இன்று எனது நண்பர் ஒருவர் காரைக்குடியிலிருந்து ஃபோன் செய்திருந்தார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிக நன்றாக அறிவோம். எனினும் நாங்கள் அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. அதிகம் உரையாடிக் கொள்ளவும் வாய்ப்பு அமையவில்லை. இந்நிலை அரிதானது என்றாலும் இலக்கிய வாசகர்களுக்கு இடையே இது சாத்தியம் தான். இலக்கிய வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் நண்பர். மேலும் பல ஆண்டுகளாக ஐந்து ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கரில் அடர்வனம் ஒன்றை அமைத்திருக்கிறார். இப்போது பறவை பார்த்தலில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்படுகிறார். அவரது அழைப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். எனது விருப்பத்தைக் கூறினேன். அவசியம் வருமாறு கூறினார். நாளையே செல்வது என முடிவு செய்தேன்.
எப்படி செல்வது என்ற கேள்வி எழுந்தது. இரு சக்கர வாகனம்தான் என் முதல் தேர்வாக இருக்கும். அவ்வாறெனில் நாளை காலை 5 மணிக்குப் புறப்பட்டால் கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி செல்ல வேண்டும். சாலைகள் அகலமாக பெரிதாகத்தான் இப்போது இருக்கின்றன. எவ்விதமான சாலைகளாக இருந்தாலும் எனது வாகன வேகம் என்பது மணிக்கு 40 - 50 கி.மீ ஆகவே இருக்கும். காரைக்குடி தோராயமாக 170 கி.மீ இருக்கும். அவ்வாறெனில் 4.5 மணி நேரம் ஆகிவிடும். காலை 5 மணிக்குக் கிளம்பினால் 9.30க்கு அங்கே இருக்கலாம். இருப்பினும் காலையில் முன் நேரத்தில் எழுவது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது ஆகியவை சிறு சோர்வை உண்டாக்கக் கூடும்.
பொதுவாக நான் எங்கும் இரு சக்கர வாகனத்தில் தான் பயணப்படுவேன் என பரவலாகக் கருதுகிறார்கள். எனக்கு எந்த பயண சாதனமாக இருந்தாலும் உகந்ததே. பயணம் தான் எனக்கு முக்கியம்.
ஸ்ரீநகருக்கோ தில்லிக்கோ கௌஹாத்திக்கோ டேராடூனுக்கோ தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்வது என்பது முற்றிலும் அகவயமான அனுபவம். முதல் உடலும் மனமும் வெளியுலகமும் ஒத்திசையும் தன்மையே நீண்ட தூர இரு சக்கர வாகனத்தின் உண்மையான அனுபவம். கையில் அலைபேசி இல்லாமல் ஊரிலிருந்து 100 கி.மீ தாண்டி விட்டாலே பயணிப்பவர் முற்றிலும் வேறொரு மனிதர் ஆகி விடுவார். பயணிப்பவர் அறிந்த பயணிப்பவருக்குத் தெரிந்த பயணிப்பவர் மனதில் சுமக்கும் பொறுப்புகள் அனைத்தின் எடையும் 99 சதவீதம் குறைந்து விடும். லௌகிகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய ஆக சாத்தியமான விடுதலை அது. அந்த எடையின்மை அதன் பின் பயணியை வழிநடத்திச் செல்லும். காணும் ஒவ்வொரு பொருளும் புதிதாக இருக்கும். காணும் ஒவ்வொரு காட்சியும் புதிதாக இருக்கும். உலகம் கணந்தோறும் புதியதே எனினும் நாம் வழக்கமாகப் பழகியிருக்கும் இடத்திலேயே இருக்கும் போது நாம் அதனை உணர்வதில்லை. பயணத்தின் முதல் நாள் மாலை பயணி 250 கி.மீ சென்று சேர்ந்திருந்தாலும் உடலும் மனமும் நாம் புதிய இடத்தில் இருக்கிறோம் என்பதை 100 சதவீதம் உணர்ந்திருக்காது. 90 சதவீதம் உணர்ந்திருக்கும். நீண்ட பயணத்தின் விளைவாக உறக்கம் சூழ்ந்து விடும். மறுநாள் காலை விழித்ததும் மனமும் உடலும் தான் புதிய இடத்தில் இருப்பதை முழுமையாக உணரும். இரண்டாம் நாள் பயணம் எப்போதும் புத்தம் புதியதாக இருக்கும். அதன் பின் பயணத்தின் ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு பொழுதுமே ஒவ்வொரு கணமுமே அந்த உணர்வு பயணியை வியாபித்து விடும்.
காரைக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பினால் அன்று மாலை ஊருக்குப் புறப்பட முடியாது. மாலை 4 மணிக்குக் கிளம்பினால் இரவு 9 அல்லது 10 மணியாகி விடும் ஊர் திரும்ப. மாலை 6 மணிக்கு மேல் நீண்ட தூரம் இரு சக்கர வாகனம் இயக்குவது உகந்தது அல்ல. நண்பரும் உடன் புறப்பட்டு விட்டதாக எண்ணுவார். என்ன செய்வது என்று யோசித்தேன். பேருந்துப் பயணம் என்றால் கும்பகோணத்தில் தஞ்சாவூரில் புதுக்கோட்டையில் என பேருந்து மாற வேண்டும். ரயில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன்.
திருவாரூரில் காலை 6.30க்கு காரைக்குடிக்கு ஒரு ரயில் இருந்தது. காலை 9.30க்கு காரைக்குடி சென்று விடும். அந்த ரயில் பாதையில் உள்ள ஊர்கள் சிறு சிறு கிராமங்கள். சுவாரசியமான ரயில் மார்க்கம் அது. முன்னர் மயிலாடுதுறை காரைக்குடி என பாசஞ்சர் வண்டி இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது அது திருவாரூர் காரைக்குடி என்றாகி விட்டது. வெகு ஆண்டுகளுக்கு முன்னால் காலை 6.30க்கும் மாலை 5.30க்கும் என காரைக்குடி பாசஞ்சர் இருந்தது என நினைவு. மாலை செல்லும் ரயிலில் நான் சில முறை சென்றிருக்கிறேன்.
காலையில் 6.30க்கு திருவாரூரில் காரைக்குடி ரயிலைப் பிடித்து விடுவது என முடிவு செய்து கொண்டேன். ஆரூரில் பழைய பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே ரயில் நிலையம் இருக்கிறது. 6.30க்கு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்றால் ரயில் நிலையத்தில் 6.15க்கு இருக்க வேண்டும். ஊரில் 5 மணிக்கு திருவாரூருக்கு பேருந்து ஏறினால் தான் சரியாக இருக்கும். 5 மணிக்கு பேருந்து ஏற வீட்டில் 4 மணிக்கு கிளம்பிட வேண்டும். நாளை காலை 3 மணிக்கு அலாரம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் திருவாரூர் மயிலாடுதுறை மார்க்கமாகச் செல்லக் கூடியது. காரைக்குடியில் இரவு 7.30க்கு இரவு 10.15க்கு ஊர் வந்து சேரும். அதில் திரும்பி விடலாம்.
99 சதவீதம் நாளை காரைக்குடிக்கு ரயிலில் தான் செல்வேன். 1 சதவீதம் இரு சக்கர வாகனத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது.
செட்டிநாடு பகுதியின் நிலக்காட்சிகள் எனக்கு மிக இனியவை. தஞ்சைப் பிராந்தியத்தில் பசுமையை மட்டுமே கண்ட எனக்கு மண்ணின் விதவிதமான வண்ணங்கள் காணக் கிடைக்கும் செட்டிநாடு மிகவும் விருப்பத்துக்குரிய ஒன்று.
நாளைய பயணம் இன்றே உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
***