ஒரு தமிழ்க் கவிஞரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அவரது முதல் கவிதைத் தொக்குப்பைக் கொண்டு வர அவர் முடிவு செய்த போது தொகுப்புக்கான கவிதைகளை புதுச்சேரியின் மீனவர் கிராமக் கடற்கரை ஒன்றில் அமர்ந்து நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி வாசித்தோம். நவீனக் கவிதையின் வடிவம் மௌனமான அக வாசிப்புக்கானது. ஐரோப்பியத் தாக்கம் அவ்விதமான தன்மையை உண்டாக்கியிருக்கிறது. தமிழ் உலகின் உயர்தனிச்செம்மொழிகளில் ஒன்று. நமக்கு 2500 ஆண்டு காலத்துக்கும் மேலாக உயிர்த்திருக்கும் மொழி இருக்கிறது. இங்கே கவிதை சொல்லப்பட்டிருக்கிறது ; பாடப்பட்டிருக்கிறது ‘ எழுதப்பட்டிருக்கிறது. சொல்லப்படும் எழுதப்படும் கவிதை பாடப்பட்டிருக்கிறது. பாடப்படும் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அம்மரபினையொட்டி எழுதப்பட்ட அக்கவிதைகளை அந்தக் கடற்கரையில் மீன் வலைகளுக்கு மத்தியில் அலையோசை மெல்ல கேட்டுக் கொண்டிருக்க நெரித்த திரைகடலின் முன் அமர்ந்து நாங்கள் எங்கள் குரலில் வாசித்துக் கொண்டிருந்தோம். அந்நிகழ்வு நிறைவு பெற்றதும் அத்தொகுப்பு சிறந்த ஒன்றாக விளங்கும் என எங்கள் ஆழுளம் அறிந்தது. அவ்விதமே அத்தொகுப்பு அமைந்தது நல்லூழ்.
சில ஆண்டுகளுக்குப் பின் நண்பர் தன் இரண்டாம் தொகுப்பைக் கொண்டு வர இருக்கிறார். தொகுப்பினை இறுதி செய்ய சென்னை வந்து விடுகிறேன் என்று சொன்னேன். இருப்பினும் கடைசி நேரத்தில் முதல் தொகுப்பைப் போல கவிதை வாசிப்பை புதுச்சேரியில் வைத்து இறுதி செய்ய நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம். அவர் சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு காரில் புறப்பட்டார். நான் ஊரிலிருந்து அதே நேரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். 12 மணிக்கு புதுவை கடற்கரையில் இருக்கும் பாரதி பூங்காவினை நான் சென்றடைந்தேன். நண்பர் 1 மணிக்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத இனிமையாக நண்பருடன் அவரது இன்னொரு நண்பரும் வந்திருந்தார். மூவரும் முறையே காவிரி தென்பெண்ணை பொருநை நதிகளின் கரைகளில் பிறந்து வளர்ந்தவர்கள்.
அமைதியான காஃபி ஷாப் ஒன்றில் அமர்ந்து கவிதைத் தொகுப்பின் கவிதைகளை மாறி மாறி வாசித்தோம். நானும் நண்பரும் வாசிக்க மூன்றாவது நண்பர் அக்கவிதைகளை உள ஆழத்தால் பின் தொடர்ந்தது அத்தருணத்தை மிக மிருதுவானதாகவும் மென்மை மிக்கதாகவும் ஆக்கியது. தொகுப்பை இறுதி செய்து விட்டு நண்பர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துப் பிரிந்து ஊர் திரும்பினேன்.