Thursday, 31 May 2018

ஈர நெஞ்சம்

விகிதாச்சாரத்தில்
இருள் கூடியும்
ஒளி குறைந்தும்
இருந்த
கோடைக் கால இரவில்
சன்னிதித் தெருவில்
நடந்து வந்து கொண்டிருந்தது
தென்றல்
எதிர்ப்பட்ட என்னை
கடந்து போயிற்று
அவசரமாய்
சந்திப்பின்
காணல்
மிக மெல்லிய ஈரமாய்
ஒட்டிக் கொண்டது உடலில்
கூடத்தில் சுவிட்ச் போட்டு
ஊருக்குப் போன குழந்தை
வீட்டுக்கு வரும் நாளை
காலண்டரில் பார்த்த போது
ஃபேன் காற்றில் படபடத்தன
காலண்டர் தாள்கள்

அடுத்த ஒன்று



அடுத்த ஒன்று
உடனடியாக
ஓர் ஆசுவாசம்
அளிக்கிறது

நம்பிக்கையின்
ஆயத்த ஆடைகளை
அணிந்து கொள்வதற்கான
அவகாசம் இருக்கிறது

நம் முன்
விரிகிறது
ஒரு பெருவெளி
ஒரு வானம்
ஒரு உலகம்

ஒரு தளிர் துளிர்த்திருக்கிறது
ஒரு குழந்தை ரயிலைப் பார்த்து கையசைக்கிறது
எப்போதாவது நாணும் இளம்பெண்
இப்போது
முகம் சிவக்கிறாள்

நிகழின்
ஊசி முனையில்
பரந்திருக்கும் ஒரு மைதானத்தில்
உருண்டு கொண்டேயிருக்கிறது
ஒரு கால்பந்து
வியர்த்துப் பின் தொடரும்
ஆட்டக்காரர்களுடன்

ஏதோ ஒன்று



ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று

இன்னும் நம்பிக்கையை தக்க வைக்கும்
விடுபட்டு நிற்கும் சாலை ஒன்றின் தொலைவு காட்டும்
மண்ணில் கால் இருக்க
விழிகளை விண்ணில் நிறுத்தும்
சின்னப் பறவைகளுடன் சிறகடிக்கும்
நதியில் நுழையும் போது
நீர் தீண்டி
மெல்ல பாதத்தில் கூழ் ஆம் கல்லாய் ஒட்டிக் கொள்ளும்

ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று 

Wednesday, 30 May 2018

கலங்கரை விளக்கமாய்
ஒளி வீசும்
உனது நெற்றி
அறிந்த தொலைவு
ஆசுவாசம் அளிக்கிறது
அலைகள் எழ விழ
ஒவ்வொரு முறை
புன்னகைக்கும் போதும்
உன் முகத்தில்
பூக்கிறது
ஒவ் ஒரு மலர்
வெள்ளம் பார்த்தேன்
பாலத்தின் மேலிருந்து
சென்று கொண்டிருந்தது
நுரை
தழை
இலை
கிளை
சுழல்
வெள்ளம் பார்த்தேன்
சென்று கொண்டிருந்தது
நுரை
தழை
இலை
கிளை
சுழல்
எனது நிழல்

Monday, 28 May 2018






திருப்பள்ளியெழுச்சியின் அணுகலுடன்
மௌனித்திருக்கிறது
அதிகாலை
மர்மங்கள் விலகப் போகும்
சுவாரசியத்துடன்
இதுவும் அதுவும் என
துலங்குகிறது
ஒவ் ஒன்றும்
சைக்கிள் பேப்பர் கட்டின் மேல்
பால்பாக்கெட்டை
வைத்து விட்டு
மறந்த
பால்கார்டை
ரிநியூ
செய்து திரும்பும்
நடுவயதுப் பெண்ணின்
பொட்டு
ஜொலிக்கிறது
வானில்
நெற்றியில்

28.05.2018
23.38

ஒரு துளி மேகம்

குடியிருப்புப் பகுதியின் மைதானத்தில்
பௌலர் வீசிய பந்து
பேட்ஸ்மேனின் விசையுடன்
மேலே
மேலே சென்றது
அரசமரத்துக்கும் மேலே
சூரியனுக்குக் கீழே
அந்தரத்தில் அரைக்கணம் தயங்கி
புவிக்கு வந்தது
ஆட்ட நடுவர் இருகரம் மேலே உயர்த்தினார்
தன்னிடம் வந்த பந்தை
பௌலர் கைகளில் உருட்டிய போது
ஒட்டிக் கொண்டிருந்தது
ஒரு துளி மேகம்

Sunday, 27 May 2018

மதில் மேல் பூனை

மதில் மேல் பூனை
அமர்ந்திருந்தது
காலைப் பொழுதில்
நடை செல்பவர்களை
சுவாரசியமில்லாமல் பார்த்து
காகக் கரைதல்களைக் கேட்டபடி
தூக்க கலக்க முகத்துடன்
அவ்வப்போது கண் திறந்து
அவ்வப்போது கண் மூடி

இப்பக்கம் செல்லுமா
அப்பக்கம் செல்லுமா
என யோசித்து
நடந்து வந்தேன்

கணிப்புகளை பொய்யாக்கி
எப்பக்கமும்
போகாமல்
மதில் மேல் நடந்தது
மதில் மேல் பூனை

முகங்களின் நதி

கரையில்
சூரியன் அஸ்தமிக்கும்
இந்த அந்திப் பொழுதில்
முகங்களின் நதி
சங்கமிக்கிறது
நீரின் கடலில்

Friday, 25 May 2018

ஏன்? எதற்கு? எப்படி?

பார்க்கப் பார்க்க
அலுத்துத் தீராத இந்தக் கடல்
இந்தக் கோடையில்
ஏன் இத்தனை குளிர்ச்சியாய் இருக்கிறது?
இத்தனை குளிர்ச்சியாய்

கைமகவென
விரலில் உள்ள கூழாங்கல்
எதற்கு இவ்வளவு பிரயத்தனப்படுகிறது?
சமன் நிலை கூட

எப்படி
இந்த எளிய மலர்
வானத்துச் சூரியனை
அவ்வளவு காதலுடன் பார்க்கிறது?
எப்படி