Tuesday, 3 March 2026

நூதனச் சூழல்

 நேற்று எனது கவனத்துக்கு ஒரு விஷயம் வந்தது. எனது ஆலோசனையைக் கேட்டார்கள். 

அதாவது, பெங்களூரில் எனது நண்பர் ஒருவர் ஃபிளாட் வாங்குகிறார். ஃபிளாட் உரிமையாளர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரது மேலாளர் கிரயத் தொகையில் 10 சதவீதத்தை உரிமையாளர் சார்பாக நண்பரிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார். கிரய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தபாலில் அனுப்பப்பட்டு உரிமையாளரின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. நண்பர் வங்கிக் கடன் ஏற்பாடு செய்து விட்டார். கிரய ஆவணத்திலும் தபால் மூலம் கையெழுத்திட்டு அனுப்புகிறேன் எனக் கூறுகிறார் உரிமையாளர். அந்த கையெழுத்திட்ட ஆவணத்தை மட்டும் பதிவாளர் முன் சமர்ப்பிக்க தனது மேலாளருக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்துள்ளார். இவ்விதமே தொடரலாமா என்று நண்பர் என்னிடம் கேட்டார். 

நண்பர் மிகவும் சோர்வான குரலில் பேசினார். பலரிடம் விவாதித்து சோர்ந்திருப்பார் என யூகித்தேன். 

ஃபிளாட் உரிமையாளரை அவரது மேலாளருக்கு முழுமையான பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொன்னேன். அந்த பவர் ஆஃப் அட்டர்னியில் நண்பர் வாங்க இருக்கும் சொத்தை முழுமையாகக் குறிப்பிட்டு பவர் வாங்க வேண்டும். அதன் பின் மேலாளர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வர உரிமையாளர் சார்பில் கையெழுத்திட்டு பதிவினை நிறைவு செய்யுங்கள் என்று சொன்னேன். 

ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவன் என்ற முறையில் நண்பரின் வலியை உணர்கிறேன். நான் சொன்ன வழிமுறையைத் தவிர வேறு எது செய்தாலும் நண்பர் சிக்கலில் சிக்கிக் கொள்வார். ஃபிளாட் உரிமையாளர் தான் ‘’வெளிநாடு வாழ் இந்தியர்’’ என்பதை வெளிக்காட்டாமல் பத்திரப்பதிவை முடிக்கப் பார்க்கிறார். அதற்கு அவர் பத்திரப்பதிவுக்காவது இந்தியா வர வேண்டும். அவ்விதம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்து கிரய ஆவணத்திலும் கையெழுத்திட்டு அதில் அமெரிக்க அட்வகேட்டின் முத்திரையுடன் அனுப்புகிறார் என்றால் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது ‘’ஃபிளாட் வாங்குபவர்’’ ஆன நண்பரும் அறிந்த விஷயம் இது என்றாகிவிடும். கிரய ஆவணத்தின் தேதிக்கும் வங்கி அளிக்கும் வரைவோலை அல்லது காசோலையின் தேதிக்கும் வித்தியாசம் வந்து விடும். உதாரணத்துக்கு மார்ச் 1ம் தேதி கிரய ஆவணம் கையெழுத்தாகிறது எனில் அதில் மார்ச் 4 தேதியிட்ட காசோலையோ அல்லது வரைவோலையோ குறிப்பிடப்பட முடியாது. காசோலை அல்லது வரைவோலையின் தேதியை ஆவணத்தில் குறிப்பிடாமல் இருந்தால் அது நண்பருக்குத்தான் பின்னடைவு. 

நண்பருக்குக் கடன் அளிப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கி. அவர்கள் வழக்கறிஞர் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் கவனமாக அணுகியிருக்க வேண்டும் என்பதும் வங்கி மேலாளர் இந்த கோப்பு தொடர்பாக நண்பருக்கு முன்னெச்சரிக்கை அளித்திருக்க வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு. 

அவசியம் என்றால் சொல்லுங்கள் நான் வந்து உடன் இருக்கிறேன் என்றேன்.  

Monday, 2 March 2026

எஸ்டிமேட் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைத்தவருக்கு சொந்தமாக 4 வீடுகள் இருக்கின்றன. பக்கத்து பக்கத்தில் அடுத்தடுத்து இருக்கும் 4 வீடுகள். 

‘’பிரபு ! வீட்டுக்கெல்லாம் பெயிண்ட் அடிக்கணும்’’

‘’அப்படியா ! மெட்டீரியல் நீங்க வாங்கிக் கொடுத்திடறீங்களா?’’

‘’லேபர் வித் மெட்டீரியல்னா என்ன காஸ்ட். லேபர் மட்டும்னா என்ன காஸ்ட்?’’

‘’அத நான் சொல்றன். அதுக்கு முன்னால நீங்க எப்படி செய்ய நினைக்கறீங்கன்னு யோசிக்காமலே காஸ்ட் தெரிஞ்சுக்க விரும்பறீங்களா? நீங்க ஒரு முடிவுக்கு வாங்க.’’

அவர் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. ‘’மெட்டீரியல் நான் வாங்கி கொடுத்தடறன்’’

‘’ஓ.கே ! ஃபைன். இப்ப உங்க 4 வீடு பெயிண்ட் அடிக்க எத்தனை லேபர் ஆகும்னு உத்தேசமா சொன்னா போதும். பெயிண்ட் அடிக்க சாரக் கழி தேவைப்படும். சாரக்கழி வாடகைக்கு எடுத்து கொடுத்திடறீங்களா?’’

‘’அது வந்து’’ என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கினார். ‘’கயித்துல தொங்கி பெயிண்ட் அடிப்பாங்களே?’’

‘’வெயிட் தாங்காம கயிறு அறுந்து விழுந்தா தன்னோட குடும்பத்துக்கு யார் இருக்கான்னு பெயிண்டர் யோசிக்க மாட்டாங்களா?’’

அமைதி நிலவியது. 

‘’ 4 வீடு பெயிண்ட் அடிக்க மினிமம் 15 நாள் ஆகும். நீங்க 15 நாளும் கூட இருங்க. மெட்டீரியல் வாங்கிக் கொடுங்க. சாரக்கழி வாடகைக்கு எடுத்துக் கொடுங்க. மொத்த பட்ஜெட்ல 60 பர்செண்ட் இதுக்கே ஆகும். நான் இப்ப தோராயமா எத்தனை பெயிண்டிங் லேபர் ஆவாங்கன்னு சொல்லிடறன். மெட்டீரியல் காஸ்ட் எவ்வளவு ஆகும் சாரக்கழி வாடகை எவ்வளவு ஆகும்னும் சொல்லிடறன்’’

‘’சரி ‘’ என்றார். 

‘’முதல்ல இப்ப உங்க பில்டிங் எப்படி இருக்குன்னு பாக்கணும். பாசி படிஞ்சிருக்கா. ரஸ்ட் அதிகமாக இருக்கா ? கிரில் எல்லாம் எப்படி இருக்கு?இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். நானும் என் ஸ்டாஃப்ஃபும் வரோம். வந்து பாத்துட்டு எஸ்டிமேட் கொடுக்கறோம். உங்க பில்டிங் மெஷர்மெண்ட் எடுக்கணும். அப்பதான் மெட்டீரியல் எவ்வளவு தேவைன்னு துல்லியமா சொல்ல முடியும். நீங்க என்ன செய்ங்க. எனக்கு 1000 ரூபாய் கொடுங்க. எல்லா விவரமும் துல்லியமா சொல்லிடறன்.’’

’’சரி சார்’’

அதன் பின் எனக்கு ஃபோன் வரவில்லை. 

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

 
நூல் : ஸ்ரீ காவேரி ரஹஸ்யம் ஆசிரியர் : பி. மஹாதேவ ஐயர் பக்கம் : 320 விலை : ரூ. 400 பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம், பழைய எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை, 600004 

நதியே மனிதருக்கு வாழ்க்கையைத் தந்தது. தருகிறது. நதியே மனிதர்களை சமூகமாக ஆக்கியது. பாரத நிலம் நதியை அன்னையாகக் கடவுளாக வணங்கும் உணர்வு கொண்டது. உறக்கம் தெளிந்து விழித்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதை கோதாவரி’’ என்ற ஏழு நதி அன்னையரை நிலத்தில் பிறந்த ஒவ்வொரு மானுடனும் நன்றியுடன் நினைத்து மதிப்புடன் அப்பெயர்களை உச்சரிக்க வேண்டும் என்கிறது நமது மரபு. 

தமிழகத்துக்கு அன்னை போல் விளங்கும் காவிரியின் சிறப்புகளை காவிரிக்கரையில் வாழ்ந்த ஞானியரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. தத்தாத்ரேய குரு மரபு சிறப்புற்றிருக்கும் குடகு மலைப் பிராந்தியத்தில் பிறந்து வீரசைவ மரபு கோலோச்சும் மைசூர் பிராந்தியத்தைத் தாண்டி இறையும் உயிரும் வேறல்ல எனக் காட்டும் அத்வைதிகளின் அருள் வெளியான தமிழகத்தில் பாய்ந்து ஜீவன்கள் பரம்பொருளை அடைவது போல் காவேரி சமுத்திரத்தை அடைகிறது. 

காவிரிக்கரையில் வாழ்ந்த முக்கியமான சான்றோர்களின் யோகிகளின் ஆசான்களின் வாழ்வினை கூறிச் செல்கிறது இந்நூல். அத்தகு பெரியோர்கள் காவிரி குறித்து எழுதிய நூல்களையும் பக்தித் துதிகளையும் வாசகர் முன் கொண்டு வருகிறது ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. சதாசிவ பிரம்மேந்திரர், போதேந்திராள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், ஸ்ரீதர ஐயாவாள் ஆகிய பெரியோரின் வாழ்க்கையைக் கூறுவதுடன் காவிரி குறித்து பாடப்பட்ட தேவாரப் பாடல்களையும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் காவிரிக்கரையில் வாழ்ந்த ஆழ்வார், நாயன்மார்களின் முழுமையான பட்டியலையும் இந்நூல் அளிக்கிறது. சங்க இலக்கியத்தில் காவிரி இடம் பெற்றிருக்கும் நூல்களை வரிசைப்படுத்தி உள்ளது இந்நூல். நமது மரபில் உன்னதமான விஷயங்களை ‘’ஸ்மரணை’’ செய்ய வேண்டும். நலம் நல்குவதும் பயன் பயப்பதுமான செயல் அது. காவிரியைத் தன் ஸ்மரணையில் கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. 

Sunday, 1 March 2026

சோறிடும் நாடு ; துணி தரும் குப்பை

’’சோறிடும் நாடு ; துணிதரும் குப்பை’’ என உலகியலை எள்ளளவும் பொருட்டாக மதிக்காமல் அலைந்து திரிபவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இந்த தேசம் அவ்விதமாக அலைந்து திரிபவர்களின் தேசம். இன்று சிதம்பரம் சாலையில் தேசாந்திரி ஒருவரைச் சந்தித்தேன். அவர் ராமேஸ்வரத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். இளைஞராக இருந்தார். வயது 30 லிருந்து 35 இருக்கலாம். கையில் ஒரே ஒரு சிறுபை. கையில் ஒரு சிறிய கழி வைத்திருந்தார். அவரது தோற்றம் மூலம் அவர் ஒரு தேசாந்திரியாக இருப்பார் என யூகித்தேன். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான் எனது வாகனத்தை நிறுத்தி இறங்கி அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் காசியிலிருந்து தனது யாத்திரையைத் துவக்கியிருக்கிறார். 12 ஜ்யோதிர்லிங்கங்களையும் தரிசிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். பாதசாரியாக தனது பயணத்தைத் துவங்கி விட்டார். ராமேஸ்வரம் வரை சென்று விட்டு அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று பள்ளி கொண்ட பெருமாளை சேவித்து விட்டு சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சிதம்பரம் சென்று கொண்டிருக்கிறார். ’’தங்களுக்கு உணவளிக்க விரும்புகிறேன்’’ என்று சொன்னேன். சரி என்றார். நான் இரு சக்கர வாகனத்தில் அருகில் இருந்த நகரத்துக்குச் சென்று உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் வணங்கி அளித்தேன். அவர் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் புன்னகைத்து விட்டு நடக்கத் தொடங்கினார்.