில் புதைத்து வைக்கும் விதத்தில் பிவிசி டேங்க் பயன்படுத்த போதிய இடவசதி இருக்காது. 40 அடி அகலம் 60 அடி நீளம் கொண்ட மனையென்றாலும் வீட்டின் இரு பக்கவாட்டிலும் 5 அடி அகலமே இருக்கும்.
3. புதிதாக வீடு கட்டுபவர்கள் 1,00,000 லிட்டர் மழைநீரையும் சேமிக்கும் விதத்தில் கட்டுமானத்தைத் திட்டமிடலாம். ஆங்காங்கே பலர் இந்த விஷயங்களை வெற்றிகரமாக செய்து பார்த்திருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன.
4. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.