Friday 2 August 2019

திருவருண்மொழி

எனது கல்லூரி நாட்களில் நான் ‘’பின்தொடரும் நிழலின் குரல்’’ வாசித்தேன். அது என்னை உடைத்தது. எனது நம்பிக்கைகளை. நான் இருப்பதாய் நம்பியிருந்த உலகங்களை. வரலாற்றின் நாயகர்கள் கரம் நீட்டுகின்றனர். கூவி அழைக்கின்றனர். தோள் கொடுக்கச் சொல்கின்றனர். ஜனசமுத்திரத்திலிருந்து ஆழிப்பேரலையென எழுந்து ஆர்ப்பரிக்கின்றனர். புரட்சி . மாற்றம். சமத்துவம். 
இன்னொரு பக்கத்தில் சாமானியன் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் கதிர்வீச்சுக்கு ஆளாகிறான். சைபீரியப் பனிவெளியில் வதைமுகாம்களின் வரிசையில் நிற்கிறான். விஷ வாயுக் கூண்டின் உள்ளே செல்கின்றனர். பெண்களும் குழந்தைகளும். அவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் செய்த பாவம் என்ன? சாமானியனின் துயர் என்னை அமைதியிழக்கச் செய்தது. என் மனதில் கேள்விகள் மட்டுமே இருந்தன. பதில்களைத் தேடிக் கொண்டிருந்தேன். பதில்கள் இல்லாத கேள்விகள் என்றே நினைத்தேன். அப்போது எனது பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் ரமணரின் நூல் ஒன்றைத் தந்தார். வாசித்துப் பார்த்தேன். என்னால் உள்வாங்க முடியவில்லை. சில நாட்கள் வைத்திருந்து விட்டு திருப்பித் தந்து விட்டேன். என் கேள்விகளுக்கு லூயி ஃபிஷர் பதில் தந்தார். அவர் சொற்களின் வழியே அவர் பார்வையின் வழியே நான் காந்தியை அறிந்தேன். எனது வரலாற்று நாயகன் அவனே. பிறர் துயருறுவதைக் கண்டு கண்ணீர் விடுபவன். மனிதர்களை முடிவின்றி மன்னிப்பவன். 

ரமணரின் ‘’நான் யார்’’ என்ற சிறு நூலை பின்னர் வாசித்தேன். அதன் பின்னர் மேலும் சில நூல்கள். சில தினங்களுக்கு முன்னால், திருவருண்மொழி என்ற நூல் என் கைக்கு வந்தது. ரமண மகரிஷியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும். எனக்கு கேள்வி - பதில் வடிவம் மிகவும் பிடிக்கும். ‘’யட்சப் பிரசன்னம்’’ கேள்வி பதில் வடிவம் கொண்டது. பகவத்கீதையே கேள்வி பதில்தான். 

மனிதர்கள் சமூக அடையாளத்தால் சூழப்பட்டிருக்கின்றனர். அது எல்லைக்குட்பட்டது. அவர்கள் தங்கள் அடையாளங்களையே தான் எனக் கருதுகின்றனர். அந்த எல்லையில்லாமல் இந்த வாழ்வை அறிய முடியும். உணர முடியும். அது மேலான இன்னொரு சாத்தியம். அது கோடானுகோடியில் ஒருவருக்கே வாய்க்கிறது. அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களும் அதற்கு அவர் அளித்த விடைகளுமே திருவருண்மொழி. 

கனவுகளற்ற உறக்கத்தில் ‘’நான்’’ இருக்கிறது. அப்போது அது இருப்பாக மட்டுமே இருக்கிறது. அதற்கு எந்த அடையாளமும் இல்லை. விழித்திருக்கையிலும் அந்த உணர்வுடன் இருக்க முடியும். அதுவே இயல்பான நிலை. நம் பேத புத்தி என்னும் அறியாமையால் நாம் அவ்வாய்ப்பை இழக்கிறோம். எந்த கேள்விக்கும் ரமணரிடம் பதில் இருக்கிறது. எல்லா கேள்விக்கும் ரமணரிடம் பதில் இருக்கிறது. ரமணர் தன்னிடம் வினவப்படும் வினாக்களின் மையத்தைத் தொட்டு பதிலளிக்கிறார். 

நமக்குத் தீவிரம் இருக்குமென்றால், நாம் தீவிரமாக விசாரிப்போம் என்றால் நான் யார் என்பது அறியக்கூடியதே. அந்த அறிதல் இந்த கணத்திலேயே நிகழலாம் அல்லது இன்னும் பல பிறவிகளுக்குப் பின்னால் நிகழலாம். அது அவரவர் பிராரப்தம் பொறுத்தது.

ரமணரின் சொற்கள் எனக்கு ஆறுதல் அளித்தன.