Friday, 5 December 2025

இசை சராசரி (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் இசை நிகழ்வுகளை ஒருங்கமைப்பவர். அதிலும் வாத்திய இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர். அந்த நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பார். நான் வரவேண்டும் என்று மிகவும் எதிர்பார்ப்பார். அவரிடம் மிகப் பணிவாக இசையில் முழுமையாக லயிக்கும் அகம் எனக்கு இல்லை என்று ஒவ்வொரு முறையும் கூறுவேன். இருப்பினும் ஒவ்வொரு முறையும் என்னை அழைக்கவே செய்வார். 

இசை ரசனை என்பது கேட்டலின் ரசனை. ஒலியையும் ஒலி மாறுபாடுகளையும் உள்வாங்கிக் கொள்வதின் கலை இசை ரசனை. அதற்கு செவிகள் முழுமையாகத் திறந்திருக்க வேண்டும். காதில் கேட்கும் ஒலியை அகத்தில் இசையாக உணர்தலே இசை கேட்டல். 

எனது மன அமைப்பு எவ்விதமானது எனில் ஓசையை என் மனம் சொல்லின் ஒரு பகுதியாகப் புரிந்து கொள்ளும். சொல்லற்ற ஓசைகள் ஒலிக்கும் போது என் மனம் அந்த ஒலித்தொகுப்பை ஏதேனும் சொல்லாகவோ சொற்பெருக்காகவோ உள்வாங்கி விடும். எனவே இசையின் பிரவாகத்தை என் மனம் தொடர்ந்து பின் தொடராது ; தவற விட்டு விடும். 

ஒரு பாடலைக் கேட்கிறேன் என்றால் அதன் இசையினும் அதில் உள்ள வரிகளை என் மனம் எளிதில் கண்டடைந்து அதனை கற்பனை செய்யத் தொடங்கி விடும். 

இசை கேட்பது என்பது செவியையும் அகத்தையும் ஒத்திசைவில் கொண்டு வருதல். இசை நிறைய கேட்க கேட்க செவி இசைக்கு பழகி அகத்தில் அந்த ஒத்திசைவு உண்டாகும். இசை என் மனதைத் தொடும். அகத்தைத் தொடும். ஆனால் நான் தினமும் இசை கேட்கும் வழக்கம் கொண்டவனோ வாரத்துக்கு சில மணி நேரங்களோ மாதத்துக்கு சில மணி நேரங்களோ இசை கேட்கும் வழக்கம் கொண்டவனோ அல்ல. இசை, ராகம், ஆலாபனை என்றெல்லாம் யாரேனும் பேசுவதைக் கண்டால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆச்சர்யமாக அவர்களைப் பார்ப்பேன். 

ஹிந்துஸ்தானி சங்கீதம் சிறிது கேட்டால் கூட மனம் அதில் உடனே ஈடுபடும். ஆனால் என் மன அமைப்பின் காரணமாகவா அல்லது எனது வாழ்க்கை முறையின் காரணமாகவா என்பது எனக்குத் தெரியவில்லை இன்று வரை தீவிரமாக இசை கேட்டது இல்லை. 

இன்று தற்செயலாக ஒரு காணொளியைக் கண்டேன். அது மேற்கத்திய இசை தொடர்பான காணொளி. அதன் தலைப்பு ‘’நீங்கள் இசைக்கு செவி திறவாதவரா அல்லது ஆசிர்வதிக்கப்பட்ட செவிசார் இசை நுண்ணுணர்வு கொண்டவரா ?’’ என்று அந்த காணொளி கேள்வி கேட்டிருந்தது. இசைக்கு செவி திறவாத ஆள் நான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இதனை பரீட்சித்து வேறு உறுதி செய்து கொள்ள வேண்டுமா என்று தோன்றினாலும் பரீட்சித்துப் பார்த்து விடுவோமே என அந்த பரீட்சையில் ஈடுபடுத்திக் கொண்டேன். 

மொத்தம் 15 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். ஒரு ஒலிக்குறிப்பு ஒலிக்கும். வாத்திய ஒலி. அதனைக் குறித்து கேள்வி இருக்கும். நாம் எடுக்கும் மதிப்பெண் பூஜ்யம் எனில் நாம் இசைக்கு செவி திறவாதவர். நமது மதிப்பெண் 1-4 எனில் இசைக்கு செவி திறப்பதில் சராசரிக்கு கீழே இருப்பவர். நாம் 5-9 மதிப்பெண் எடுத்தால் சராசரி நிலை. 10 -14 எனில் சராசரிக்கு மேலே. 15 என்றால் ஆசிர்வதிக்கப்பட்ட செவிசார் நுண்ணுணர்வு கொண்டவர். இந்த மதிப்பெண் படிநிலை தேர்வு துவங்கும் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனக்கு ஐயமே இருக்கவில்லை. என்னுடைய மதிப்பெண் நிச்சயம் பூஜ்யமாகவே இருக்கும் என நினைத்தேன். பரீட்சைக்குள் சென்றேன். என்ன கேட்கிறார்கள் என்பதும் கேள்வி உத்தேசிப்பது என்ன என்பதும் எனக்குப் புரிந்தது. அதுவே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. உற்சாகமாக எனது பதில்களைக் குறித்துக் கொண்டேன். காணொளியின் நிறைவில் ஒவ்வொரு கேள்விக்குமான பதில் என்ன என்பதைத் தெரிவித்தார்கள். எனது பதில்களில் சரியான பதில்களும் இருந்தன என்பது எனக்கே வியப்பு. 

15க்கு 8 மதிப்பெண். சராசரி நிலை. 

எனக்கு ஒரே சந்தோஷம். 

இதை ஒரு நல்நிமித்தமாகக் கொண்டு தினமும் ஒரு மணி நேரமாவது இசை கேட்க வேண்டும் என எண்ணினேன்.