’’சோறிடும் நாடு ; துணிதரும் குப்பை’’ என உலகியலை எள்ளளவும் பொருட்டாக மதிக்காமல் அலைந்து திரிபவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இந்த தேசம் அவ்விதமாக அலைந்து திரிபவர்களின் தேசம். இன்று சிதம்பரம் சாலையில் தேசாந்திரி ஒருவரைச் சந்தித்தேன். அவர் ராமேஸ்வரத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். இளைஞராக இருந்தார். வயது 30 லிருந்து 35 இருக்கலாம். கையில் ஒரே ஒரு சிறுபை. கையில் ஒரு சிறிய கழி வைத்திருந்தார். அவரது தோற்றம் மூலம் அவர் ஒரு தேசாந்திரியாக இருப்பார் என யூகித்தேன். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான் எனது வாகனத்தை நிறுத்தி இறங்கி அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் காசியிலிருந்து தனது யாத்திரையைத் துவக்கியிருக்கிறார். 12 ஜ்யோதிர்லிங்கங்களையும் தரிசிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். பாதசாரியாக தனது பயணத்தைத் துவங்கி விட்டார். ராமேஸ்வரம் வரை சென்று விட்டு அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று பள்ளி கொண்ட பெருமாளை சேவித்து விட்டு சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சிதம்பரம் சென்று கொண்டிருக்கிறார். ’’தங்களுக்கு உணவளிக்க விரும்புகிறேன்’’ என்று சொன்னேன். சரி என்றார். நான் இரு சக்கர வாகனத்தில் அருகில் இருந்த நகரத்துக்குச் சென்று உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் வணங்கி அளித்தேன். அவர் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் புன்னகைத்து விட்டு நடக்கத் தொடங்கினார்.