Thursday, 4 December 2025

இரண்டாம் கடிதம்

 சில நாட்களுக்கு முன் எனது நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் அனுப்பினேன். அதனை வலைப்பூவிலும் வெளியிட்டேன். ஊரில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஊருக்கு வந்திருக்கும் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவருடன் சிறு பயணம் ஒன்று செய்ய நேர்ந்தது. அவருக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் அனுப்பினேன். அக்கடிதத்தை இங்கே வெளியிடுகிறேன். 

***

அன்புள்ள நண்பருக்கு,

இன்று தங்களுடன் ஒரு சிறுபயணம் மேற்கொண்டது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாம் இருவருமே இப்போது நடுவயது எனக் கூறத்தக்க வயதுக்கு வந்து விட்டோம். உத்வேகமும் தீரா ஊக்கமும் கொண்ட மன அமைப்பு நாம் இளைஞர்களாயிருந்த போது வாய்த்த விதத்தில் இனி அமையுமா என்பதை நாம் சிலமுறையாவது ஆழமாக யோசித்துப் பார்த்திருப்போம். புரிதல்களும் அனுபவங்களும் மனம் இயங்கும் விதத்தைக் கட்டமைக்கும் நிலையிலும் நாம் வாழ்வுக்கும் உலகுக்கும் நம் எல்லைகளைத் தாண்டி நம் தடைகளைத் தாண்டி திறந்திருப்போம் எனில் வாழ்க்கை கணந்தோறும் புதியதாகவே இருக்கும். வாழ்வின் இனிமையைக் காணும் விதத்தில் வாழ்வின் இனிமைகளைக் காணும் விதத்தில் தங்களின் ஒவ்வொரு நாளும் அமையவேண்டும் என்பது எனது விருப்பம். 

நீண்ட நாட்களுக்குப் பின்  எழுதும் கடிதம் இது. நம் சந்திப்புகளின் நம் பயணங்களின் இனிய நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். தங்களுக்கு நினைவிருக்கிறதா ? நாம் இருவரும் ஒருமுறை பூம்புகார் சென்றோம். வருடம் 2003 என ஞாபகம். கடலில் இறங்கி குளித்தோம். நம் இருவருக்கும் நீச்சல் தெரியாது. கரையிலிருந்து கணிசமான தொலைவு கிழக்கு நோக்கி கடலில் சென்றதும் அங்கே ஒரு பள்ளமான பகுதி இருப்பதை நம் கால்கள் ஒருங்கே உணர்ந்தன. உணர்ந்த கணமே நாம் கைகளை இணைத்துக் கொண்டோம். சில கணங்கள் ஆழத்தினுள் சென்று விட்டோம். நம் சிரசுக்கு மேலே கடல்நீர் இருப்பது நம் இருவருக்கும் தெரிந்து விட்டது. நமது கரங்களின் பிணைப்பை மேலும் வலுவாக்கிக் கொண்டோம். ஒரு பெரிய அலை வந்து நம் இருவரையும் கரை நோக்கித் தள்ளியது. கைகள் இணைந்தவாறே நாம் கரையேறினோம். இத்தனை வருடங்கள் கழித்து இந்த சம்பவத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் போது மனம் இப்போதும் பரபரப்பாக உணர்கிறது. நாம் இருவரும் இணைந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்களுக்குச் செல்வது எனத் தீர்மானித்துக் கொண்டு ஒரு மார்கழி மாதத்தில் நாளைக்கு ஒன்று என 30 திவ்யதேசங்களைச் சேவித்தோம். அதன் பின் நீங்கள் வெளியூர் வெளிநாடு சென்று விட்டீர்கள். நாம் இணைந்து பயணித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இன்று தங்களுடன் திருக்குடந்தை சாரங்கபாணி பெருமாளைச் சேவிக்கச் சென்றது நாம் மீண்டும் பல விஷ்ணு ஆலயங்களுக்கு சேர்ந்து செல்வோம் என்ற உணர்வைத் தந்தது. 

தங்கள் பெற்றோர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் பிரியமும். 

இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நலங்களையும் மகிழ்ச்சிகளையும் தருவார். 

அன்புடன்,

பிரபு

இடம் ; மயிலாடுதுறை

நாள் : 02.12.2025