Thursday 1 August 2019

கண் கலங்கிய அனுபவம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய சாலைகளில் ‘’குட்டி யானை’’ என அழைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனங்கள் ஓடத் துவங்கின. நகருக்குள் நூறு ரூபாய் மட்டுமே வாடகை. தள்ளுவண்டி இழுப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு இழுக்கும் பாரத்தை எந்த அல்லலும் இல்லாமல் நொடிப் பொழுதில் இழுத்து விடும். தேவை அதிகரிக்க அதிகரிக்க வண்டியின் எண்ணிக்கையும் அதிகமானது. கம்யூனிஸ்டு சங்கங்கள் டாடா ஏஸ் இயக்கத்தில் தலையிட்டார்கள். யூனியன்கள் உருவாயின. அவர்கள் ஸ்டேண்டு நகரில் எங்கெங்கு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தார்கள். திடீரென நகருக்குள் லோடு எடுத்துக் கொண்டு செல்ல ரூ.150 என நிர்ணயித்தார்கள். கடைத்தெருவின் சந்தடிகளுக்கு அப்பால் கண்ணுக்குப் படாத இடம் ஒன்றில் ஒரு டாடா ஏஸ் நின்று கொண்டிருந்தது. நான் பத்து பிவிசி பைப் ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு ஆர்வமான துடிப்பான பையன் இருந்தான். வண்டி வருமா என்றேன். போகலாம் அண்ணன் என்றான். டிரைவரை எங்கிருந்தோ பிடித்து உடனே அழைத்து வந்தான். வாடகை எவ்வளவு என்றேன். நூறு ரூபாய் என்றான். ஆச்சர்யமாக இருந்தது. கடைக்கு அழைத்துச் சென்று பைப் ஏற்றினேன். சைட்டுக்கு சென்று கொண்டிருந்தோம்.
அந்த பையன் உற்சாகமாக பேசிக் கொண்டே வந்தான். 

‘’அண்ணன்! வண்டி ஓனர் ஃபாரின்ல இருக்கார். அவரோட மாமனார்தான் வண்டியை பார்த்துக்கிறார். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊர். ஸ்கூல் ஃபிரண்ட்ஸ். எங்க பொறுப்புல வண்டியைக் கொடுத்திருக்கார். நாங்க தினமும் இவ்வளவு ரூபாய் கொடுக்கணும்னு பேச்சு. ஒருநாள் கூட தவறினது இல்லண்ணன்.’’

‘’சவாரி கிடைக்குதா’’

‘’இப்ப நீங்க தேடி வரலையான்னன். அது போல தினம் பத்து பேரு வராங்கன்னன். நாங்க நூறு ரூபாய்தான்ன வாங்குவோம். எங்ககிட்ட ஒரு தடவை வந்தவங்க திரும்ப எங்கள்ட்ட தான்னண் வருவாங்க’’

’’ஏன் கண்ணுக்குப் படாம வண்டியை தள்ளி நிறுத்தியிருக்கீங்க. மெயின் ரோட்ல நின்னாத் தானே வண்டி ஒன்னு இங்க இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்.’’

‘’மெயின் ரோட்ல வண்டியை நிறுத்தினா ஸ்டேண்டு காரங்க சண்டை போடுவாங்கன்ன’’

நான் மேலே எதுவும் கேட்கவில்லை. நம்பிக்கையான பையன்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

’’ஓனர் ரெண்டு மாசம் முன்னாடி வண்டி எப்படி ஓடுதுன்னு என்கிட்ட கேட்டார்.நான் நல்லா போகுது தினமும் பணம் கொடுத்திடுறோம்னு சொன்னேன்’’

‘’ஓனர் மாமனார் வண்டியால நஷ்டம்-னு சொல்லியிருக்கார்’’

‘’நாமதான் பணம் கொடுத்திடறமே அப்றம் எப்டி நஷ்டம் வரும்?’’

கிளீனர் சிறுவன் அப்பாவியாக டிரைவரிடம் கேட்டான். டிரைவர் பதில் சொல்லவில்லை.  நான் என்ன நடந்திருக்கும் என யூகித்துக் கொண்டேன்.

பையன்கள் கொடுக்கும் பணத்தை மாமனார் தன் வசம் வைத்துக் கொள்கிறார். வெளிநாட்டில் இருக்கும் மருமகனிடம் வண்டிக்கு மெயிண்டனன்ஸ் செலவு என்று சொல்லி மாதாமாதம் பணம் வாங்குகிறார். 

ஓனர் நல்லவர்டா என்றான் டிரைவர். பின் சிறு இடைவெளி விட்டு ஓனர் வண்டியை வித்துறச் சொல்லிட்டாராம்டா என்றான். கிளீனரால் நம்ப முடியவில்லை.

வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களில் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் ஒன்று வண்டியை அடையாளம் கண்டு நிறுத்தியது.மோட்டார்சைக்கிளில் வந்தவர் அந்தரத்தில் பேச்சைத் துவக்கினார்.

‘’உங்களப் பாக்கத்தான் வரோம். இறங்கிக்க. இவங்கதான் வண்டியை வாங்க வந்தவங்க’’

நாங்கள் மூவரும் இறங்கிக் கொண்டோம். கிளீனர் பையன் அதிர்ச்சியுடன் இருந்தான். அவர்கள் வண்டியை இயக்கிப் பார்தார்கள். சரி என்றார்கள். 

கிளீனர் பையன் முன்னால் வந்து ‘’சார்! வண்டி சவாரி போய்க்கிட்டு இருக்கு. சைட் பக்கம் தான். நாங்க பைப்ப இறக்கிட்டு சாரையும் சைட்ல விட்டுட்டு வந்திடறோம் என்றான்.

அவர்கள் அவசரத்தில் இருந்தனர். மோட்டார்சைக்கிளில் வந்த புதிய ஓனரின் டிரைவர் வண்டியை எடுத்தார். பழைய டிரைவரும் கிளீனரும் வண்டியின் பின்னால் ஏறிக் கொண்டார்கள். நான் முன்னால் அமர்ந்து கொண்டேன். 

சைட்டில் பைப்பை இறக்கி விட்டு வண்டி நீங்கிச் சென்றது. 

நான் டாடா ஏஸ் வாடகையை டிரைவரிடம் கொடுத்தேன். பைக்கில் கொண்டு பஸ் ஸ்டாண்டில் விடட்டுமா என்று கேட்டேன். கிளீனரும் டிரைவரும் கண் கலங்கி விட்டனர். நானும் கண் கலங்கி விட்டேன். 

’’இப்படியே கொஞ்ச தூரம் போனா மெயின் ரோடு வரும் சார். டவுன் பஸ் ஏதாவது இருக்கும். நாங்க புடிச்சு போயிடுவோம் சார். உங்களுக்கு சைட்ல நிறைய வேலை இருக்கும் . அத பாருங்க’’ டிரைவரும் கிளீனரும் நடக்கத் தொடங்கினர்.