Saturday, 6 December 2025

இசை கேட்டல் (நகைச்சுவைக் கட்டுரை)

 இசைக்கு தன் செவி திறக்கும் திறன் பூஜ்யம் என எண்ணியிருந்த அமைப்பாளருக்கு தன் இசை கேட்கும் திறன் சராசரி என அறிந்ததிலிருந்து ஆர்வமாகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார். இசை கேட்கத் துவங்க வேண்டும் என எண்ணுகிறார். 

எதில் கேட்பது எதைக் கேட்பது என்னும் இரு கேள்விகள் அவருக்கு எழுந்தன. 

முதலில் தினமும் ஒரு மணி நேரம் இசை கேட்கலாம் என முடிவு செய்து கொண்டார். அந்த ஒரு மணி நேரத்தை காலையில் வைத்துக் கொள்வதா அல்லது மாலையில் வைத்துக் கொள்வதா என்னும் வினா அவர் அகத்தில் எழுந்தது. தன் மனம் ஏன் இப்படி தர்க்கபூர்வமாகவே இருக்கிறது என யோசித்த அவர் மனத்தை தர்க்கத்தின் பின் செலுத்தாமல் இசையின் பின் செலுத்த முயன்றார். 

முதலில் கேட்கத் துவங்கி விடுவோம். இப்போது இருக்கும் மடிக்கணினியில் சில நாட்கள் கேட்போம். அதன் பின் இசை கேட்க வேறு உபகரணம் வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்தார். 

இசை என்றால் என்ன இசையைக் கேட்பது எதிலிருந்து துவங்குவது என யோசித்துப் பார்த்தார். அமைப்பாளருக்கு இசை என்றால் சில பெயர்கள் நினைவில் இருந்தன. 

முதலில் நினைவுக்கு வந்தது பீம்சேன் ஜோஷி. அதன் பின்னர் ஜஸ்ராஜ் என்ற பெயரும் குமார் கந்தர்வா என்ற பெயரும் நினைவுக்கு வந்தன. ஒரு நோட்டில் இந்த பெயர்களை எழுதிக் கொள்ள வேண்டும் என்று அமைப்பாளருக்குத் தோன்றியது. ஷெனாய் என்ற வாத்தியம் அமைப்பாளர் கேட்டறிந்தது. தமிழில் என்னென்ன கேட்கலாம் என யோசித்த போது தேவாரம், திவ்யப் பிரபந்தம் கேட்க வேண்டும் என்று எண்ணினார். அமைப்பாளருக்கு தருமபுரம் சுவாமிநாதன் என்ற பெயர் தெரியும். அவர் புகழ் பெற்ற தேவார ஓதுவார். திவ்யப் பிரபந்தம் பெருமாள் கோயில்களில் பாடப்பட்டு கேட்ட ஞாபகம் அமைப்பாளருக்கு வந்தது. மேலை இசையில் பீத்தோவன் இசையை அமைப்பாளர் கேட்டிருக்கிறார். ‘’ஏழாம் இசைக் குறிப்பு’’ என பீத்தோவன் கேட்ட பாதிப்பில் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார் அமைப்பாளர். வாக்னர் என்ற பெயர் தெரியும். 

தினம் ஒரு மணி நேரம் என இசை கேட்போம் ; கேட்க கேட்க கேட்கவேண்டியவை பெருக்கெடுக்கும் என நினைத்துக் கொள்கிறார் அமைப்பாளர்.