Tuesday, 2 December 2025

உரு அரு

எனது நண்பர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஊருக்கு வந்திருக்கிறார். எங்கள் இருவருக்கும் சம வயது. ஊரில் அவர் படித்த பள்ளியும் நான் படித்த பள்ளியும் வேறானவை. நாங்கள் வெவ்வேறு கல்லூரிகளில் படித்தோம். கல்வி முடிந்த பின் அவர் சென்னையில் ஐ டி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். பின்னர் வெளிநாடு சென்று விட்டார். இரண்டு மூன்று நாடுகளில் இருந்து விட்டு இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். பள்ளி கல்லூரி நாட்களில் அடிக்கடி சந்திப்போம். அவர் வெளிநாடு சென்ற பின் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வரும் போது பார்ப்பதுண்டு.  அவர் ஒரு பெருமாள் பக்தர். பெருமாள் ஆலயத்தில் நிறைய கைங்கர்யங்கள் செய்வார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் அவரும் ஒரு மார்கழி மாதத்தில் தினம் ஒரு பெருமாள் கோவில் திவ்யதேசம் என 30 சோழ நாட்டுத் திருப்பதிகளை தரிசித்தோம். மறக்க முடியாத பயணங்கள் அவை. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைத் தற்செயலாக சந்தித்த போது திருக்குடந்தை சாரங்கபாணி பெருமாள் கோவிலுக்குச் செல்வோமா என்று கேட்டேன். இன்று காலை செல்வதாக முடிவாகியது. காலை 5 மணிக்கு அவரை அவருடைய வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினேன். மோட்டார்பைக் பயணம். பத்து நிமிடம் முன்னதாகவே அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் தயாராகியிருந்தார். 

அவருடைய பெயர் ‘’பொன்னியின் செல்வன்’’ நாவலில் இடம் பெற்றிருக்கும் ஒரு வரலாற்றுக் கதாபாத்திரத்தின் பெயர். அவரது உறவினர் ஒருவர் கல்கியின் தீவிர வாசகர். அவரே அப்பெயரை நண்பர் குழந்தையாயிருந்த போது சூட்டியிருக்கிறார். நண்பருக்கு இப்போது 17 வயதில் ஒரு மகனிருக்கிறான். ஆஸ்திரேலியாவில் பொருளாதாரமும் வணிகமும் பயில்கிறான். அவன் பெயரும் ‘’பொன்னியின் செல்வன்’’ நாவலில் இடம் பெற்றிருக்கும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். 

இன்று அதிகாலை 3 மணிக்கே எழுந்து விட்டேன். அலாரம் 4 மணிக்குத் தான் வைத்திருந்தேன் எனினும் பயண ஞாபகம் காரணமாக ஒரு மணி நேரம் முன்பே விழித்து விட்டேன். ஸ்ரீகுமரகுருபரரின் பிரபந்தத் திரட்டு என்ற நூலை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். நண்பரை அழைக்கச் சென்ற போது அவர் ‘’விஷ்ணு சஹஸ்ரநாமம்’’ பாராயணம் செய்திருந்தார். 

நமது நாட்டில் இறைவன் சொல் மூலம் வர்ணிக்கப்படுவதும் இறைவன் சொல் மூலம் துதிக்கப்படுவதும் 7000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய வழக்கமாக இருப்பது குறித்தும் அதன் பின்னணியில் உருவ வழிபாடு எப்படி புரிந்து கொள்ள வேண்டியது என்பது குறித்தும் உரையாடியவாறு சென்றோம். உருவமா அருவமா என்னும் கேள்வி எங்கள் உரையாடலின் மையப் பொருளாக இருந்தது. எதைக் குறித்து பேசினாலும் விஷயம் மீண்டும் மீண்டும் அங்கேயே வந்தது. 

உரையாடியவாறே திருக்குடந்தை ஆலயம் வந்தடைந்தோம். நேரம் காலை 6.30. விஸ்வரூப தரிசனம் 7  மணிக்கு. ஆலயத்தின் கோபுரம் முன் வந்து நின்று கோபுர தரிசனம் செய்தோம். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரா என சக்கரங்கள் 7. இவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிற்பங்கள் கோபுரங்களில் உள்ளன என்று கூறினேன். எட்டு கைகளுடன் ஒரு கையில் வாள் ஏந்திய இன்னொரு கையில் பாஞ்சஜன்யம் ஏந்திய நரசிம்மர் சிற்பம் ஒன்றைக் கோபுர சிற்பங்களில் கண்டேன். இன்றைய பயணத்தின் கண்டடைதல் அந்த நரசிம்மர். 

ஆலயம் திறக்கப்பட்டு பசுமாடொன்று தாயார் சன்னிதியில் தாயாரை தரிசித்தது. பின்னர் சுவாமி சன்னிதியில். 

சாரங்கபாணி ஒரு குண்டான கருப்புக் குழந்தை. ஐந்து வயது பாலகனுக்குரிய முகம். ஆழ்ந்த யோக உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான் யாவருக்கும் குழந்தையாயிருப்பவன். பவள வாய், கமலச் செங்கண், ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரர் லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றார் ஆழ்வார். அந்த குழந்தைக்கு முன்னால் அந்த குழந்தையின் தூய்மைக்கு முன்னால் அந்த குழந்தையின் அன்புக்கு முன்னால் அந்த குழந்தையின் அருளுக்கு முன்னால் அனைத்துமே சிறியவை. அனைத்துமே தூசானவை. அந்த குழந்தையிடம் சரணடைவதை விட வாழ்வுக்கு இனிமை என்பது இல்லை.