Thursday, 30 April 2026

புள்ளரவம்

 வசந்தத்தின் மாலை
முழு பகலும் வெம்மை ஏந்திய மரம்
சோர்ந்திருந்தது
சிறிய கிளைகளில்
புள்ளினங்கள் அமர
அசையத் தொடங்கியது மரம்
கிளைகளை அசைத்து அசைத்து
ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன
சிறகு கொண்ட உயிரினங்கள்
ஆசுவாசம் நிறைந்திருந்தது அவ்வொலியில்
கடந்து செல்பவன் அகத்தில் 
மரத்தில் கிளையில் இலையில்
காற்றில்
நிறையும் ஆசுவாசம்

காவிரி தென்பெண்ணை பொருநை

ஒரு தமிழ்க் கவிஞரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அவரது முதல் கவிதைத் தொக்குப்பைக் கொண்டு வர அவர் முடிவு செய்த போது தொகுப்புக்கான கவிதைகளை புதுச்சேரியின் மீனவர் கிராமக் கடற்கரை ஒன்றில் அமர்ந்து நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி வாசித்தோம். நவீனக் கவிதையின் வடிவம் மௌனமான அக வாசிப்புக்கானது. ஐரோப்பியத் தாக்கம் அவ்விதமான தன்மையை உண்டாக்கியிருக்கிறது. தமிழ் உலகின் உயர்தனிச்செம்மொழிகளில் ஒன்று. நமக்கு 2500 ஆண்டு காலத்துக்கும் மேலாக உயிர்த்திருக்கும் மொழி இருக்கிறது. இங்கே கவிதை சொல்லப்பட்டிருக்கிறது ; பாடப்பட்டிருக்கிறது ‘ எழுதப்பட்டிருக்கிறது. சொல்லப்படும் எழுதப்படும் கவிதை பாடப்பட்டிருக்கிறது. பாடப்படும் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அம்மரபினையொட்டி எழுதப்பட்ட அக்கவிதைகளை அந்தக் கடற்கரையில் மீன் வலைகளுக்கு மத்தியில் அலையோசை மெல்ல கேட்டுக் கொண்டிருக்க நெரித்த திரைகடலின் முன் அமர்ந்து நாங்கள் எங்கள் குரலில் வாசித்துக் கொண்டிருந்தோம். அந்நிகழ்வு நிறைவு பெற்றதும் அத்தொகுப்பு சிறந்த ஒன்றாக விளங்கும் என எங்கள் ஆழுளம் அறிந்தது. அவ்விதமே அத்தொகுப்பு அமைந்தது நல்லூழ். 

சில ஆண்டுகளுக்குப் பின் நண்பர் தன் இரண்டாம் தொகுப்பைக் கொண்டு வர இருக்கிறார். தொகுப்பினை இறுதி செய்ய சென்னை வந்து விடுகிறேன் என்று சொன்னேன். இருப்பினும் கடைசி நேரத்தில் முதல் தொகுப்பைப் போல கவிதை வாசிப்பை புதுச்சேரியில் வைத்து இறுதி செய்ய நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம். அவர் சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு காரில் புறப்பட்டார். நான் ஊரிலிருந்து அதே நேரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். 12 மணிக்கு புதுவை கடற்கரையில் இருக்கும் பாரதி பூங்காவினை நான் சென்றடைந்தேன். நண்பர் 1 மணிக்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத இனிமையாக நண்பருடன் அவரது இன்னொரு நண்பரும் வந்திருந்தார். மூவரும் முறையே காவிரி தென்பெண்ணை பொருநை நதிகளின் கரைகளில் பிறந்து வளர்ந்தவர்கள். 

அமைதியான காஃபி ஷாப் ஒன்றில் அமர்ந்து கவிதைத் தொகுப்பின் கவிதைகளை மாறி மாறி வாசித்தோம். நானும் நண்பரும் வாசிக்க மூன்றாவது நண்பர் அக்கவிதைகளை உள ஆழத்தால் பின் தொடர்ந்தது அத்தருணத்தை மிக மிருதுவானதாகவும் மென்மை மிக்கதாகவும் ஆக்கியது. தொகுப்பை இறுதி செய்து விட்டு நண்பர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துப் பிரிந்து ஊர் திரும்பினேன். 

அகிலா

அண்டப் பெரு வெளி
அமைத்து
கொண்டு 
இருக்கும்
உருவம்
நீ

வசந்தத்தின் நாட்குறிப்பு - 4

 வசந்தம் என்பது கவிதை
ஒரு மலரை உலகாக
ஒரு நீர்த்துளியை ஆழியாக
ஒளிக்கதிர் ஒன்றை அமுதப் பெருவெளியாக
ஒரு சொல்லை
முழுமையான ஒரு வாழ்க்கையாக
உணர வைக்கும்
கவிதை

வசந்தத்தின் நாட்குறிப்பு - 3

வசந்தம் என்பது
மதுரம்
அதி மதுரம்
மலரை மிக மென்மையாய் ஸ்பரிசிக்கும் பட்டாம்பூச்சியிடம் 
மலர்களில் உள்ளுறையும்
தேனைத் 
துளித்துளியாய் சேர்த்துக் கொள்ளும் தேனீயிடம்
புற்களைக் கொண்டு 
அற்புதமான தங்குமிடம்
நிர்மாணிக்கும்
குருவியிடம்
விட்டு விடுதலையாகி நிற்கும் 
சிட்டுக்களிடம்
உடனிருந்து
உணரவேண்டியது
வசந்தத்தின் அதிமதுரம்

வசந்தத்தின் நாட்குறிப்பு - 2

 வசந்தத்தின் மாலை அந்தி
இன்னொரு துவக்கம்
இன்னொரு வாழ்க்கை
இன்னொரு இனிமை
இரவை 
இரவின் துளியை
இரவின் மென்மையை
உணர்ந்திருக்க
வசந்தத்தின் இரவு 
ஓர் உற்பத்தி ஸ்தானம்
இரவுகள் துயில்வதற்கானவை அல்ல
உணர்வதற்கானவை
வசந்தத்தின் இரவுகள்
மௌனமாக சொல்லிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு கணமும்

Wednesday, 29 April 2026

வசந்தத்தின் நாட்குறிப்பு

 வசந்தம் ஒரு ஆசிர்வாதம்
பற்றி எரியும் கோடைப் பொழுதை
அதன் நிறை உக்கிரத்தை
தவிர்க்காமல்
புகார் சொல்லாமல்
அலுத்துக் கொள்ளாமல்
கண் கொண்டு நேராகப்
பார்ப்பது 
உங்கள் இயல்பென்றால்
வசந்தம்
உங்களுக்கு
ஒரு ஆசிர்வாதம் 

*

கோடையின் பகலுக்குள்
நுழைந்து
அதில் எங்காவது ஒளிந்து கொள்ள
விரும்புகிறது
ஊர்

மரநிழல்கள்
பூங்காக்கள்
கடல் கரைகள்
கட்டிடங்கள்

பகல் பொழுதை மெல்லக் கடந்து விட விரும்புகிறது ஊர்

*

வெயிலைக் கண்டு அஞ்சாதே
வெயிலை வெறுக்காதே
வெயில் காலத்தில் கண் மூடிக் கொள்ளாதே 
வெயிலில் இறங்கு
வெயிலில் நட
வெயிலில் உலவு

*

வெயிலில் உலவி நடந்து இறங்கியிருந்தால்
கோடையின் அந்தி
உனக்கு ஆசிர்வாதம்
ஊர்
ஊர் மக்கள்
ஊர் மனிதர்கள்
நம்பிக்கை கொள்கிறார்கள்
கோடையின் அந்திப் பொழுதில்
தகிக்கும் நிலத்தில்
மலர்ந்த
மலர்களை
சரங்களாக அணிந்து
வசந்தத்தை வரவேற்கின்றனர்
பெண்கள்

*

சூரியன் அஸ்தமித்த நிலத்தில்
மெல்ல வீசுகிறது
மென்காற்று
அதன் மென்மைக்காக 
அதன் ஸ்பரிசத்துக்காக
அதன் முத்தத்துக்காக
காத்திருப்பவன்
அதிர்ஷ்ட்டசாலி
அதன் மென்மையை
அதன் ஸ்பரிசத்தை
அதன் முத்தத்தை
பெறுபவன்
அதிர்ஷ்டசாலி

*

கோடை அந்தியின் நிலவு
மகத்தானது
என உணர்ந்தவன்
மகத்தானவன்

*

கோடை மாலை அந்தியில்
ஒரு கடற்கரையில்
கடற்கரை மணலில் அமர்ந்து
அலை மெல்ல எழும் போது
பார்வைக்குட்பட்ட 
எல்லா அலைகளும்
ஆடியாகி
ஆயிரமாயிரம் நிலவைப் பிரதிபலிப்பதை
நீ
அடிக்கடி கண்டிருக்கிறாயா
தெய்வங்கள்
உன் மேல்
பிரியம் கொண்டிருக்கின்றன

*

சிவந்த புரச மலர்கள்
கோடையில் 
மேலும்
செக்கச் சிவக்கின்றன
என்பதை
உணர்ந்திருக்கிறாயா
வாழ்வு
உன்னை
விடுதலைக்கு
இட்டுச் சென்று கொண்டிருக்கிறது

*

வாருங்கள்
நண்பர்களே
பிரியமானவர்களே
மனிதர்களே
கோடையின் இந்த நாள் மாலையில்
இந்த மென்காற்றுடன்
இந்தக் கடலலைகளுடன்
இந்த மலர்களுடன்
இந்த வசந்தப் பொழுதில்
அமிர்தம் பருகச் செல்வோம்

Monday, 27 April 2026

சிறப்பான வழிமுறை

தமிழகத்தில் ஒரு ஆலயம் உள்ளது. 

அந்த ஆலயத்துக்குச் செல்ல முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆலயத்துக்கு எப்போது வர வேண்டும் என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள். அவர்கள் தெரிவிக்கும் பொழுதில் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். 

அந்த ஆலயத்துக்குச் செல்ல பதிவு செய்துள்ளேன். 

அவர்கள் செயல்படுத்தும் இந்த முறை சிறப்பான வழிமுறைகளில் ஒன்று என எனக்குத் தோன்றியது.  

Sunday, 26 April 2026

சலனங்களும் அலைகளும்

சில வாரங்களுக்கு முன், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அடுத்தடுத்து சந்திப்பதற்கு சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அவர் பல ஆண்டுகளாக ஒரு பள்ளியை நடத்துகிறார். அதில் இப்போதிருக்கும் 300 என்ற மாணவர் எண்ணிக்கையை 1200 என ஆக்குங்கள் என்று சொன்னேன். எனது எண்ணங்களை முன்வைத்தேன். பண்டைய இந்தியக் கல்விமுறையிலிருந்து இன்றைக்கு நிலவும் கல்வி முறை வரை பல விஷயங்களை அணுகி எடுத்துக்காட்டி எனது அபிப்ராயங்களையும் எண்ணங்களையும் அவரிடம் சொன்னேன். எனது தளத்தில் எழுதினேன். எழுதியவற்றை அவரும் வாசித்தார். குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை) யிலிருந்து அதிர்ச்சி அடைதல் என்னும் பதிவு வரைக்கும் கணிசமாக எழுதினேன். ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவது குறித்தும் நடத்துவது குறித்தும் என்னால் இப்போது ஒரு மனச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. இவை இவற்றின் இலக்கை எட்டினவா? நண்பர் பள்ளியை மேலும் விரிவுபடுத்துவரா ? இந்த இரண்டும் முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான பதில் நண்பரின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தும் எதிர்கால முடிவுகளைப் பொறுத்தும் அமையும். என்னால் இயன்ற அளவில் ஒரு துவக்கச் சித்திரத்தை உருவாக்கியுள்ளேன். அவர் தொடர்ந்து சிந்தித்து இதனுள் உள் நுழைந்தால் திட்டமிடுதலில் மேலும் அவருக்கு உதவ முடியும்.  

இன்று இந்த விஷயத்தின் மைய முடிச்சு ‘’தரக் கல்வி’’க்கும் ‘’பெருந்திரள் கல்வி’’க்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்பதை உணர்ந்தேன். அது குறித்து எழுத வேண்டும் என எண்ணினேன். மழை விட்டும் தூவானம் விடவில்லை. 

ஒன்று : நான்கு

 














 

அதிர்ச்சி அடைதல்

எண்கள் எப்போதும் சுவாரசியமானவை ; சமயத்தில் அதிர்ச்சி அளிப்பவையும் கூட. தமிழ் மூதாட்டி ஔவை ‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ என்றாள். மானுட வரலாற்றில் மனிதர்கள் எண்களை கற்பனையில் உருவாக்கிக் கொண்டதே உலகியல் ஞானத்தின் அடிப்படையாகவும் துவக்கமாகவும் இருந்திருக்கக் கூடும்.  

நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை நேற்று எழுதினேன். அதாவது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் பட்ஜெட்டைக் கொண்டு ஒவ்வொரு தமிழக மாணவனுக்கும் உலகின் அதி உயர் கல்வியை அளிக்க முடியும் என. இதனைக் கூறியவர் மிகவும் நம்பகத்துக்குரியவர். எனினும் இன்று காலை நான் அதனை நேரடியாக சோதித்துப் பார்க்க முடிவு செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் இணைய தளத்துக்குச் சென்று தமிழகத்தில் 1- 12 வகுப்பு படிக்கும் மாணவர் எண்ணிக்கை என்ன என்று பார்த்தேன். சுமார் 52,00,000 பேர். பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் ரூ.46,000 கோடி. ஒரு மாணவனுக்குத் தோராயமாக ரூ.90,000 செலவு செய்யப்படுகிறது. 

அதாவது, இப்படி கற்பனை செய்து கொள்வோம். ஒரு மாணவன் ஒன்றாம் வகுப்பு சேர வருகிறான். அவன் பெற்றோருக்கு அரசு ரூ.90,000 கொடுத்து நீங்கள் உங்கள் குழந்தையின் கல்வியை நீங்களே கொடுங்கள் எனக் கூறினால் அவர்கள் ஏதேனும் தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த மாணவனுக்கு ரூ.90,000 அரசு கொடுக்கும். 12 ஆண்டுகளில் அந்த மாணவனுக்கு ரூ.10,80,000 அளிக்கப்பட்டிருக்கும். அவன் கல்வியே பயிலவில்லை என்றாலும் 17 வயதில் அவன் கையில் ரூ.10,80,000 இருக்கும். 

தமிழகத்தில் 12 ஆண்டுகளாக பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்ற மாணவனால் 300 வார்த்தைகள் தமிழில் பிழையில்லாமல் ஒரு பத்தி எழுத முடியாது என்னும் நிலை இருக்கும் நிலையில் 12 ஆண்டுகள் தன்னிடம் பயின்ற மாணவனுக்கு குறைந்தபட்சக் கல்வியைக் கூட அளிக்க முயலாத உறுதி செய்ய முடியாத மாநில அரசு ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.10,80,000 12 ஆண்டுகளில் அளித்து விட்டு நேரடியாக கல்வி அளிக்கும் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது தானே உகந்த செயல்?

Saturday, 25 April 2026

பள்ளிக்கல்வி - எச்சரிக்கை சமிங்ஞைகள்

 நண்பருக்காக ஓர் உத்தேச மதிப்பீட்டை உருவாக்கிய போது எனக்கு அதிர்ச்சி தரத்தக்க அளவில் ஓர் உண்மை புரிந்தது. நண்பரிடம் நிலம் இருக்கிறது. பள்ளி இருக்கிறது. 300 மாணவர்கள் படிக்கும் அப்பள்ளியை 1200 மாணவர்கள் படிக்கும் விதமாக மாற்ற வேண்டும் என்றாலே ரூ.56 கோடி தேவைப்படுகிறது. நிலம் இல்லாத ஒருவர் புதிதாக பள்ளி துவங்க விரும்பினால் மேலும் ரூ.10 கோடி தேவைப்படலாம். அதாவது 1200 மாணவர்கள் பயிலும் விதமாக ஒரு பள்ளி துவங்க குறைந்தபட்சம் ரூ.60 கோடி அளவில் முதலீடு தேவை. 

இன்றைய சூழ்நிலையில் வணிகர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் மட்டுமே இவ்வளவு முதலீடு எளிதில் இருக்கும். வணிகர்களுக்கு எதிலும் ஒரு வணிகக் கண்ணோட்டம் கணிசமான அளவில் இருக்கும். தமிழக அரசியல்வாதிகள் ஊழலையும் சுரண்டலையும் மட்டுமே பழகியவர்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மாநிலமெங்கும் இருக்கின்றன. ஆனால் அரசு ஒவ்வொரு பள்ளியையும் நடத்த செலவு செய்யும் தொகையை மொத்தமாகக் கணக்கிட்டு அதனை பள்ளி மாணவன் ஒவ்வொருவருக்கும் அளித்தால் ரூ.2,00,000 செலுத்தி மிக உயர் தனியார் பள்ளியில் தமிழகத்தின் ஒவ்வொரு மாணவனும் பயில முடியும். அவ்வளவு தொகை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பட்ஜெட். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் : நீங்கள் சாலையில் நடந்து செல்லும் தமிழகத்தின் எந்த ஒரு மாணவனையும் அழைத்து தமிழிலோ ஆங்கிலத்திலோ 300 வார்த்தைகளில் ஒரு பத்தியை எழுதச் சொன்னால் 10ல் 9 பேருக்கு எழுத வராது. அவர்கள் அதற்கு பயிற்றுவிக்கப்படவில்லை. ஒரு 17 வயது மாணவனால் 300 வார்த்தை கூட பிழையில்லாமல் எழுத வராது என்றால் பள்ளிகள் 12 ஆண்டுகள் பயிற்றுவித்தது என்ன? 

முக்கியமான சமூகப் பிரச்சனையாகும் இது. 

பள்ளி - உத்தேச மதிப்பீடு

நேற்று என்னை ஒரு நண்பர் சந்திக்க வந்தார். அவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் சென்னையில் பணிபுரிகிறார். அவரது மகளுக்கு ஐந்து வயது. முதல் வகுப்பில் படிக்கிறாள். இங்கே ஊரில் அவளது கல்விக்கு வருடத்துக்கு ரூ.70,000 செலவாகிறது என்றும் அத்தொகை சென்னையின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தம் மாணவர்களிடம் ஆண்டுக்கு நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணத்துக்கு சமமானது என்பதை சென்னையில் விசாரித்து அறிந்ததாகவும் தான் சென்னையில் செலவாகும் அளவு இங்கே ஊரில் செலவு செய்தும் இங்கே அளிக்கப்படும் கல்வியில் தனக்குத் திருப்தியில்லை எனக் கூறி தனது குடும்பத்தை கோயம்புத்தூருக்கு இடம் பெயரச் செய்து விட்டதாகக் கூறினார்.  

கல்வி நிறுவனம் நடத்தும் நண்பருக்கு ஃபோன் செய்து நண்பர் என்னிடம் தெரிவித்த விபரத்தை அவரிடம் கூறி கல்விக்கு நடுத்தர மக்கள் எவ்வளவு மக்கள் முக்கியத்துவம் அளிக்கினனர் என்பதைக் கூறி அவருடைய 300 மாணாக்கர் பள்ளியை 1500 மாணாக்கர் பயிலும் விதமாக மாற்றி அமையுங்கள் என்பதை மேலும் வலியுறுத்திச் சொன்னேன். 

பள்ளி நடத்துவதன் சிரமங்களை அவர் நீண்ட காலம் அனுபவத்திருப்பார். நான் வெளியில் இருப்பவன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மக்களை மாணவர்களை சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி நிலையத்தை நடத்துங்கள் என்பது எனது தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல ; சமூகத்தின் சார்பாக என்னால் முன்வைக்கப்படும் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைக்கும் போது சமூகத்தின் பிரதிநிதியாகவே முன்வைக்கிறேன். 

***

இவை பரிசீலனைக்கான குறிப்புகள். இவற்றை முகாந்திரமாக வைத்துக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இவை 1500 மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளியை ஏற்படுத்த விரும்பும் எவருக்கும் அப்பணி குறித்த ஒரு மனச்சட்டகத்தை அளிக்கலாம். 

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை அனைத்துமே அதிகபட்சமான அளவில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. நடைமுறையில் இன்னும் குறைவான தொகை செலவாகும் என்றால் துவங்குபவருக்கு சேமிப்பே. ( ஹாஸ்யம் : நியூட்டன் பூனை வளர்த்தார். தாய்ப்பூனையும் குட்டிப் பூனைகளும் இருந்தன. ஒரு தச்சரை அழைத்து பூனைகள் தங்கும் விதமாக ஒரு பெட்டி செய்யச் சொன்னார். பெரிய பூனை நுழையும் விதத்தில் ஒரு துளையும் குட்டிப் பூனைகள் நுழையும் விதத்தில் இன்னொரு துளையும் அதில் இருக்கட்டும் என நியூட்டன் சொன்னார். தச்சர் நியூட்டனிடம் ‘’சார் ! பெரிய பூனைக்கான துளைக்குள் குட்டிப் பூனைகள் எளிதில் நுழையும் ; அதனால் பெட்டிக்கு ஒரு துளை போதும்’’ என்றார்)

***

எந்தக் கல்வி நிறுவனத்திலும் பணி புரியும் ஆசிரியர்களுக்கு - மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு - சிறப்பான ஊதியம் தரப்பட வேண்டும். ஆசிரியன் எந்த உலகியல் நெருக்கடியும் இல்லாமல் இருந்தால் தான் கற்பித்தல் சிறப்பாக நிகழும். ஒரு ஆசிரியர் எதிரில் 50 மாணவர்கள் இருக்கும் போது கல்வி என்ன சிறப்பைக் கொடுக்கும் என்னும் ஐயத்துக்கு ஆசிரியர் பெறும் ஊதியமே கூட குறியீட்டுரீதியில் ஒரு பதிலாக இருக்க வேண்டும். எனது உத்தேச மதிப்பீட்டில் ஒவ்வொரு பள்ளி ஆசிரியருக்கும் மாதம் ரூ.50,000 என ஊதியம் நிர்ணயித்துள்ளேன். 

***

Friday, 24 April 2026

படைப்பூக்கப் பயிற்சி

எனது ஆசான்களில் ஒருவர் பரிந்துரைத்த படைப்பூக்கப் பயிற்சி ஒன்றை கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்டிருந்தேன். படைப்பூக்க மனநிலையை நேர்கொண்டு காண எனக்கு அந்தப் பயிற்சி வாய்ப்பாக அமைந்தது. நான் மிகவும் தீவிரமாக புழங்கும் வெளியிலும் நான் முழு கவனம் கொண்டிராத விஷயங்களின் முக்கியத்துவத்தைத் தீவிரத்தை உணர எனக்கு அந்தப் பயிற்சி வழிகாட்டியது. என் வாழ்வில் நான் கைக்கொண்டிருப்பது எதனை என்பதையும் எனது பணி என்ன என்பதையும் அது எனக்கு எடுத்துக் காட்டியது. இந்தப் பயிற்சி மூலம் நான் உணர்ந்திருப்பது மிகப் பல. இந்தப் பயிற்சி என்னை இட்டுச் செல்ல வாய்ப்புள்ள தளங்களும் மிகப் பல.  

மகா பிரபஞ்சம்

ஆகப் பெரியது பிரபஞ்சம்
நுண்ணிய சிற்றுயிர்களுக்கு
மகா பிரபஞ்சத்தை அறியும்
மகா பிரபஞ்சத்தை உணரும்
பிரக்ஞையை
கொடுத்திருக்கிறாய்
மாயையும் உள்ளது பேரிருப்பில்
மறைந்திருக்கிறது மாயை
மாயையின் பிடியில் செல்கின்றன
அனேக கோடி வருடங்கள்
பிரக்ஞை விழிக்கையில்
அறியப்படுகிறது மகா பிரபஞ்சம்
உணரப்படுகிறது மகா பிரபஞ்சம் 

நற்பாதை

அம்மா அம்மா அம்மா

எங்கோ பாதை தவறி விட்டேன்
எங்கெங்கோ
நெடுந்தூரம் நெடுநேரம்
சென்று விட்டேன்
சகதிகளால் ஆனது வழி தவறிய பாதை
முட்களால் ஆனது வழி தவறிய பாதை
கூரிய கற்களால் ஆனது வழி தவறிய பாதை
என்னை
நற்பாதைக்குக் கொண்டு வா அம்மா
அந்தப் பாதையில்
நிழல் மரங்கள் இருக்கட்டும்
பூ மரங்கள் இருக்கட்டும்
கனி மரங்கள் இருக்கட்டும்
அந்தப் பாதையில்
தாகம் தீர்க்கும்
நன்னீர் நிலைகள் இருக்கட்டும்
சகபயணிகளாய்
நன்மனிதர்கள் இருக்கட்டும்
என்றும்
யாருக்கும்
எப்போதும்
நற்பாதையின் பயணம்
இனியதாகவே இருக்கட்டும்

அம்மா அம்மா அம்மா 

Wednesday, 22 April 2026

நன்முடிவு

 எனது நண்பர் ஒருவர் அவரது இன்னொரு நண்பரைக் குறித்து சொன்னார். எனக்கு அவர் சொன்ன விஷயம் மிக சுவாரசியமானதாக இருந்தது. அதாவது நண்பரின் நண்பர் அலைபேசி உபயோகத்துக்குள் வரவேயில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார் என்றாலும் அவர் அலைபேசி வைத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் தொழில் வாழ்வில் சில இடர்கள் உருவாகின்றன என்றாலும் அந்த இடர்களை எதிர்கொண்டு களைகிறாரே அன்றி அலைபேசி வைத்துக் கொள்ளலாமா என எப்போதும் யோசித்ததில்லை அவர் என்றார் என் நண்பர். அந்த முடிவு ஒரு நன்முடிவு என்பது என் அபிப்ராயம். 

Tuesday, 21 April 2026

இனிய நிகழ்வு

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக பெரும் படிப்பாளிகள். நாட்டின் மிக உயர்ந்த படிப்புகளில் ஒன்றை மூன்று தலைமுறையினரும் படித்திருக்கிறார்கள். ஒருமுறை நண்பரைக் காணச் சென்ற போது அவருக்கு சட்ட மேதை ஃபாலி நாரிமன் எழுதிய ’’Before memory fades'' என்ற நூலை பரிசாக அளித்தேன். அந்த நூல் வீட்டின் நூல் நிலைய அடுக்கில் இருந்திருக்கிறது. நண்பரின் மகள் அந்த நூலை அடிக்கடி எடுத்துப் பார்த்திருக்கிறார். நேற்று நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது பல்கலைக்கழகத்தில் பயிலும் நண்பரின் மகள் நண்பருக்கு ஃபோன் செய்தார். அவர்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு குவிஸ் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதில் முதல் பரிசு பெற்றிருக்கிறார். அந்த விபரத்தைத் தெரிவித்ததுடன் இன்னொரு விபரமும் தனது தந்தையிடம் கூறினார். அதாவது, அந்த குவிஸில் ஒரு புகைப்படத்தைக் காட்டி இது யார் எனக் கேட்டிருக்கிறார்கள். நண்பரின் மகள் ‘’ஃபாலி நாரிமன்’’ என சரியாக பதில் கூறியிருக்கிறார். இதனைக் கூறி ‘’ இந்த புத்தகத்தை நம்ம வீட்டு லைப்ரரில நாம் அடிக்கடி பாத்திருக்கன். வீட்ல இருக்கும் போது அந்த புத்தகத்தையும் யுனிவர்சிட்டி வரும் போது அதோட கிண்டில் எடிஷனையும் வாசிச்சிருக்கன். இத நமக்கு கிஃப்ட் பண்ணது உங்களோட மயிலாடுதுறை ஃபிரண்ட்’’ என்று நண்பரிடம் சொன்னார். நானும் நண்பரும் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த ஃபோன் வந்தது. நண்பர் இந்த விபரத்தை என்னிடம் சொன்னார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. என் நினைவுகளில் நண்பரின் மகள் 10 வயது சிறுமியாகவே இருக்கிறார். பல்கலைக்கழக மாணவியாக எண்ண முடியவில்லை.  


பள்ளியும் சமூகமும்

பள்ளி நடத்தும் நண்பரிடம் நேற்று உரையாடிக் கொண்டிருந்த போது நண்பர் என்னிடம் ஒரு வினாவை எழுப்பினார். அதாவது, ‘’நீங்கள் முன்வைக்கும் விதத்தில் நடக்கும் பள்ளிகள் எவை?’’ என்று கேட்டார். எல்லா வினாக்களுக்கும் ஒரு விடை உண்டு என அறிந்தவன் நான். வினாக்களிலிருந்து விடைகளை நோக்கிச் செல்வதே அறிதல். உடனடியாக நான் சில பள்ளிகளின் பெயரையும் குறிப்பிட்டேன். அதில் ஓரிரண்டு பள்ளிகளை நேரடியாகச் சென்று காண்பது என்றும் முடிவு செய்தோம்.  இருப்பினும் நண்பர் கேட்ட கேள்வி என் மனதில் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. நேற்று மாலை அந்தக் கேள்விக்கான கூடுதல் பதில்கள் ஒவ்வொன்றாக எழுந்தன. 

நாம் பள்ளி எனக் கூறும் போது நம் சமூகத்தில் அது ஒரு குருநிலை என்னும் அர்த்தத்திலும் புரிந்து கொள்ளப்படுகிறது. குருநிலை என்பது நம் சமூகத்தில் 5000 ஆண்டு கால தொன்மை வாய்ந்தது. இருப்பினும் நாம் இப்போது ஐரோப்பிய பாணியிலான ‘’மெக்காலே’’ பாணி கல்வியையே பயின்று கொண்டிருக்கிறோம். மெக்காலே பாணி கல்வி என்பது மாணவனுக்கு ஆங்கில மொழியையும் கணக்கு அறிவியல் அடிப்படைகளையும் கற்பிக்கும். பள்ளிக்கல்வி நிறைவு செய்தால் ஓர் அரசு வேலை நிச்சயம். இந்த முறை பல ஆண்டுகளாக - சில நூற்றாண்டுகளாக - நடப்பில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்றிய போது ஒரு விதமாக இருந்தது - 1857 ஐ ஒட்டி ஒரு விதமாக இருந்தது - முதல் உலகப் போர் சூழலில் ஒரு விதம் - இரண்டாம் உலகப் போரை ஒட்டி ஒரு விதம் - என இருந்தது. அப்போதைய உலகச் சூழல் தேச சூழல் சார்ந்து பள்ளிக்கல்வி இருந்தது. அதன் பின் நாடு சுதந்திரம் பெற்ற பின் கல்வி சமூகம் முழுமைக்கும் சென்றடைய அரசு நடவடிக்கை எடுத்தது. பள்ளியின் இடத்தை கல்லூரி பிடித்தது. முதலில் கலைப் பாடங்கள் விரும்பி படிக்கப்பட்டன. பின்னர் வணிகப் பாடங்கள். அதன் பின் அறிவியல் பாடங்கள். இப்போது தொழில்நுட்பமும் மருத்துவமும். அதாவது எல்.கே.ஜி சேர்க்கப்படும் மாணவன் அவன் என்ன பட்டம் பெற்று என்ன உத்யோகத்துக்குச் சென்று ஊதியம் பெறப் போகிறான் என்னும் எதிர்பார்ப்பே அவனது பெற்றோருக்கு இருக்கிறது. இந்த உத்யோக அம்சம் நம் சமூகத்தில் பள்ளிக் கல்வியில் இருந்து கொண்டே இருக்கும். அதனை கருத்தில் கொள்ளாமல் வேறு ஏதும் திட்டமிட முடியாது. 

இந்த சூழ்நிலையில் ஒரு பள்ளி, தன்னிடம் பயிலும் மாணவனுக்கு அதிக லௌகிகத் திறன்கள் பயிற்றுவிக்கும் விதமாக  தனது இயங்குமுறையை அமைத்துக் கொள்ளலாம். நம் சமூகத்தில் அதுவே சாத்தியம். உதாரணத்துக்கு, ஆரம்பப் பள்ளியில் 200 மாணவர்கள் பயில்கிறார்கள் என்றால் அதில் 20 பேர் சைனிக் பள்ளியில் சேரும் விதமாக தயார் செய்யலாம். இதைப் போல ஒன்று ஒன்றாக சேர்த்துக் கொள்ள முடியும். 

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் பள்ளிக்கல்விக்கும் கல்லூரிக் கல்விக்கும் இடையே ஒரு நிலை இருக்கிறது. மாணவர்கள் தான் ஆர்வமாக இருக்கும் விஷயங்கள் குறித்து அதில் மேலும் பயில்வார்கள். நம் சமூகம் அவ்விதமான அமைப்பு குறித்து சிந்திக்க வேண்டும். 

Monday, 20 April 2026

கரைப்பார் கரைத்தால் ( ஹாஸ்யம்)

பள்ளி நடத்திக் கொண்டிருகும் நண்பரை இன்று சந்தித்தேன். சென்ற வாரம் பயணங்களில் இருந்ததால் அடிக்கடி சந்திக்க இயலவில்லை.  

சந்தித்ததுமே என்னிடம் சொன்னார். ‘’நீங்கள் சொன்ன விஷயத்தை ஃபேமிலி மெம்பர்ஸிடம் சொல்லியிருக்கிறேன். எல்லாரும் அதைப் பத்தி இப்ப யோசிச்சுக்கிட்டு இருக்காங்க’’ 

வீட்டு பிளான்

 எனது நண்பர் ஒருவர் வீடு கட்ட உள்ளார். நம் மாநிலத்தில் வீடு கட்ட உள்ள வீட்டு உரிமையாளர்கள் அடையும் அத்தனை உணர்ச்சிகரங்களுடன் மிகை மற்றும் பிழைப் புரிதல்களுடன் இருந்தார். அவரைத் தெளிவிப்பது எளிய செயலல்ல. இருப்பினும் வீடு கட்டுவதன் அடிப்படை விஷயங்களை அவருக்குக் கூறினேன். 

வீடு கட்டுவதை ஒரே செயல்பாட்டுக்குள் அடக்கலாம். வீட்டின் பிளான் எவ்விதமோ அவ்விதமே அந்த வீடு அமையும். எனவே வீட்டின் பிளானை உருவாக்கத் தேவையான காலம் எடுத்துக் கொண்டு அதனை இறுதி செய்ய வேண்டும். வீட்டு பிளானை வீட்டின் கட்டுமானம் தொடங்கிய பின் எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது. அவ்விதம் மாற்றினால் பல விஷயங்கள் நாம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் போய் விடும். 

வீட்டைப் பயன்படுத்தப் போகும் நபர்கள் எத்தனை பேர் அவர்களின் இயல்பு என்ன என்பது வீட்டு பிளானை அமைப்பதில் கணிசமான பங்களிப்பை பெற வேண்டும். 

‘’எகானமி’’ வகை பொருகள் ஒப்பீட்டளவில் பலரால் பல காலம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகையான பொருட்கள் நெடுங்காலத்தில் நுகர்வோர் தேவைக்கான சிறு சிறு மேம்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பான செயல்பாடு கொண்டிருக்கும். ‘’லக்சுரி’’ வகைகளை விட ‘’எகானமி’’ சிறப்பானவை. 

நடுத்தர வர்க்கத்தினர் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு அமைப்பை எழுப்பிக் கொள்வது நலம் பயக்கும். உயர் நடுத்தர வர்க்கத்துக்குரிய உயர் வர்க்கத்துக்குரிய வீட்டு அமைப்பை நோக்கிச் சென்றால் சில மாதங்களில் அந்த வீடுகள் புழக்கத்தில் நடுத்தர வர்க்க தன்மைக்கே வந்து சேரும்.  

Sunday, 19 April 2026

காஞ்சிபுரம்

திருவண்ணாமலை சென்றிருந்த போது ஒரு விஷயத்தை உணர்ந்தேன். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மலையும் மலை சார்ந்த இடமுமாக இருந்ததிலிருந்து இன்று பேராலய நகரமாக இருப்பது வரை. அண்ணாமலை ஆலயம் பல்வேறு காலகட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருந்திருக்கிறது. விஜயநகரப் பேரரசே இப்போது இருக்கும் ஆலயத்தின் பெரும் கோபுரங்களை எழுப்பியது.  இஸ்லாமியத் தாக்குதலுக்கு இந்த ஆலயம் உள்ளாகி இருளுக்குச் சென்றது. மராட்டியப் பேரரசு அதனை இருளிலிருந்து மீட்டது. அந்த நகரில் இருக்கும் போது அந்த நகர் பல்வேறு நூற்றாண்டுகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. 

ஸ்ரீரங்கம் செல்லலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் இப்போது என்னுடைய பரிசீலனையில் உள்ள இன்னொரு நகரம் காஞ்சிபுரம். 

எனது நண்பர் ஒருவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது நண்பர் சொன்னார். தொல்பழம் காலத்தில் காஞ்சிபுரத்தின் பாலாறு இப்போது ஓடிக் கொண்டிருக்கும் இடத்துக்கு பல கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு திசையில் இருந்திருக்கிறது. பின்னர் நதியின் பாதை சற்று நகர்ந்து நகர்ந்து இப்போதிருக்கும் இடத்தில் இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் பாலாற்றின் மணல்சாரியான நிலம். வாழ்தலுக்கு மிக உகந்த நிலம் என்று சொன்னார். 

Friday, 17 April 2026

அறைக்கலன்

சென்னை நண்பர் மூன்று குழந்தைகள்  நலனில் தொடர்ந்து அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவர்களுக்குத் தேவையான அறைக்கலன் ஏதும் வாங்கித் தருமாறு என் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியிருந்தார். ஏகப்பட்ட உலகியல் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் நண்பர் பணித்திருந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அந்த குழந்தைகளின் ஊர் இங்கிருந்து 2 மணி நேர பயண நேரத்தில் இருக்கிறது. நண்பர் சொன்ன அறைக்கலனை இங்கிருந்து வாங்கி அங்கே எடுத்துச் செல்வது என்பதில் வண்டி வாகன வாடகையே நண்பர் அனுப்பிய தொகையில் கணிசமான பங்கை எடுத்துக் கொள்ளும். இந்த சூழ்நிலையில் ஒரு அறைக்கலன் செய்யும் தச்சரை சந்தித்தேன். அவர் இரும்புக் குழாய்களைக் கொண்டும் அறைக்கலன் செய்பவர். குழந்தைகளின் ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அவர் ஊர் இருக்கிறது என்பதை அறிந்தேன். குழந்தைகளின் ஊருக்குச் சென்று அறைக்கலனை செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அவ்விதமே செய்து கொடுத்தார். வேலையை முடித்ததும் நண்பர் ஒருவரிடம் சொல்லி மின்னணு பரிமாற்றம் மூலம் அவர் அலைபேசியிலிருந்து தச்சரின் கணக்குக்கு பணம் மாற்ற சொன்னேன். அவரும் அவ்விதமே செய்தார். நண்பரிடம் ரொக்கமாக தொகையை நேரில் சந்தித்து அளித்தேன். சென்னை நண்பருக்கும் பணி நிறைவு பெற்றது என்னும் தகவல் தெரிவித்தேன். அனைவருக்கும் திருப்தி. 

Thursday, 16 April 2026

நிறையும் காட்சிகள்

 ஒரு பயணம் நிகழ்ந்து முடிந்த பின் அடுத்து வரும் சில நாட்களில் பயணித்த போது நாம் கண்ட காட்சிகள் மேலும் துல்லியமாகி நம் அகத்தில் நிறைகின்றன. பயணத்துக்கு இணையான அனுபவம் அது. 

அடுத்த பயணத்துக்குக் கிளம்ப மனம் குதூகலிக்கிறது. 

Wednesday, 15 April 2026

கல்வி குறித்த யோசனைகள் - 5

 வருடத்தின் எல்லா நாளும் இயங்கக்கூடிய விதத்தில் பொதுமக்களும் பயன்படுத்தக் கூடிய முறையில் ஒரு நூலகம் கல்வி நிலையத்தின் ஒரு பகுதியாக இயங்க வேண்டும். 

Tuesday, 14 April 2026

கல்வி குறித்த யோசனைகள் - 4

 ஒரு கல்வி நிலையம் அனைத்து விதமான கல்வியையும் ஒரே இடத்தில் அளிக்க ஏற்பாடுகளுடன் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு கல்வியைப் பயில அல்லது தான் பயில விரும்பும் கல்வி குறித்த விபரங்களை அறிய ஒரு கல்வி நிலையத்துக்கு வந்தால் அவருக்கு அக்கல்வி அங்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது அவர் விரும்பும் கல்வி குறித்த ஆலோசனை அவருக்கு வழங்கப்பட வேண்டும். 

மலையேற்றமும் மலைவலமும்

நேற்று அதிகாலை விழிப்பு வந்து எழுந்து விட்டேன். காலை 3.30க்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் இன்னும் ஒலிக்கவில்லை ; அதாவது 3.30க்கு முன்னாலேயே விழித்திருக்கிறேன் என எண்ணினேன். மின்விளக்கினை இயக்கி அதன் ஒளியில் அப்படியே படுத்திருந்தேன். சில நிமிடங்கள் அப்படியே கடந்தன. அன்றைய பைக் பயணம் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கும் வாகனத்துக்கும் ஓர் ஒத்திசைவு ஏற்பட வேண்டும். இப்போது வைத்திருக்கும் வாகனத்தில் மிக அதிக தூரங்கள் சென்றதில்லை . 40 கி.மீ, 100 கி.மீ தூரத்தில் இருக்கும் ஊர்களுக்கு பலமுறை அடிக்கடி சென்று வந்திருக்கிறேன். ஒருமுறை திருக்கோவிலூர் சென்று வந்தேன். அதுவே அந்த வாகனம் பயணிக்கும் அதிகபட்ச தூரமாக இருக்கக் கூடும். வாகனம் வாங்கி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 35,000 கி.மீ ஓடியிருக்கிறது. அதாவது ஒரு மாதத்துக்கு 1500 கி.மீ. ஒரு நாளைக்கு 50 கி.மீ. இப்போது பல காரணங்களுக்காக நான் ரயில் பயணங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். இவையெல்லாம் புறவயக் காரணிகள். நமது வாகனம் நாம் எங்காவது செல்ல வேண்டும் என மனதில் நினைத்தாலே அதற்குத் தான் தயாராகி விட்டதை மிக உற்சாகமாக நம்மிடம் தெரிவிக்க வேண்டும். இந்த 2 ஆண்டுகளில் எனக்கும் எனது வாகனத்துக்கும் பலநாட்கள் வெளியூரில் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு அமையவில்லை. பூரி ஜகந்நாத் சென்றிருந்தேன். ஆமதாவாத் சென்றிருந்தேன். அங்கெல்லாம் ரயிலில் தான் சென்றேன். இந்த எண்ணங்கள் மனதில் சலனமுற்றுக் கொண்டிருந்த போது அலாரம் ஒலித்தது. அலாரத்தை நிறுத்தி விட்டு  சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு புறப்படத் தயாரானேன். 3.30க்கு அலாரம் வைத்து எழுந்து தயாராகத் தொடங்கினால் எனக்கு எப்போதும் 60 முழு நிமிடங்கள் தேவைப்படும். இம்முறை 30 நிமிடங்களில் கிளம்பி விட்டேன். வீட்டின் வாசல் கதவுகளைத் திறந்து வைத்து வாகனத்தை எடுத்து வெளியே நிறுத்தினேன். இரண்டு நாள் பயணமாகத் திட்டமிடுவதால் பயணப்பை எதுவும் இல்லை. தலைக்கவசத்தை வாகனத்தில் முதல் நாள் இரவே வைத்திருந்தேன். முதல்நாள் வாகனத்துக்கு ரூ.500 க்கு எரிபொருள் நிரப்பியிருந்தேன். ஆகவே எனது செலவுகளுக்கு சொற்ப தொகையே தேவைப்பட்டது. அதனை வீட்டில் கேட்டு வாங்கி வைத்திருந்தேன். எனது வழக்கம் தினமும் நான் காலை வீட்டிலிருந்து புறப்படும் போது ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு மாலை வீடு திரும்பியதும் செலவு போக மீதி இருக்கும் தொகையை வீட்டிலேயே கொடுத்து விடுவது. இது சற்று பழைய கால வழக்கம். எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.   வீட்டு கடிகாரம் காலை 4.15 என நேரம் காட்டியது. நான் புறப்பட்ட நேரம் அதுவே. 

காலையில் சாலையில் வாகன இயக்கம் மிகவும் குறைவாகவே இருந்தாலும் நிதானமாகவே வாகனத்தை இயக்கினேன். பகல் நேரம் எனில் 45 நிமிடத்தில் சிதம்பரம் சென்று விடலாம். சூரியன் உதிக்காததால் 5.30 அளவிலேயே சிதம்பரம் வந்தடைந்தேன். என் கையில் ரூ.600 இருந்தது. மிகக் குறைவான தொகையை கையிருப்பாக வைத்துக் கொண்டு பயணிப்பது என்பதே எனது வழக்கம். இதை நான் எல்லாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். எனக்கு இது வழக்கமாகி விட்டது. அவ்வளவே. காலை நேரம் என்பதால் உடல் லேசாக பசியை உணர்ந்தது. ஒரு காஃபி அருந்தினேன். அது ஒரு சிறு ஸ்டால். காஃபி டிகாஷனுக்கு முக்கியத்துவம் அளித்து தயாரித்து வைக்கின்றனர். ஆகவே காலை நேரத்தில் காஃபி குடிக்க நடைப்பயிற்சி செய்பவர்கள் கணிசமாக அங்கே திரண்டிருந்தனர். 

நடைப்பயிற்சி அடிப்படையான ஒரு பயிற்சி. மிகக் குறைந்தபட்சமானது. தமிழ் மக்கள் தங்கள் ஒருநாள் பொழுதில் உடலை வளைத்துச் செய்வதற்கு எந்த உடற்பயிற்சியையும் பழகாதவர்கள். உதாரணத்துக்கு ஒருவர் 13 சூரிய நமஸ்கார் செய்து பழகியிருக்கிறார் என்றால் அந்தப் பயிற்சி அவருடைய உடலை நாள் முழுவதும் ஊக்கமாக வைத்திருக்கும். 10 தண்டால் எடுக்கிறார் என்றால் அதன் பயன் நாள் முழுதுக்கும் இருக்கும். 30 நிமிடம் வரை அளிக்கப்படும் யோகப் பயிற்சிகளும் அவ்வாறே. ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு அதன் மூலம் உடல் இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் சீரான வேகத்தில் இரண்டு மணி நேரமாவது நடக்க வேண்டும். 100 பேர் நடைப்பயிற்சி செய்தால் இந்த இரண்டு மணி நேர அளவினை ஒருவர் அல்லது இருவர் பூர்த்தி செய்தால் பெரிது. மருத்துவர்கள் இதனை அறிவார்கள். ஆனால் வலியுறுத்தி சொல்ல மாட்டார்கள். தமிழக மக்களின் வழக்கம் தங்கள் நலனுக்காக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்னும் பழக்கம் அவர்களுக்குக் கிடையாது. நடைப்பயிற்சி அடிப்படையானது எனினும் அதிலும் 2 மணி நேரம் நடக்குமாறு சொன்னால் அவர்கள் நடைப்பயிற்சியும் மேற்கொள்ளாமல் இருக்கவே வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் ஒரு குறைந்தபட்ச துவக்கமாக இருக்கட்டும் என பொதுவாக நடைப்பயிற்சி என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். தமிழகத்தில் வாழும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் எந்த உடற்பயிற்சியும் செய்யும் வழக்கம் இல்லாதவர்கள். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்யவே செய்யக் கூடாத ஒரு செயல் நடைப்பயிற்சியின் நடுவே தேனீரோ காஃபியோ அருந்தக் கூடாது. அவர்கள் உடல் நடைப்பயிற்சி மூலம் செலவு செய்த ஆற்றலைப் போல பல மடங்கு காஃபி தேனீர் மூலம் உடலுக்குக் கிடைத்து விடும். நம் சமூகம் வறுமையை வென்று விட்டது. வறுமையை வென்ற சமூகங்கள் மிகை உணவையும் மிகை தீனியையும் நோக்கியே சென்றிருக்கின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் உடல் வலிமை கொண்ட சமூகமாக நாம் உருவாக வேண்டும் என்றால் இப்போதுள்ள குழந்தைகளுக்கு தீவிரமான உடற்பயிற்சிகளையும் கால்பந்து , கைப்பந்து , கபடி , ஹாக்கி, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தி தினமும் 1 மணி நேரமாவது அவர்கள் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். அந்த காஃபி ஸ்டால் காட்சி எனக்கு இந்த எண்ணங்களை அளித்தது. 

கீழ் வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. சிவந்த கீழ் வானத்தின் பின்னணியில் வாகனத்தில் பயணிப்பது என்பது எப்போதுமே ஓர் இனிய அனுபவம். விராளூர் என்னும் ஊருக்கு அருகே சிவப்பு சூரியன் வானில் எழுந்திருந்தான். வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சிவப்பு சூரியனை இரு கரம் கூப்பி வணங்கினேன். உயிரின் நண்பனே ஆற்றலை வழங்குபவனே உன்னை வணங்குகிறேன். நீயே எங்கள் வாழ்வு. நீயே எங்கள் வாழ்வுக்குக் காரணம். இறைவா எங்களுக்கு ஆற்றலைக் கொடு. உனது அம்சத்தின் சிறு சிறு பகுதிகளை நாளும் எங்களுக்குக் கொடு. சூரிய ஒளி முன் நின்றிருப்பது என்பது சூரியக் கடவுள் நமக்கு அளிக்கும் ஆசிர்வாதம். 

வாகனம் சீரான வேகத்தை எடுக்க ஆரம்பித்தது. சிதம்பரத்திலிருந்து கம்மாபுரம் வழியாக விருத்தாசலம் சென்றடைந்தேன். அங்கிருந்து உளுந்தூர்பேட்டை சென்று எலவானசூர் கோட்டை என்னும் ஊர் வழியாக திருக்கோவிலூர் வந்தடைந்தேன். நான் சொல்லும் இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் இருக்கக் கூடும். இது குறித்து நான் முன்னரே எழுதவும் செய்திருக்கிறேன். அதாவது நானும் எனது நண்பர் ஒருவரும் சோழன் விரைவு வண்டியில் ( பகல் விரைவு வண்டி) விழுப்புரம் வரை வந்து அங்கிருந்து திருக்கோவிலூர் பேருந்தில் சென்றோம். அத்தனை சிறு சிறு கிராமங்கள். அதில் இருக்கும் விவசாயக் குடிகளான எளிய மக்கள். அங்கே ஓரிரு ரியல் எஸ்டேட் விளம்பரங்களைக் கண்டோம். மனைகள் சதுர அடி ரூ.100 என்ற விலையில் குறிப்பிடப்பட்டிருந்தன. இங்கே ரியல் எஸ்டேட் விலையேற்றத்துக்கு வாய்ப்பு இருக்குமா என்று விவாதித்தோம். நண்பர் சற்று கிண்டலாக ‘’இன்னும் 80 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகளில் நிச்சயம் மாற்றம் இருக்கும்’’ என்றார். இன்று அந்த பகுதியில் சாலைகள் மிகப் பெரிய சாலைகளாக விரிவாக்கப்பட்டு அருகில் இருக்கும் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்று அந்தப் பிராந்தியமே பெரும் மாற்றம் கண்டு விட்டது. அடையாளம் தெரியவேயில்லை. 10 ஆண்டுகளில் இத்தனை மாற்றமா என்பது வியப்பாக இருந்தது. மக்கள் திரளின் முதலீடு சாலைகள் பெரிதாகும் போது வெளியே வருகிறது. அது நிகழ்த்தும் மாற்றங்களே அத்தனையும். அந்த ஊரின் மக்கள் தொகை 50,000 என வைத்துக் கொள்வோம். அதில் 2000 பேர் ஒரு நான்கு சக்கர வாகனம் வைத்துக் கொள்ளும் வசதியுடன் இருந்திருப்பார்கள். சாலைகள் குறுகலாக சிறிதாக இருந்தால் 200 பேர் மட்டுமே நான்கு சக்கர வாகனம் வாங்குவார்கள். மற்றவர்கள் அந்த பணத்தை நகைகள் வாங்கி முதலீடு செய்திருப்பார்கள் ; அல்லது விவசாய நிலம் வாங்கியிருப்பார்கள். பெரிய சாலைகள் வரும் போது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவரின் எண்ணிக்கை 200 லிருந்து 1000 நோக்கிச் செல்கிறது. மிகச் சில வாரங்களில் 1000 என்னும் எண்ணிக்கை 2000 ஆகி விடுகிறது. ஆட்டோமொபைல் சார்ந்த துறைகளில் முதலீடு அந்த ஊரில் நிகழ்கிறது. பல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மேக்ரோ எக்கனாமிக்ஸ் இயங்கும் முறையாகும் இது. செலவு செய்வதை விட சேமிப்பையே எனது மார்க்கமாகத் தேர்ந்தெடுப்பேன் என்றாலும் பொருளியல் செயல்படும் மார்க்கத்தை நான் நன்றாகவே அறிவேன். 

உத்தேசித்திருந்த நேரத்துக்கு 2 மணி நேரம் முன்பாகவே திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனம் வந்தடைந்தேன். எளிய ஜீவன்களுக்கு அடைக்கலம் அளிக்கும் தளம் தபோவனம். ஞானானந்தரின் இருப்பை இன்றும் எவரும் உணரக் கூடிய இடம். 

***

பகவானே
நாங்கள் எளியவர்கள்
நாங்கள் ஏதும் அறியாதவர்கள்
பாச பந்தங்களையே உணர்ந்திருக்கிறோம்
பாச பந்தங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறோம்
இன்பம் என எதையோ எண்ணிக் கொண்டு
இல்லாத அதன் பின்னால் செல்வதாக உணர்கிறோம்
நாங்கள் இன்பம் என எண்ணுவது
எங்களுக்கு எப்போதும் மகிழ்வளித்ததில்லை
நாங்கள் இன்பம் என எண்ணுவது
எங்களை மேலும் துன்பத்திலேயே ஆழ்த்தியது
நாங்கள் இன்பம் என எண்ணுவது
எங்களை மேலும் துன்பத்திலேயே ஆழ்த்தப் போகிறது
இருந்தாலும் நாங்கள் இல்லாத ஒன்றின் பின் செல்லும் அறியாமையை இன்னும் இழக்கவில்லை
இறைவா
கருணைக் கடலே
உனது கருணை எங்களைத் தீண்டட்டும்
அறிவிலிகளாகிய திறனிலிகளாகிய 
நாங்கள் 
உன் கருணையால் மட்டுமே 
மீள முடியும்
உன் அன்பால் மட்டுமே
மீள முடியும்
துயருற்றிருக்கும் இந்த ஜீவன்களின் அரற்றல் உண்மையானது
இறைவா
உனது அன்பு எங்கள் மேல் எப்போதும் பொழியட்டும் 
உனது கருணை எங்கள் மேல் எப்போதும் நிலைத்திருக்கட்டும்

***

தபோவனத்தில் ஆலயப் பூசனைகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட கணங்கள் மிக தெய்வீகமானவை. குரு எளிய ஜீவன்களான சீடர்கள் மேல் எப்போதும் கருணையுடன் இருக்கிறார் என்பதற்கு அந்தப் பூசனையே சாட்சி. ஞானானந்த சுவாமி ‘’தினசரி வழிபாடு’’ என்னும் முறையை வழங்கியிருக்கிறார். 15 லிருந்து 20 நிமிடங்கள் ஒவ்வொருவரும் செய்து கொள்ளக் கூடிய வழிபாட்டு முறைகள். அதில் பரிச்சயம் உள்ள விவசாயக் குடிகள் அந்தப் பூசனையில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் சிவன் மீதும் பெருமாள் மீதும் துர்க்கை மீதும் பாடிய பாடல்கள் சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. 

இரண்டு அல்லது மூன்று நாட்கள் முழுமையாக திருக்கோவிலூர் தபோவனத்தில் மட்டுமே தங்கும் விதமாக வர வேண்டும் என எண்ணம் கொண்டேன். 

உள்ளத்தைத் தொட்ட பூசனைக்குப் பின் காலை 10 .30 அளவில் மதிய உணவு மகா பிரசாதமாக அளிக்கப்பட்டது. அருட்பிரசாதம் அருந்தினேன். தபோவனத்தின் அடுமனையாளர் மாத்வர். மாத்வர்கள் சைவ உணவு தயாரித்தலில் வல்லவர்கள். அவர்களுடைய சாம்பாரும் ரசமும் அலாதியானது. உணவில் மாத்வ சமையல் ருசி இருந்ததை உண்ணும் போது உணர்ந்தேன். 

அடியேனுக்கு தபோவனத்தை நீங்கவே மனம் இல்லை. பலமுறை சுவாமி சன்னிதியை சேவித்து விட்டு 12.30 அளவில் அங்கிருந்து திருவண்ணாமலை புறப்பட்டேன். ரமணாஸ்ரமம் திறக்க மதியம் 2 மணி ஆகும் என்பதால் ‘’யோகி ராம்சுரத்குமார்’’ ஆசிரமம் சென்றேன். அங்கே நிகழ்ந்த பூசனையில் கலந்து கொண்டு பகவான் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தேன். 

***

சுவாமி 
எளியவன் சுவாமி அடியவன்
சேர்த்துக் கொண்டவை
அத்தனையுமே பாரங்கள்
உணர்பவை
அத்தனையுமே வலிகள்
பசி கொண்டிருக்கிறேன் சுவாமி
தாகம் கொண்டிருக்கிறேன் சுவாமி
ஞான நெருப்பாக சுடர் விடுகிறீர்கள் சுவாமி
அடியேன் அஞ்ஞானக் கதலிக் கட்டை
அடியேனை உங்கள் அருள் தீண்டட்டும் சுவாமி
அடியேனை உங்கள் கருணை தீண்டட்டும் சுவாமி
உங்கள் பெயரைத்தான் பற்றிக் கொண்டிருக்கிறேன்
உங்கள் பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
உங்கள் பெயரைச் சொல்லக் கூட அடியேனுக்குத் தகுதியில்லை
உங்கள் பெயரை எவ்விதம் உச்சரிப்பதென்றும் அடியேன் அறியேன்
என் தலைவா
இனிமையாய் இருக்கிறது நின் பெயர்
நம்பிக்கை அளிக்கிறது நின் பெயர்
உங்கள் கருணை
அடியேன் மீது பொழியட்டும்
என் இறைவனே

***

சூரியப் பிரகாசம்
குழந்தையின் கண்கள்
மழலை மொழியின் இனிமை
யாவுமாய் இருக்கும் பேரிருப்பு
குருதேவா
நீங்கள் பெருநெருப்பு
அதல பாதாளங்களுக்கும் நீள்கிறது
நின் அருட்கரத்தின் ஆசி
அதல பாதாளங்களுக்கும் ஒளியூட்டுகிறது
நின் திருப்பெயர்

***

மதியம் 2 மணிக்கு ரமணாஸ்ரமம் திறந்ததும் அங்கே சென்றேன். ரமணர் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் இடம் எனக்கு மிகவும் பிரியமானது. எப்போது சென்றாலும் அங்கு சென்று அமர்ந்து கொள்ளவே விரும்புவேன். 

இறைவா இறைவா இறைவா
அன்னையின் அன்பாக எங்களுக்கு அருள்கிறாய்
அன்னையின் அன்பே நின் அருள் இறைவா
அன்னையைக் கண்டதும் அழும் குழந்தைகளைப் போல் 
உன் முன் அழுகிறோம்
அந்த அழுகை உண்மையானது இறைவா
அந்தத் துயரம் உண்மையானது இறைவா
அந்த அரற்றலின் வலி உண்மையானது இறைவா
நின் முன் அழுகிறோம்
அதுவே நின் முன் வருவதற்கான எங்கள் தகுதி இறைவனே
வான் நோக்கி ஆர்ப்பரித்து எழும் எரிமலைப் பெருநெருப்பு நீ இறைவனே
அதன் முன் கிடக்கும் சிறு மண் துகள்கள் நாங்கள் 
அடிபணிகிறோம் இறைவா
நின் முன் எப்போதும் அடிபணிந்திருக்கும் நிலையை அருள்க எங்கள் இறைவா 

***

ரமணாஸ்ரமத்திலிருந்து திருவண்ணாமலை மலை மேல் இருக்கும் ஸ்கந்தாஸ்ரமம் மற்றும் விருபாக்‌ஷா குகை ஆகியவற்றுக்கு செல்ல பாதை இருக்கிறது என்பதை ஆசிரம அறிவிப்புகள் மூலம் அறிந்தேன். அங்கே செல்ல முடிவு செய்தேன். மலை மீது ஏறிச் செல்ல வேண்டும். உடல் வியர்த்துக் கொட்டி மூச்சு திணறத் தொடங்கியது. அம்மா என்றும் அப்பா என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் அம்மையப்பா அம்மையப்பா என்று சொல்ல ஆரம்பித்தேன். நீருக்கான தாகம் மிகத் தீவிரமாக இருந்தது. அங்கே ஏறிச் செல்லும் பாதையில் சில எலுமிச்சை ஜூஸ் விற்பனையாளர்கள் இருந்தனர். எனக்கு என் உடல் நிலை குறித்து தெரியும். இவ்விதமான நேரத்தில் நீரருந்தினால் உடல் மேலே நகர ஒத்துழைக்காது. அது நீர்த்தாகத்தில் இருக்கும் போதே ஆற்றலைத் திரட்டி மேலெழ வேண்டும். அம்மையப்பா அம்மையப்பா என சொல்லிக் கொண்டிருந்தவன் ‘’அண்ணாமலைக்கு அரோகரா’’ ‘’அண்ணாமலைக்கு அரோகரா’’ எனத் திரும்பத் திரும்ப சொல்ல ஆரம்பித்தேன். அண்ணாமலை என்பது நெருப்பு மலை. அதன் மீது ஏறிச் செல்ல வாய்ப்பு அமைந்திருப்பது அண்ணாமலையின் பேரருளால்தான் என எண்ணியதின் பரவசத்தில் அவ்வப்போது அந்த மலைப்பாறைகளை உள்ளங்கைகளால் ஸ்பரிசித்துக் கொண்டு மேலே ஏறி ‘’ஸ்கந்தாஸ்ரமம்’’ சென்றடைந்தேன். பகவான் ஸ்ரீ ரமணர் பாலயோகியாக அங்கே 6 ஆண்டுகள் தவம் செய்திருக்கிறார். அந்தக் குகையில் கண் மூடி அமர்ந்திருந்தேன். 

***

குகேசன்
---------------

உலகின் கருப்பை மலை
மலையின் கருப்பை குகை
மலையின் கருப்பைக்கு ஜீவனாக சென்றாய் 
மலையின் கருப்பையிலிருந்து முக்தனாக வெளி வந்தாய்
உன் பாதம் பற்றிக் கொள்கிறோம் இறைவா
உன்னிடம் எங்கள் கண்ணீரை சமர்ப்பிக்கிறோம் இறைவா
ஏதும் அறியாத ஜீவன்கள் நாங்கள்
ஏதும் அறியாத ஜீவன்கள் நாங்கள் 

***

ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து இறங்கிச் செல்லும் இன்னொரு பாதையில் இருக்கிறது விருபாக்‌ஷா குகை. அங்கு சென்று மாலை 4.30 வரை இருந்து விட்டு நேரம் முடிந்ததும் மலையிறங்கினேன். அங்கே பாதுகாவலரிடம் குடிநீர் இருக்கிறதா எனக் கேட்ட போது மலை ஊற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்லி அதனை அளித்தார். நீரில் மிகத் தூய்மையானது மழைநீரை விடவும் இனியது மலை ஊற்றின் நீர். அமிர்தமாய் இனித்தது. மலையிறங்கும் பாதை அண்ணாமலையார் ஆலயம் அருகில் கொண்டு சேர்ந்தது. அங்கே இருந்து 2.5 கி.மீ பயணித்து மீண்டும் ரமணாஸ்ரமம் வந்தேன். அங்கே இருந்த நூல் பிரிவில் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘’நான் யார்’’ என்னும் சிறு நூல். பாக்கெட் சைஸ் நூல். அதை மட்டும் வாங்கிக் கொண்டேன். இப்போது நிறைய புத்தகங்கள் ரமணாஸ்ரமத்தின் மூலம் வெளியாகின்றன. மிக நல்ல விஷயமாகும் அது. 

மலையேற்றம் காரணமாக பசி கடுமையாக இருந்தது. ஒரு தோசை மட்டும் உண்டேன். இரவு 8 மணி ஆனது. 

எனது இரு சக்கர வாகனத்தை ஒரு வாகன பாதுகாப்பு மையத்தில் வைத்து ரசீது வாங்கிக் கொண்டு வடவீதி சுப்ரமணிய சுவாமி ஆலயம் என்னும் இடத்திலிருந்து அண்ணாமலை வலத்தைத் தொடங்கினேன். காலை ரமணாஸ்ரமம் சென்று வணங்கி விட்டு யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் சென்று வணங்கி விட்டு ஊருக்குப் புறப்பட வேண்டும் என்பதே திட்டம். 

மாலை நடந்து கடந்த 2.5 கி.மீ தூரத்தையும் மீண்டும் கடக்க வேண்டிய நிலை. மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். மலையேறி இருந்ததால் உடல் சற்று சோர்வாகவே உணர்ந்தது. 14 கி.மீ தூரத்தை 3 மணி நேரத்தில் சாமானியமாக நடந்திட முடியும். இருப்பினும் நான் ஆங்காங்கு அமர்ந்து அண்ணாமலையின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு அங்கு கிரிவ்லம் செய்யும் மக்களுடன் உரையாடிக் கொண்டு நடந்தேன். வழியில் ஒரு சிமெண்ட் பெஞ்சில் கொஞ்ச நேரம் உறங்கி விட்டேன். மெல்ல ஓய்வெடுத்து ஆங்காங்கே உறங்கி காலை 2 மணி அளவில் மலைவலம் தொடங்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தேன். 

ரமணாஸ்ரமம் சென்று காத்திருந்தேன். காலை 5.30க்கு வாயில் திறந்தது. அங்கே சென்று கண் மூடி அமர்ந்திருந்து விட்டு பின் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் சென்றேன். அங்கும் வணங்கி விட்டு ஊருக்குப் புறப்பட ஆயத்தமானேன். 

காலை 2 மணியிலிருந்து காலை 5.30 வரை காத்திருக்கும் நேரத்தில் அருகில் எங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது எனக் கேட்டறிந்து அங்கே சென்று ரூ.150க்கு பெட்ரோல் நிரப்பினேன். பெட்ரோல் நிரப்பியது போக என் கைவசம் மீதம் எவ்வளவு இருக்கிறது எனப் பார்த்தேன். ரூ. 150 இருந்தது. காலை உணவு அருந்த வேண்டும். இன்னும் 200 கி.மீ பயணிக்க வேண்டும். வழியில் வாகனம் பஞ்சர் என்றால் பஞ்சர் ஒட்ட கையிருப்புத் தொகையாக ரூ.100 குறைந்தபட்சம் இருக்க வேண்டும்.  காலை உணவை எளிமையாக முடித்து விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். திருக்கோவிலூர் தாண்டியதும் வாகனம் ஓட்டும் போதே கண்கள் சுழட்டி தூக்கம் வந்தது. ஒரு கடையின் முன்வாசல் தூய்மையாக இருந்தது. கடை பூட்டியிருந்தது. யாரும் அங்கே இல்லை. வருடப் பிறப்பின் காரணமாக கடை இன்று விடுமுறையாக இருக்கலாம். அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு படுத்துத் தூங்கி விட்டேன். தூக்கம் விழித்ததும் புத்துணர்வாக இருந்தது. வேகமாக ஊரை நோக்கி வாகனத்தை இயக்கினேன். உளுந்தூர்பேட்டை அருகில் ஒரு இடத்தில் கம்மங்கூழ் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. அதனை வாங்கி அருந்தினேன். விருத்தாசலம் கம்மாபுரம் சிதம்பரம் வழியாக ஆனைக்காரன் சத்திரம் வந்ததைந்தேன். அங்கே ஒரு ஐஸ் சர்பத் அருந்தினேன். மதியம் 1.30 அளவில் வீடு வந்து சேர்ந்தேன். ரூ.600 எடுத்துச் சென்றதில் என் கையில் ரூ.25 மீதம் இருந்தது!

மாம்பழப்பட்டு

இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் இருக்கக்கூடும். அப்போது பள்ளி மாணவனாக இருந்தேன். குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம். வீட்டுக்கு வந்து திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு சென்றார்கள். அவர்கள் சென்ற பின் திருமண அழைப்பிதழை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மணமகனின் ஊர் மாம்பழப்பட்டு என இருந்தது. இந்த ஊர் எனக்கு மிகவும் கேள்விப்பட்ட ஊராக இருந்தது. கேள்விப்பட்ட ஊர் என்பதை விட வாசிப்பின் மூலம் அறிந்த ஊர் என்று சொல்லலாம். 

அதாவது, பகவான் ஸ்ரீரமண மகரிஷி சிறுவனாயிருந்த போது அவரது ஊர் திருச்சுழியிலிருந்து திருவண்ணாமலை வருகிறார். வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பி விடுகிறார் ; பள்ளிக்கு செலுத்த தன்னிடம் அளிக்கப்பட்ட கட்டணத்தை எடுத்துக் கொண்டு செல்வதையும் அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். ரயிலில் பயணிக்கும் அவர் விழுப்புரம் ரயில் சந்திப்பை வந்தடைகிறார். அங்கிருந்து திருவண்ணாமலைக்குச் செல்ல பயணச்சீட்டு கேட்கிறார். ஆனால் அவர் கையில் இருந்த தொகையைக் கொண்டு திருவண்ணாமலைக்கு பயணச்சீட்டு அளிக்க முடியாது ; ஆதலால் விழுப்புரத்துக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கும் மாம்பழப்பட்டு என்னும் ரயில் நிலையத்துக்கு மட்டுமே பயணச்சீட்டு வழங்க முடியும் எனக் கூறி அதனை அளிக்கின்றனர். ஸ்ரீரமணர் ரயிலேறி மாம்பழப்பட்டு வந்து சேர்கிறார். அங்கே அவரைக் காணும் ஒருவர் அவரிடம் அவரைக் குறித்து விசாரித்து அறிந்து திருவண்ணாமலைக்கு பயணச்சீட்டு எடுத்துக் கொடுக்கிறார். ரமணர் அண்ணாமலையை அடைகிறார். ரமணர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் குறித்து நூல்களில் வாசித்திருந்ததால் எனக்கு மாம்பழப்பட்டு என்னும் ஊர்ப்பெயர் மிகவும் பரிச்சயமானதாக இருந்தது. 

சில வாரங்கள் கடந்தன ; நான் குடும்ப நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது நான் மாம்பழப்பட்டு ஊர் குறித்து வாசிப்பின் மூலம் அறிந்தது குறித்து கூறினேன். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. ‘’நாங்கள் 1000 கல்யாணப் பத்திரிக்கை கொடுத்திருக்கிறோம். அதில் நீயும் இன்னொருவரும் மட்டும் தான் மாம்பழப்பட்டு ஊர் குறித்து இந்த விபரங்களைக் கூறியிருப்பது. வேறு யாரும் அந்த ஊரைக் கேள்விப்பட்டிருக்கவில்லை.’’என்று கூறினர்.  

Monday, 13 April 2026

கல்வி குறித்த யோசனைகள் - 3

 பள்ளி அமைந்திருக்கும் பிராந்தியத்தின் பொருளியல் வளர்ச்சிக்கு அறிவுத்துறை சார்ந்து கல்வி பங்களிப்பாற்ற வேண்டும். விவசாயப் பயிற்சி மையம் பள்ளியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அங்கே பொதுமக்கள் விவசாயிகள் தினந்தோறும் வருகை தந்து ஏதேனும் பயிற்சி பெற வேண்டும். 

Sunday, 12 April 2026

இரு தினப் பயணம்

நீண்ட மோட்டார்சைக்கிள் பயணங்கள் மேற்கொண்ட போது ஊரிலிருந்து கிளம்புகையில் காலை 7 மணி அளவில் தான் கிளம்பியிருக்கிறேன். நீண்ட மோட்டார்சைக்கிள் பயணங்களை ஊரில் துவக்கும் போது துவக்க நாளன்று ஏதேனும் ஓர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு பயணத்தைத் துவக்குவதே எனது வழக்கம். அவ்வழக்கத்துக்கு காலை 7 மணியே உகந்தது ; அந்த நேரமே கோவில் நடை திறக்கும் நேரம். அடுத்த நாளிலிருந்து பயணம் நிறைவு பெறும் நாள் வரை காலை 6 மணி அல்லது காலை 6 மணிக்கு முன்னால் எவ்வளவு முன்னர் கிளம்ப முடியுமோ அவ்வளவு முன்னால் கிளம்புவது எனது வழக்கம். அதில் ஒரு நாள் கூட மாற்றம் இருந்ததில்லை. அது ஒரு சுய கட்டுப்பாடு ; ஒழுங்கு. அதிகாலை 5 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரிலிருந்து புறப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த காலைப் பொழுது அந்த உணர்வு நிலை அனைத்தும். 5.15, 5.30, 5.45, 5.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு விடுவேன். ஊர் விழிக்கத் துவங்க வேண்டும். எந்த ஊரிலும் கதிரவன் உதிக்கும் முன் எழுந்து நடமாடுபவர்கள் கணிசமாக இருக்கவே செய்கிறார்கள். வட இந்தியாவில் குழுவாக பெண்கள் தண்ணீர் பிடிக்க தண்ணீர் குடங்களுடன் செல்வார்கள். அவ்வாறு செல்லும் பெண்களின் காட்சி துல்லியமாக நினைவிருக்கிறது ; மகாராஷ்ட்ரா மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில நகரங்களாக இருக்கக் கூடும். ஊரின் சிற்றாலயங்களுக்கு மக்கள் அதிகாலையில் சென்று வழிபடுவதையும் கண்டிருக்கிறேன்.  

இங்கே 40 , 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்டுச் சென்றதுண்டு. அதில் பெரிய மாற்றம் உணரப்படாது. 

நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரிலிருந்து ஒரு பயணம் புறப்படுகிறேன். ரயிலில் செல்ல உத்தேசித்திருந்தேன். பின்னர் அதனை மோட்டார்சைக்கிள் பயணமாக மாற்றிக் கொண்டேன். வாகன எரிபொருள் கலனை நிரப்பி வந்தேன். இரு சக்கரங்களிலும் காற்றின் அழுத்தத்தைப் பரிசோதித்து காற்று நிரப்பினேன். வாகனத்தை ஈரத்துணியால் துடைத்து வைத்து வாகன ஆடியின் மேல் தலைக்கவசத்தை வைத்து விட வேண்டும். 

அதிகாலை 3.30க்கு அலாரம் வைத்துக் கொள்ள வேண்டும். 4.30 லிருந்து 4.45 க்குள் தயாராகி விடலாம். காலை 5 மணிக்குக் கிளம்பினால் காலை 10 மணிக்குள் 200 கி.மீ பயணிக்க வேண்டும். அதன் பின் இன்னொரு 40 கி.மீ. 

செவ்வாயன்று மாலையோ அல்லது புதன்கிழமை காலையோ ஊர் திரும்ப உத்தேசம். 

கல்வி குறித்த யோசனைகள் -2

 ’’மெக்காலே கல்வி முறை’’ என்பது பாடத்திட்டத்தில் மட்டும் இல்லை. பள்ளிகள் செயல்படும் முறையிலும் இருக்கிறது. பள்ளிகள் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை இயங்கினால் போதுமானது என்பது ‘’எழுத்தர்’’ பணிகளுக்கே உகந்தது. ஒரு மாணவனின் அக ஆற்றலை முழுமையாக வெளிக் கொணர பள்ளி உறைவிடப் பள்ளியாக இருக்க வேண்டும். 

காலை 4 மணிக்கு விழிப்பதிலிருந்து இரவு 9 மணிக்கு உறங்குவது வரை ஆசிரியர் மாணவர் ஆகியோர் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். 

Saturday, 11 April 2026

ஆசானும் மாணவனும் (நகைச்சுவைக் கட்டுரை)

 ஆசானும் மாணவனும் மேற்கொண்ட உரையாடல் கீழே :

‘’சார் ! என்கிட்ட ஸ்மார்ட்ஃபோன் இல்ல. அதோட அடுத்த கட்டமா செல்ஃபோனே வேண்டாம்ங்கற முடிவுக்குத் தான் போவேன். இருந்தாலும் சின்ன சஞ்சலம். என் முடிவு சரிதான?’’

‘’என்கிட்ட ஸ்மார்ட்ஃபோன் இருக்கு. அதுல தான் மெயில் அனுப்புவேன். மெயிலுக்கு ரிப்ளை பண்ணுவன். பாட்டு கேப்பன். என் ஆஃபிஸ் ஃபைல்ஸ்ஸை மெயிண்டய்ன் பண்ணுவன். ஆனா அதை ஃபோன் பேச பயன்படுத்த மாட்டேன். ஃபோன் வந்தாலும் எடுக்க மாட்டன். ஒரு நாளைக்கு எனக்கு 100 ஃபோன் வரும். ஆனா எதையும் அட்டண்ட் பண்ண மாட்டேன்.’’

கல்வி குறித்த யோசனைகள் - 1

 ஒரு தனியார் பள்ளி அதில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு மிகச் சிறப்பான ஊதியம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 60,000 பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமாகத் தரப்பட வேண்டும். 

Friday, 10 April 2026

கல்வி குறித்த யோசனைகள்

நண்பரின் கல்வி நிலையத்தை எவ்விதம் விரிவாக்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் வரலாற்றில் கல்வி நிலையம் என்பதைத் துறவிகளே நடத்தியிருக்கிறார்கள். அரசுகள் அவற்றுக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. ஜனநாயக அரசியலில் அரசாங்கமே கல்வி நிலையங்களை நடத்துகிறது. தனியாராலும் கல்வி நிலையங்கள் நடத்த முடிகிறது. இன்று கல்வி நிலையம் நடத்துவது என்பது பெரும் முதலீடு தேவைப்படும் செயல். எனினும் அது ஓர் இலட்சியவாத செயல்பாடும் கூட.  

சிறுவனாயிருந்த நாட்கள் முதலே மொழி மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். படைப்பூக்கம் கொண்ட மனநிலை கொண்டிருக்கிறேன். வணிகத்தில் ஈடுபடுகிறேன். இவையே இந்த யோசனைகள் உருவாகக் காரணம். 

Thursday, 9 April 2026

விசும்பின் துளி

 விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்ப அரிது என்பது திருக்குறள். ஆகாயத்தின் ஒரு துளி மண்ணில் வீழாமல் போனால் இங்கே ஒரு புல் கூட முளைக்க முடியாது என்பது அதன் பொருள். வள்ளுவர் விசும்பு என்கிறார். வானம் என மானுடர் உணர்வது அவர்கள் கட்புலனுக்குத் தென்படும் பரப்பை. விசும்பு மானுடப் பார்வைக்கும் மானுட அறிதலுக்கும் அப்பாற்பட்ட பிரம்மாண்டம் என்பதால் அதனைக் குறிப்பிடுகிறார். 

இன்று சீர்காழியில் ஒரு இடத்தை அளக்க நண்பருடன் சென்றிருந்தேன். ஏற்கனவே உருவாகி இருக்கும் குடியிருப்பு நகருக்கான விரிவாக்கமாக ஒரு பகுதியை அமைக்கிறார்கள். மொத்த பரப்பு 2 ஏக்கர் இருக்கக் கூடும். நண்பர் தன் அதி நவீன் அளக்கும் கருவியில் இடத்தின் எல்லைகளை பதித்துக் கொண்டார். ஒரு கோலை எல்லைப் பகுதியில் நடுவதே வேலை. கோல் அளவீடுகளை உருவாக்கிக் கொள்கிறது. நடுவது கூட அல்ல தொடுவதே வேலை. தொட்டால் அளவை எடுத்துக் கொள்கிறது. நண்பர் வேலையைத் தொடக்கினார். 

அப்பரப்பில் ஒரு மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

‘’எத்தனை ஆடு உங்க கிட்ட இருக்கு அம்மா?’’

’’8 ஆடு. 2 குட்டி’’

‘’பங்குனி வெயில் காய்ச்சலா காயுதே ; இதுல என்னத்த மேயும்?’’

’’மேயற வரைக்கும் மேயட்டும். வானம் கருணை வச்சா புல் முளைக்கும்’’

இந்த 10 ஆடுகள் பசியாறக் கூட வானத்தின் கருணை வேண்டும். 

வள்ளுவன் ஏன் பேராசான் என்பது எனக்கு அக்கணத்தில் புரிந்தது. 

Wednesday, 8 April 2026

எல்லைப் பயணம்

ஊரில் மதியம் 1.30 அளவில் பகல் விரைவு வண்டி இருக்கிறது. அதில் 6 மணி நேரம் பயணிக்க வேண்டும். இரவு 8 மணி அளவில் அவ்வண்டியின் கடைசி சேருமிடம் சென்றடைய முடியும். அங்கிருந்து இரவு 10 மணிக்கு ஒரு ரயிலைப் பிடிக்க வேண்டும். அந்த ரயில் 32 மணி நேரம் பயணிக்கும். இரண்டாம் நாள் காலை 7 மணி அளவில் சேருமிடம் சென்று சேரும். அங்கே 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும். மாலை 7 மணிக்கு ஒரு ரயில் புறப்படும். அந்த ரயில் 12 மணி நேரப் பயணம் செய்யும். அங்கே இருந்து ஒரு பேருந்தைப் பிடிக்க வேண்டும். அப்பேருந்து 30 மணி நேரம் பயணித்து ஒரு இடத்தில் சென்று சேரும். ஞாயிற்றுக்கிழமை ஊரில் கிளம்பினால் சனிக்கிழமை நான் செல்ல உத்தேசித்திருக்கும் இடத்தைச் சென்றடைய முடியும். அங்கே 3 நாட்களாவது இருக்க வேண்டும். அதன் பின் அதே விதமாக அங்கிருந்து புறப்பட்டு ஊர் வந்து சேர வேண்டும். இந்தப் பயணம் நிகழ்ந்தால் என் வாழ்வில் மேற்கொண்ட மிகப் பெரிய பயணங்களில் ஒன்றாக இது அமையக் கூடும்.  

Tuesday, 7 April 2026

காலை உணவு (ஹாஸ்யம்)

4 ஏக்கர் பரப்பு கொண்ட வீடுடைய நண்பர் காலை 4.30க்கு எழுவார். எழுந்ததும் அன்றைய தினத்தின் அலுவல்கள் சார்ந்து குறிப்புகள் தயார் செய்வார். காலை 6 மணிக்கு வந்து சந்திக்குமாறு கூறுவார். அதுவே இப்போது நாங்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் என்றாகி விட்டது.  காலை 8 மணி வரை சற்று சாவகாசமாக இருப்பார். அதன் பின் அலைபேசி அழைப்புகள் வரத் துவங்கும். இரவு 8 மணி வரை தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றுக்கு பதில் சொல்வதிலேயே நாளின் பெருமளவு நேரம் செலவாகும். ஒரு அழைப்பை பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மேலும் 4 அழைப்புகள் வந்து விடும். தவறிய அழைப்புகளை ஒவ்வொன்றாக மீண்டும் அழைத்து பேசி அது தொடர்பான அடுத்த அழைப்புகளைப் பேசி என நேரம் சுழன்று விடும். நண்பர் வீட்டில் எப்போதும் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர். அடுமனைப் பணிக்கு ஒரு பணியாளர் இருக்கிறார். அவர்கள் வீட்டின் வழக்கம் முதலில் நண்பர் காலை உணவருந்துவார். அவரது பொதுவான நேரம் காலை 9 மணி. அவருடனோ அவருக்குப் பின்னோ அவரது சகோதரரும் உணவருந்துவார். நான் காலை 8.30 வரை அவருடன் உரையாடி விட்டு புறப்படுவேன் ; உணவருந்தி விட்டு புறப்படுமாறு நண்பர் சொல்வார். நாங்கள் சேர்ந்து உணவருந்துவோம். காலை 6.30க்கு நான் நண்பர் வீட்டில் இருந்தாலே அவர்கள் வீட்டில் எனக்கும் சேர்த்து காலை உணவு தயாரித்து விடுவார்கள். அவர் வீடு 2000 சதுர அடி பெரியது என்பதால் ஒவ்வொரு பணிகள் ஒவ்வொரு இடத்தில் நடக்கும். ஒருநாள் எனக்கும் சேர்த்து காலை உணவு தயாராகி விட்டது. நண்பர் 8.30க்கு ஒரு அலைபேசி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்தார். அதனைப் பேசி முடித்து அதன் பின் அவர் நீராடி வர வேண்டும். எப்படியும் 9.15 ஆகி விடும். மற்ற உறுப்பினர்கள் இன்னும் தயாராகி வரவில்லை. ஆனால் டயனிங் டேபிளில் காலை உணவு தயாராகி ஹாட் பேக்கில் இருக்கிறது. பொங்கல், இட்லி, பூரி, சட்னி, சாம்பார், குருமா என அனைத்தும் உள்ளது. டயனிங் டேபிள் அருகில் யாரும் இல்லை. அடுமனையிலும் யாரும் இல்லை. நான் அடுமனையிலிருந்து உணவருந்தும் தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். டயனிங்கில் அமர்ந்து உணவு வகைகளை தட்டில் வைத்துக் கொண்டு உணவருந்தத் தொடங்கினேன். சாப்பிட்டு கை கழுவி சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்த போது நண்பரின் சகோதரர் வந்தார். அவரிடம் நடந்ததைக் கூறி விட்டு புறப்பட்டேன்.  

Monday, 6 April 2026

ஓய்வில் இருக்கும் நண்பர்

 குடவாயிலில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். இலக்கியம் இசை மற்றும் நுண்கலைகளில் தீவிரமான ஆர்வமும் ஈர்ப்பும் பயிற்சியும் மிக்கவர். கலைஞர்களுக்கே உரிய உணர்ச்சிகரமான அகம் கொண்டவர். அவரது உணர்ச்சிகர இயல்பு குறித்து நான் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அவர் இயல்பு குறித்து புறவயமாக நோக்குமாறு அவரிடம் அவ்வப்போது மெலிதாக மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தேன். புதிய வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். வீட்டின் நிறைவுப் பணிகள் அவருடைய நேரத்தையும் மனத்தின் பெரும்பாலான பகுதியையும் எடுத்துக் கொண்டிருந்தது. வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு அளித்திருந்தார். நான் அன்று ஊரில் இல்லை ஆதலால் செல்ல முடியவில்லை. கிரகப் பிரவேசம் சிறப்பாக நடந்தது என பின்னர் அறிந்தேன். விழாவுக்கு 10 நாட்களுக்குப் பின் சாலையில் இரவில் சென்று கொண்டிருந்த போது சிறு சாலை விபத்து ஒன்று நண்பருக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறு எலும்பு முறிவு. கட்டு போட்டிருக்கின்றனர். ஒரு மாத காலம் அதிகம் நடக்காமல் படுக்கையில் இருக்குமாறு மருத்துவ அறிவுரை. அதனை முறையாகப் பின்பற்றுகிறார். இன்று நண்பரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் நிறைவுப் பணிகள் பிரமாதமாக நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை போன்ற எழிலுடன் வீடு இருக்கிறது என அவரிடம் கூறினேன். நாள் முழுதும் நாதஸ்வர இசை கேட்டுக் கொண்டு இலக்கியம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இசையில் முழுமையாக மூழ்கியிருப்பதற்கான வாய்ப்பாக நிகழ் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன். என்னை இரண்டு நாட்கள் வந்து தங்கியிருங்கள் என்று சொன்னார். சென்று வர வேண்டும். 

Sunday, 5 April 2026

ஆனைமுகன் நீராட்டு

 இன்று மாயூரநாதர் ஆலயம் சென்ற போது ஆகம பாடசாலை மாணவர்கள் 25 பேர் வேத மந்திரம் முழங்கிக் கொண்டு ஆலயத்தினுள் நுழைவதைக் கண்டேன். நான்கு வயது இருக்கும் சிறு குழந்தை சங்கீத அப்பியாசத்தைத் துவங்குவதைக் கண்டேன். அக்குழந்தையின் பெற்றோரும் ஆசிரியரும் உடனிருந்து அக்குழந்தைக்கு வழிகாட்டினர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் குடும்ப நலனுக்காக ஆனைமுகனை நீராட்டி வழிபட திரவியங்களுடன் வந்திருந்தனர். மாயூரநாதர் ஆலய ஆனைமுகன் உருவத்தில் மிகப் பெரியவர். ஏழடி உயரம் இருக்கக் கூடும். முதலில் நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் பொடி, நெய், தயிர், தேன், பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு சுடராட்டு நிகழ்ந்தது. 

ஒரு குழந்தையை அன்னை நீராட்டி அலங்கரிப்பது போன்றதே தெய்வத்துக்கு மானுடர் நிகழ்த்தும் நீராட்டு. 

பெருமாள் கோவிலில் உற்சவர் ஏகாதசி கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார். 

Saturday, 4 April 2026

பள்ளியும் கல்வியும்

பன்னெடுங்காலமாக இந்தியர்கள் அவர்களுடைய விவசாய வாழ்க்கைக்குத் தேவையான விவசாயக் கல்வியறிவைக் கொண்டிருந்தனர். அடிப்படை மொழிக் கல்வியும் கணிதக் கல்வியும் இந்தியர்கள் பெற்றிருந்தனர்.  விஞ்ஞானத்தையும் தொழிற்கல்வியையும் தொழிலை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட சமூகங்கள் கற்றன. நுண்கலைகளை ஆர்வமுடையவர்கள் ஆசிரியர்களிடம் சென்று கற்றனர். 

கிராமத்தில் இருக்கும் சாமானியர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆசிரியர் இருந்து கல்வி கற்பித்திருக்க முடியும். அந்த ஆசிரியரின் உலகியல் தேவைகளை கிராமம் பூர்த்தி செய்திருக்கக்கூடும். விஞ்ஞானமும் தொழிலும் தொழில் பட்டறைகளில் போதிக்கப்பட்டிருக்கக்கூடும். 

நம் நாட்டில் பெரும் கல்வி நிலையங்கள் இருந்திருக்கின்றன ; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவை யாரால் நடத்தப் பட்டிருக்கும்? நாட்டின் துறவிகளே அவற்றில் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். துறவிகள் வாழும் இடமே பள்ளி. 

பிரிட்டிஷ் ஆட்சி தங்கள் தேவைக்காக எழுத்தர்களை உருவாக்கும் ‘’மெக்காலே கல்வி’’ முறையைக் கொண்டு வந்தது. இன்றும் அந்த வடிவமே ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது. 

நம் நாட்டில் ஏதோ ஒரு வகையில் பள்ளிகள் தொல்கல்வி முறைக்கு இடம் தர வேண்டும். இது குறித்த சிந்தனை எழ வேண்டிய நேரம் இது. 

குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை)

குட்டையைக் குழப்புதல் எனக் கூறுவார்கள். இன்று தெளிந்த நீரோடை போல இருந்த ஒருவரைக் குழப்பியிருக்கிறேன். 

ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் எனது நண்பர் ஒருவர் ஒரு பள்ளியை நடத்துகிறார். அவரை இரண்டு மாதங்கள் முன்பு தான் சந்தித்தேன். அதுவே முதல் சந்திப்பு. அதற்குப் பின் இன்று தான் சந்திக்கிறேன். இது இரண்டாம் சந்திப்பு. ஆனால் இரண்டாம் சந்திப்பிலேயே அவரை 360 பாகைகளிலும் குழப்பி விட்டேன். 

இன்று முதல் முறையாக அவர் பள்ளிக்குள் நுழைந்தேன். வெளியில் இருந்து பார்க்கும் போது சிறிய இடம் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் உள்ளே சென்று பார்த்தால் மிகப் பெரிய பரப்பு. 

பரஸ்பர ஷேமநலங்கள் விசாரித்த பின் நான் விஷயத்துக்கு வந்தேன். 

‘’சார் ! இந்த இடம் மொத்தம் எத்தனை ஏக்கர்?’’

அவர் தயக்கத்துடன் ‘’20 ஏக்கர்’’ என்றார்.

‘’சார் ! என்ன சொல்றீங்க? 20 ஏக்கரா? ஸ்டேட் போர்டா இல்ல சி பி எஸ் இ யா?’’

‘’ஸ்டேட் போர்டு’’

‘’ஏன் சார் ஸ்டேட் போர்டா மெயிண்டய்ன் பண்றீங்க? சி பி எஸ் இ பர்மிஷன் வாங்கிடுவோம். அதுக்கான எல்லா இன்ஃப்ரா ஸ்ட்ரக்சரும் இருக்கே. பர்மிஷன் ஏதும் அப்ளை பண்ணியிருக்கீங்களா?’’

அவர் பதட்டத்துடன் ‘’இல்லை’’ என்றார். 

‘’எத்தனை ஸ்டூடண்ட்ஸ் படிக்கறாங்க?’’ அடுத்த கேள்வியைக் கேட்டேன். 

‘’200 பேர்’’ 

‘’என்ன தலைவரே சொல்றீங்க. 22 ஏக்கர் இடத்துல 200 பேரை மட்டும் தான் படிக்க வைக்கிறீங்களா? இந்த ஏரியாவுக்கு மினிமம் 2500 ல இருந்து 3000 ஸ்டூடண்ட்ஸ் படிக்க்ணும்’’

நான் கூறுவதில் இருந்த சாத்தியம் அவருக்கும் மனதில் பட்டது. இருப்பினும் அவரது அச்சம் நீங்கவில்லை. 

‘’சார் ! எல்லா வேலையும் நீங்களே செய்ய முடியாது. ஒரு டீமை ஃபார்ம் பண்ணுங்க. 10 பேர் கொண்ட டீம். உங்க மனநிலைக்கு ஒத்து வரவங்க. உங்க மனநிலைக்கு நேர் எதிர் மைண்ட் செட் கொண்டவங்க. மையமா இருக்கவங்க. எல்லாரையும் அந்த டீம்ல கொண்டு வாங்க. எல்லார்ட்டயும் இன்புட்ஸ் கேளுங்க. நீங்க முடிவெடுங்க. அந்த 10 பேருக்கும் நீங்க பேமெண்ட் குடுங்க. அப்ப தான் உங்களுக்கு எல்லா ஆஸ்பெக்ட்டும் பிடிபடும்’’

மையமாக ‘’நீங்க சொல்றது சரிதான்’’ என்றார். 

‘’வேலூர்ல வி ஐ டி பாத்திருக்கீங்களா? மொத்த காம்பஸும் வெர்டிகல் பில்டிங்ஸ் தான். நாம 3000 ஸ்டூடண்ட்ஸ் அக்காமடேட் பண்றா மாதிரி வெர்டிகல்ஸ் போவோம். வேற வழி இல்ல.’’

நண்பர் கற்பனையில் பல மாடிக் கட்டிடம் அப்போதே எழுந்தது. 

‘’உங்களுக்கு சி பி எஸ் இ, ஐ சி எஸ் இ, என் ஐ ஒ எஸ் லைசன்ஸ் வேணுமா? கைட் செய்ய ஆட்கள் இருக்காங்க. ஸ்கூலை விரிவுபடுத்திக் கட்ட பேங்க் லோன் வேணுமா? அரேஞ்ச் செய்ய முடியும்? எஃபிஷியண்ட் ஸ்டாஃபை எம்ப்ளாய் செய்யணுமா? அதுவும் செய்ய முடியும். உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணுண்ணாலும் கேளுங்க. செஞ்சுடலாம்’’

‘’எஜுகேஷன் இப்ப ரொம்ப கமர்ஷியலா இருக்கு. ஆனா நாங்க ஒரு எதிக்ஸ்ஸோட நடத்தறோம்’’ அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர் அப்போது தான் தன் மனதில் இருப்பதை சொற்களாக்கி என் முன் வைத்தார். 

அதனை கீழ்க்கண்டவாறு கூறி நான் முறியடித்தேன்.’’ சார் ! நீங்க வேல்யூஸ்ஸோட செயல்படணும்னு நினைச்சா அந்த வேல்யூவை 3000 பேருக்குக் கொண்டு போற வாய்ப்பு இருக்கும் போது 200 பேர்ட்ட கொண்டு போறது ரொம்ப தப்பு’’

நண்பருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. 

‘’இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னா எஜுகேஷன் சம்பந்தமான என் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வரேன். நம்ம அடுத்த மீட்டிங் அடுத்த டெவலப்மெண்ட் என்ன என்பது பத்திதான்’’ 

திட்டமிடல்கள் -2 (ஹாஸ்யம்)

காந்திய வழிமுறைகளில் முதன்மையானது ஒரு விஷயத்தை ‘’ஆறப் போடுங்கள்’’ என்பது. ஒரு விஷயம் தீவிரமாக இருக்கும் போது அதன் எல்லா முனைகளும் கொதிநிலையில் இருக்கும். அது அந்த விஷயத்தை செயலாக்குவதற்கு தடையாக உருவாகக் கூடும். ஊர் மாற்றம் குறித்து அமைப்பாளர் மிக அளந்தே தன் அடிகளை முன்னெடுக்கிறார். 

முதல் படியாக ஸ்ரீரங்கத்தில் ஒரு வாடகை வீட்டை பார்க்க இருக்கிறார். மிகக் குறைவான வாடகை மற்றும் மிகக் குறைவான அட்வான்ஸ் கொண்ட ஓட்டு வீடு. அங்கே எந்த பண்டங்களும் கொண்டு செல்லப் போவதில்லை. நான்கு செட் ஆடைகள் மட்டும் வைத்திருப்பது. 

ஒரு வாரத்தில் 3 நாட்கள் ஊரில் இருந்தால் 3 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் இருப்பது. இவ்விதமே 6 மாதத்திலிருந்து 1 வருடம் தொடர்வது. 

தேவையெனில் காலை முதல் பாசஞ்சர் வண்டியைப் பிடித்து திருச்சிராப்பள்ளியிலிருந்து ஊருக்கு வந்து விட்டு லௌகிகப் பணிகளை முடித்து விட்டு மாலை ரயிலில் திருச்சிராப்பள்ளி சென்று விடுவது. ரயிலில் ஒரு சீசன் டிக்கெட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். 

ஓராண்டில் இங்கும் அங்கும் என இருந்து விட்டு அதன் பின் அடுத்த கட்டம் நோக்கிச் செல்லலாம்.  

Friday, 3 April 2026

ஊர் மாற்றம்

நமது மனம் பழக்கத்துக்கு உட்பட்டது. அதனை பழக்கப்படுத்த முடியும் ; ஒரு பிராணியைப் பழக்குவதைப் போல. பழகிய விஷயத்துக்கு மீண்டும் மீண்டும் உட்பட்டவாறே இருப்பது மனதின் இயல்பு. மனதுக்குப் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தினால் அதனை உடனே ஏற்காது. அதற்கு சில தடைகளை அளிக்கும். அதைத் தாண்டியும் நாம் உறுதியாக இருந்தால் புதியவற்றை மனம் ஏற்கத் துவங்கி விடும்.  

நாம் முதல் நாள் இரவு ஒரு புதிய ஊருக்குச் சென்றிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். தூங்கி காலை விழிக்கிறோம். ஒரு நடை செல்கிறோம் எனில் நம் மனம் அங்கே இருக்கும் சிறு சிறு விஷயங்களையும் கவனிக்கும். பூத்து நிற்கும் மரம், சிறு செடிகள், மண்டிக் கிடக்கும் புல், வீதியில் திரியும் நாய்கள், அப்பகுதியின் கட்டிடங்கள், அதன் மதில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் என அனைத்தையும் நம் மனம் நுட்பமாக கவனிக்கும். பார்க்கும் காட்சிகளில் மனம் லயிக்கும். நாம் வருஷக்கணக்காக வாழ்ந்த ஊரில் ஒரு புது ஊரில் ஏற்படும் லயிப்பு ஏற்படாது. 

மனம் இயங்கும் விதத்தை ஒரு அளவீட்டுக்குள் கொண்டு வருவோமானால் அதற்கு 1 -10 வரை என அளவீடு அளித்தால் பல வருஷம் பழகிய ஊரில் அதன் உற்சாகம் 3 என இருக்கும் ; புதிய ஊரில் அதன் உற்சாகம் 7 என இருக்கலாம். வழமையை விட உற்சாகத்தை விரும்புபவர்கள் புதிய ஊருக்குச் செல்லலாம் என நினைப்பார்கள். பத்தாயிரத்தில் ஒருவருக்கே அவ்விதம் தோன்றும். ஏனென்றால் மனிதர்கள் பொதுவாக வழமையில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். புதிய ஒன்றை நோக்கிச் செல்ல தயங்குபவர்கள். 

நீங்கள் பல வருஷம் ஒரு ஊரில் வசித்திருக்கிறீர்கள். பின் 3 ஆண்டுகள் வேறு ஒரு ஊரில் இருந்து விட்டு அதன் பின் மீண்டும் பழைய ஊருக்கு வருகிறீர்கள் என்றால் அப்போது பழைய ஊரிலும் புதிதாக உணர வாய்ப்பு உண்டு.  

Thursday, 2 April 2026

திட்டமிடல்கள் (ஹாஸ்யம்)

உத்தரவு கிடைத்து விட்டதால் அமைப்பாளர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். 

தனது யூகச் செல்வங்கள் அனைத்தையும் இருப்புச் செல்வங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் அமைப்பாளரின் பட்டயக் கணக்காளர் ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டும் வைத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அதாவது ஒரு சேமிப்புக் கணக்கு. ஒரு நடப்புக் கணக்கு. அப்படியே செயலாக்கினார் அமைப்பாளர். ஒரு அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு இருக்கிறது. இப்போது அமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்றால் இனிமேல் வங்கிக் கணக்கே தேவையில்லை என்று. வங்கியில் மேற்கொள்ளும் எல்லா பரிவர்த்தனையும் அஞ்சல் அலுவலகத்தில் செய்து கொள்ள முடியும் என்பதால் இனி வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என எண்ணுகிறார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர்கள் குறுநில மன்னர்கள் போன்ற மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் ; அவர்களுக்குத் தாங்கள் சேவை அளிக்கும் இடத்தில் இருக்கும் பணியாளர்கள் என்னும் நினைவு இல்லை. ஏன் வங்கிக் கணக்கை முடித்துக் கொள்கிறேன் என்பதை ஒரு கடிதமாக எழுதி கிளைக்கும் மேல் அலுவலகத்துக்கும் அனுப்பி விட்டு முடித்துக் கொள்ள வேண்டும். 

பொதுமக்கள் தங்கள் சேமிப்பை வங்கிக் கணக்கில் இடுவதை விட அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இடுவதே பாதுகாப்பானது. வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் ஆக பணம் பெற்று அந்தப் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கடனாக அளிக்கின்றன. ஆனால் அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்களிடம் பெறும் டெபாசிட் மத்திய அரசாங்கத்துக்கு கடனாக அளிக்கப்படுகிறது. வங்கிகள் திவால் ஆக வாய்ப்பு உண்டு. போஸ்ட் ஆஃபிஸ் திவால் ஆகாது. 

இன்று அமைப்பாளர் போஸ்ட் ஆஃபிஸில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்று பார்த்தார். 

பி ஓ எம் ஐ எஸ் என ஒரு திட்டம். அதிகபட்சம் ரூ.9,00,000 டெபாசிட் செய்யலாம். மாதம் ரூ.5500 கிடைக்கும். 

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என ஒரு திட்டம் உள்ளது. அதில் ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000 டெபாசிட் செய்யலாம்.

நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் என ஒரு திட்டம் உள்ளது. அதிகபட்சம் 5 ஆண்டுகாலம் டெபாசிட் செய்யலாம். உச்சபட்ச தொகை என ஏதும் கிடையாது. 

கையிருப்பு இருக்கும் பணத்தில் ரூ.10.5 இலட்சத்தை பி ஓ எம் ஐ எஸ் மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டிலும் மீதித் தொகையில் பாதியை நேஷனல் சேவிங்க்ஸ் டைம் டெபாசிட்டிலும் செய்து விட்டு இன்னொரு பாதிக்கு நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட் வாங்கி வைத்துக் கொள்வது என முடிவு செய்திருக்கிறார் அமைப்பாளர். 

Wednesday, 1 April 2026

உத்தரவு கிடைத்தது

 இன்று காலையிலேயே எழுந்து விட்டேன். அதிகாலை நேரத்தில் ஒரு நல்ல கனவொன்று கண்ட பின் எழுந்திருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்தேன். கலனில் நீர் நிரப்பி குடிநீர்த்தேவைக்கான ஏற்பாடுகளை செய்தேன். பின்னர் எனது உணவை சமைத்து விடுவோம் என முடிவு செய்து கேழ்வரகுக் களி கிண்டினேன். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களில் எனது உணவு தயாராகி விடும். ஒரு சிறு தட்டில் அதனை வைத்து அதன் மீது இன்னொரு சிறு தட்டை மூடி டயனிங் டேபிள் மீது கொண்டு சென்று வைத்தேன். இன்று காலை நேரத்திலேயே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என எண்ணியிருந்ததால் சிறு தூரம் மட்டுமே நடைப்பயிற்சி சென்று வந்தேன். அதன் பின் வீட்டுக்கு வந்து காலையிலேயே சில பதிவுகள் எழுதி தளத்தில் பதிவிட்டேன். நேரம் காலை 8 மணியாக இருந்தது. குளித்து விட்டு ஆலயத்துக்குச் சென்றேன். 

ஆலயம் சென்ற போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஊரின் மிகப் பெரிய கட்டுமானம் ஆலயம். இன்றும் கூட. இத்தனை பெரிய நிலமும் இத்தனை பெரிய கட்டுமானமும் இன்றும் ஊரில் ஒரே இடத்தில் இணைந்து இல்லை. ஒவ்வொரு ஆலயத்திலும் வேதம் படிக்கும் 100 மாணவர்களுக்கு மாதம் கணிசமான தொகை உதவித் தொகையாக அளித்து ஆலயத்தில் எப்போதும் வேத முழக்கம் கேட்கும் வகையில் ஏன் ஏற்பாடு செய்யப்படக் கூடாது? அதைப் போலவே திருமுறைகள், தமிழிசை, பரதம் முதலிய நுண் கலைகள் ஆகியவற்றுக்கு ஏன் ஆலயம் இடம் தரக் கூடாது? ஆலயத்துக்கு எவ்வளவோ வருமானம் இருக்கிறது. வேதக் கல்வியும் திருமுறைக் கல்வியும் நுண்கலைக் கல்வியும் ஆலயத்தின் வருமானத்தை பலவகைகளிலும் அதிகரிக்கவே செய்யும். ஆலய நிர்வாகம் என்பது அப்பிரதேசத்தின் பண்பாட்டுச் செயல்பாடாக இருக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஆலயம் பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையமாகவும் இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். 

உள எழுச்சியும் உள நெகிழ்ச்சியும் கொண்டிருந்த நிலையில் இன்று ஆலயம் சென்றிருந்தேன். நேற்று எழுதிய ‘’உத்தரவு’’ என்னும் பதிவு உருவாக்கியிருந்த மனநிலை. ஊரில் ஆலயத்தில் மஹாகணபதி சன்னிதி ஒன்று உள்ளது. தமிழ் மக்களுக்கு ஆனைமுகனைப் போல் இன்னொரு ஆப்த தெய்வம் இல்லை. ஆற்றல் கொண்டிருப்பவனும் குழந்தையாயிருப்பவனும். அவன் முன் சென்று நின்றேன். அவனிடம் என் துயரங்களைத் தெரிவிக்க நினைத்தேன். கடவுள் மிகப் பெரியவன். அவனிடம் என் லௌகிகத் துயரங்களைக் கூற வேண்டுமா என ஓர் எண்ணம். என் துயரங்களைச் சொல்ல என் வலிகளைச் சொல்ல என் வேதனைகளைச் சொல்ல அவனன்றி வேறு துணை இல்லை. சொல்வதை முழுதாகக் கேட்டுக் கொள்ளக் கூட அவனன்றி வேறு உறவு இல்லை. எதுவும் சொல்லாமல் தான் அவன் முன் நின்றிருந்தேன். அபயாம்பிகையை தரிசனம் செய்தேன். நான் சென்ற போது மயூரநாதருக்கு சுடராட்டு நிகழ்ந்தது. ‘’திருச்சிற்றம்பலம்’’ ‘’திருச்சிற்றம்பலம்’’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் இருப்பது மாயூரத்தில் ; திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பரம். மாயூரத்தில் ஏன் சிதம்பரத்தைச் சொல்கிறோம் என நினைத்தேன். தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். திருமுறைகள் ஓதத் துவங்கும் போதும் நிறைவு செய்யும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். சிவ பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். எனவே எந்த ஊரிலும் திருச்சிற்றம்பலம் சொல்லலாம் என எண்ணினேன். ஆடலரசன் நடராஜன் ஆடுவது காஸ்மிக் நடனம். எனவே நடராஜன் சபையில் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அடக்கம். எனவே திருச்சிற்றம்பலம் என்பது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் குறிக்கும் மந்திரம் என எண்ணினேன். 

கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு பெண் கூடையில் வில்வ இலைகளையும் நாலலிங்கப் பூவையும் வைத்திருப்பதைக் கண்டேன். கர்நாடகாவில் சிவாலயங்கள் அனைத்திலும் வில்வ இலைகளும் வில்வ இலை மாலைகளும் பெருமளவில் விற்பனை ஆகும். 

மாயூரநாதர் கோவிலிலிருந்து திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்றேன். பெருமாள் கோயிலுக்கு மாலை செல்லலாமா என ஒரு கணம் எண்ணினேன். பெருமாள் தரிசனத்தை மாலை வரை தள்ளி வைக்க வேண்டாம் என முடிவெடுத்துப் புறப்பட்டேன். 

திருஇந்தளூர் கீழவீதி அருகே வந்த போது பரிமள ரங்கன் பக்தர்கள் வடம் இழுக்க தேர் பவனி வருவதைக் கண்டேன். இறைவன் எனக்கான உத்தரவை அளித்து விட்டான் என்பதை உணர்ந்த போது உளம் நெகிழ்ந்தது. பரமாத்மா ஜீவன்களுடன் ஆடுவது ஆடல் ; விளையாடல். தேரில் இறைவனைக் கண்ட கணம் அவனை என் குழந்தையாக எண்ணினேன். என் கடவுள் எனக்கு அனுமதி அளித்து விட்டான். புதிய நிலம் காண புதிய காட்சிகளைக் காண புறப்பட்டுச் செல் என்பதே அவன் எனக்கு அளித்திருக்கும் உத்தரவு. மூலவர் யோக நித்திரையில் சயனித்திருக்கிறார். உற்சவர் ஊர் உலகம் கண்டு வருகிறார். எனக்கு இன்று காட்சி கொடுத்தது உற்சவர். 

இறைவா ! உன் லோகங்களில் கோடானுகோடி ஜீவன்கள். அந்தக் கோடானுகோடி ஜீவன்களில் ஓர் எளிய ஜீவன் அடியேன். உன் திருவுளம் அடியேனையும் கருதுகிறதா ? உன் கருணை பெரியது இறைவனே. உன் கருணையால் தான் ஜீவன்கள் ஜீவித்திருக்கிறோம். அதனை நாங்கள் எப்போதும் உணர்ந்திருப்பதில்லை இறைவனே ! எப்போதாவது உணர்கிறோம். இறைவா உன் கருணை எங்கள் மீது எப்போதும் இருக்கட்டும். 

இறைவன் ஒரு குழந்தை

 புன்சிரிப்பு சிரித்து
அவ்வப்போது கை நீட்டி
அவ்வப்போது மறைந்து ஒளிந்து
பிரியச் சொல் உதிர்த்து
பேர் சொல்லி அழைத்து
கொஞ்சப்படுகையில் மகிழும்
சிறு மகவே
இறைவன்
சிறு மகவும்
இறைவன்

புதிய நிதி ஆண்டு

புதிய நிதி ஆண்டு பிறக்கிறது. வணிகர்களுக்கு நிதி ஆண்டு முக்கியமானது. நிதி ஆண்டு நிதி குறித்ததாகவே இருப்பதால் தொழில் தொடர்பான விஷயங்கள் முடிவுகள் முக்கியமானதாக ஆகிறது. 2025-2026 நிதி ஆண்டின் சிறப்பு அம்சம் என்பது எனது தொழிலில் ரியல் எஸ்டேட்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்தது. கட்டுமானம் மனை வணிகம் இரண்டுமே இணையாக செய்யும் வகையில் இருந்திருந்தாலும் தற்போது ரியல் எஸ்டேட்க்கு அளிக்கும் நேரம் அதிகமாகி உள்ளது. கட்டுமானத்தில் தினந்தோறும் நாம் செய்யும் பணி நம் கண் முன்னால் வளர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும். ஒரு வீடு கட்டுமானம் நடக்கிறது எனில் முதலில் இரண்டரை அடி உயரத்துக்கு சுவர் எழும்பும். அடுத்த நாள் மேலும் இரண்டரை அடி. மூன்றாம் நாள் இன்னும் இரண்டு அடி. அதன் பின் ‘’பீம்’’ அமைக்கும் பணி. பணி முன்னேற்றத்தைக் கண்ணால் காண முடியும். ரியல் எஸ்டேட்டில் நாம் செய்யும் பணி முன்னேற்றம் அடைகிறதா என்பதைக் கண்ணால் கண்டு அறிய முடியாது. சென்ற நிதி ஆண்டில் இரு ரியல் எஸ்டேட் பணிகளுக்கு தீவிரமான உழைப்பைச் செலுத்தியிருந்தேன். அதற்கான பலன் இந்த நிதி ஆண்டின் துவக்கத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வானத்தை நோக்கித் தொழுது புதிய நிதி ஆண்டில் நுழைகிறார்கள் நாட்டின் வணிகர்கள்.   

அதிகாலைக் கனவு

 இன்று அதிகாலை ஒரு கனவு கண்டேன். எவ்விதம் அது அதிகாலைக் கனவு என்று கூறுகிறேன் என்றால் கனவு கண்டவுடன் விழித்து விட்டேன். அப்போது நேரம் 4.45. கனவு என்னவெனில், சென்னை ஐ ஐ டி அல்லது சென்னை எஸ்.ஈ.ஆர்.சி போன்ற ஓர் உயர்கல்வி நிறுவனம். அங்கே எம்.ஈ அல்லது எம்.டெக் போன்ற மேல்படிப்புக்குத் தேர்வான மாணவர்கள் அங்கே இருக்கும் ஓர் ஆய்வகத்துக்குச் செல்கிறோம். நாங்கள் 25 பேர் இருப்போம். எங்கள் வகுப்புகளின் முதல் நாள் அன்று. அலுவலகத்தில் சேர்க்கை தொடர்பான பணிகளை முடித்து விட்டு அவர்கள் அளித்த குறிப்புகளின் படி ஆய்வகத்துக்கு வருகிறோம். அங்கே இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிறைய பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அலுவலகத்தில் எங்களை யாரைச் சென்று பார்க்கச் சொன்னார்களோ அவரைச் சென்று பார்க்கிறோம். அப்போது அங்கிருக்கும் ஆய்வகம் எங்களுக்கு ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. அதன் செயல்பாடுகளை கவனிக்கிறோம். அந்தப் பேராசிரியர் எங்களில் ஒருவரின் ஃபுல் சைஸ் நோட்டை வாங்கி அதில் ஒரு கணக்கை எழுதுகிறார். அது கணிதத்தில் ’’மேட்ரிக்ஸ்’’ என்னும் பாடத்தில் கேட்கப்படும் வினா. நாங்கள் அந்த வினா என்ன என்று பார்க்கிறோம். அந்த நோட்டை வாங்கி அக்கணக்குக்கான தீர்வை ஏழெட்டு படிகளில் கொண்டு வந்து நான் எழுதுகிறேன். அதனை அவரிடம் காட்டுகிறோம். ‘’சரியான விடை’’ என்று கூறுகிறார்.