Thursday, 1 January 2026

மகிழ்ச்சியான துவக்கம்

 இன்று என் நண்பர் ஒருவருடன் ***** அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் மூன்று குழந்தைகள் காணச் சென்றிருந்தேன். சென்னை நண்பர் அந்த மூன்று குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவைப்படும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அவர்களுக்கு வாங்கித் தருமாறு கூறினார். அதற்கான தொகையை UPI மூலம் அனுப்பி வைப்பதாகக் கூறினார். நானும் நண்பரும் ஒரு மளிகைக்கடைக்குச் சென்று மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கான தொகையைக் கூறியதும் நண்பர் மளிகைக்கடையின் வங்கிக் கணக்குக்கு தொகையை அனுப்பி விட்டார். மளிகைக் கடைக்காரர் என்ன விபரம் எனக் கேட்க நான் அவரிடம் மூன்று குழந்தைகள் குறித்துக் கூறினேன். கடைக்காரர் தன் பங்களிப்பாக கணிசமான மளிகைப் பொருட்களைக் கொடுத்தார். என்னுடன் வந்த  நண்பர் குழந்தைகளுக்கு இனிப்புகள் எடுத்துச் சென்று கொடுக்க விரும்பினார். கடைவீதியில் அதனையும் வாங்கிக் கொண்டோம். இரண்டு பெரிய மூட்டைகளுடன் ***** நோக்கி புறப்பட்டோம். சென்னை நண்பரின் உறவினர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு அவர்கள் பங்களிக்க விரும்புகிறார்கள். இந்த 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் ஒரு துவக்கமாக அமையும் என எண்ணினோம். 

ஒரு வாரம் முன்பு 25.12.2025 அன்று அங்கே சென்றிருந்தேன். அவர்கள் துயரத்தைக் கேள்விப்பட்டு அவர்களுக்கு உதவ சிலர் முன்வந்திருக்கின்றனர். தற்போது அவர்கள் வீட்டுக் கூரை புதிதாக வேயப்பட்டிருக்கிறது. சிலர் தங்களால் இயன்ற உதவியாக மளிகைப்பொருட்களை அளித்திருக்கின்றனர்.

உதவிகள் அந்த மூன்று குழந்தைகளுக்கும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மிகத் தீவிரமாக அளித்திருக்கிறது. அவர்கள் உணரும் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையே மிக முக்கியமானது என எனக்குத் தோன்றியது. 

என்னுடைய கவனத்துக்கு வந்த ஒரு விஷயத்தில் ஏதேனும் உதவ முடியுமா என முயல்கிறேன். இந்த விஷயம் பலருடைய கவனத்தில் இருப்பதும் பலர் உதவ விரும்புவதும் பலர் உதவுவதும் மிகவும் பயனுள்ளது. இந்த உலகில் வாழும் அனைவருக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் உதவிகள் தேவைப்படவே செய்கின்றன. நம்மால் முடிந்ததை பிறருக்குச் செய்வது எப்போதும் நன்மையை அனைவருக்கும் அளிக்கும். 

எனது நண்பர்கள் சிலர் அந்த குழந்தைகளின் படிப்புச் செலவில் பங்களிக்க விருப்பம் தெரிவித்தார்கள். எந்த உதவியும் அதன் அளவைப் பொறுத்தது அல்ல ; உணர்வைப் பொறுத்தது என்பதால் சிறிய உதவியாயினும் அதனைச் செய்க என்றே நண்பர்களிடம் கூறுகிறேன். 

2026ம் ஆண்டின் முதல் தினத்தை மூன்று குழந்தைகள் சந்திப்புடன் தொடங்கியது மகிழ்ச்சி அளித்தது.