Saturday, 20 December 2025

ஜாதி அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

அரசியல் என்பது 99 சதவீதத்தினரால் 99 சதவீதம் அதிகார அரசியல் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அரசியலை அதிகார அரசியல் எனப் புரிந்து கொள்பவர்களில் 99 சதவீதம் பேர் அதனை ஜாதி அரசியல் என்றே புரிந்து கொள்கிறார்கள்.  

ஒரு ஊரில் ‘’அ’’, ‘’ஆ’’, ‘’இ’’, ’’ஈ’’ என நான்கு ஜாதிகள் இருப்பதாகக் கொள்வோம். ‘’அ’’ ஜாதியினர் ஊரின் மக்கள்தொகையில் 35 சதவீதமும் ‘’ஆ’’ ஜாதியினர் ஊரின் மக்கள்தொகையில் 37 சதவீதமும் ‘’இ’’ ஜாதியினர் 5 சதவீதமும் ‘’ஈ’’ ஜாதியினர் 23 சதவீதமும் வாழ்கிறார்கள் என எடுத்துக் கொள்வோம். 

அங்கே 4 மளிகைக் கடைகள் இருக்கின்றன எனவும் அதனை முறையே ‘’அ’’, ‘’ஆ’’, ‘’இ’’, ’’ஈ’’ ஜாதியினர் நடத்துவதாகக் கொள்வோம். ஊர்க்காரர்கள் எந்த கடையில் பொருள் தரமாக இருக்கிறதோ விலை சகாய விலையாக இருக்கிறதோ அந்த கடையில் தான் பொருள் வாங்குவார்கள். தனது ஜாதிக்காரர் கடை வைத்திருக்கிறார் என்பதற்காக விலை அதிகமாயிருந்து பொருளும் தரமற்றதாக இருந்தால் அந்த கடைக்குச் சென்று பொருள் வாங்க மாட்டார்கள். பணம் கொடுத்து பொருள் வாங்கும் வணிகத்தில் பின்பற்றும் வழக்கத்தை மக்கள் ஜனநாயக அரசியலில் அப்படியே பின்பற்றுவதில்லை. வேட்பாளர் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவரா எனப் பார்த்து வாக்களிக்கின்றனர். 

அந்த ஊரில் ‘’அ’’ ஜாதியைச் சேர்ந்த மூன்று பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் ‘’ஆ’’ ஜாதியைச் சேர்ந்த ஒருவர் தானும் போட்டியில் இறங்குவார். ‘’அ’’ ஜாதியைச் சேர்ந்தவர் தனது ஜாதியின் 35 சதவீத வாக்குகளைப் பெற்றால் ‘’ஆ’’ ஜாதியைச் சேர்ந்தவர் ‘’அ’’ ஜாதி வாக்குகள் போக மீதம் இருக்கும் 65 சதவீத ‘’அ’’ ஜாதி அல்லாத வாக்குகளை தன் பக்கம் திருப்ப முயல்வார். இதனை அறியும் உணரும் ‘’அ’’ ஜாதி வேட்பாளர்களில் ஒருவர் தனது மறைமுக ஆதரவுடன் ‘’இ’’ மற்றும் ‘’ஈ’’ சமூகத்தில் இருந்து இரு வேட்பாளர்களை போட்டியிடச் செய்வார். 

தனது ஜாதிக்காரர் என்பதற்காக மொத்த ஜாதியும் ஒருவருக்கே வாக்களித்து விடுவதில்லை ; பெரும்பான்மை வாக்குகள் அங்கு செல்லும். மற்ற ஜாதியினர் எவ்விதம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி நிர்ணயம் ஆகும். மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் முறை இரண்டாம் இடம் பிடிப்பவரைக் காட்டினும் ஒரு வாக்கேனும் கூடுதலாகப் பெறுபவர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறுகிறது. எனவே கூடுதல் வாக்குகள் எவ்விதம் பெறுவது என்பதே கட்சிகளின் இலக்காகி விடுகிறது. 

கிராமம், நகரம், சட்டமன்றத் தொகுதி, நாடாளுமன்றத் தொகுதி என அனைத்திலுமே 99 சதவீதம் இவ்விதமாகவே அரசியல் நடக்கிறது. இதனை ஜனநாயக விரோதம் எனக் கூற முடியாது. ஜனநாயகம் 21 வயதுக்கு மேற்பட்ட எவரும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற உரிமையை வழங்குகிறது. அதன் படியே வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எனவே இது வேட்பாளர்கள் தொடர்பானதோ கட்சி தொடர்பானதோ இல்லை. வாக்காளர் மனோபாவம் தொடர்பானது. வாக்காளர்கள் அரசாங்க இயங்குமுறையையும் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும். எது தரமான அரசியல் எது தரமற்ற அரசியல் அல்லது எது அதிக தரங்கெட்ட அரசியல் எது குறைந்த தரங்கெட்ட அரசியல் என்பதை முடிவு செய்து தங்கள் வாக்கைச் செலுத்த வேண்டும். ஜாதி அரசியலின் காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவது அரசியல் கட்சிகளை விட பொதுமக்களின் கைகளிலேயே இருக்கிறது.