Saturday 28 September 2019

நடையின் ஒலி

தமிழ்நாட்டில் பாரம்பர்யமான மரபான பழக்கங்களின் மீதான அறிமுகமோ ஆர்வமோ இளைய தலைமுறையிடம் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லிட முடியும். சமூக வாழ்க்கை முறைமைகளால் ஆனது. முறைமைகளால் மட்டுமே ஆனது. ஆதலால் ஏதேனும் ஒரு நியதிக்கு உட்பட்டே சமூக வாழ்க்கை அமைய முடியும். கம்யூனிஸ்டு இயக்கங்கள் தமிழகத்தில் வேரூன்றும் முன், பட்டியல் சாதியினர் பறை இசைக்கருவியின் மூலம் மகாபாரதம் கதை சொல்லும் நிகழ்வு எல்லா ஊரிலும் வருடாவருடம் நடந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகள் சமய இலக்கியங்கள் மேல் மெல்ல விலக்கத்தை உருவாக்கி வந்தனர். பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்திருந்த அந்த வழக்கம் நின்று போனது. கம்யூனிஸ்டுகள் பட்டியல் சாதியினரின் இசை உணர்வையும் கலை உணர்வையும் தங்கள் அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்தலாயினர். இன்றும் கம்யூனிஸ்டுகளின் பரப்புரைப் பாடல்கள் தெம்மாங்கை அடிப்படையாய்க் கொண்டவை. நான் நின்று கேட்பதுண்டு. இந்தியாவில் ஹிந்து மதத்திற்கென சமயத் தலைமை என ஏதும் யாரும் கிடையாது. நேரடியான மதக் கட்டாயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் மதத்திற்கு எதிரான போக்கு அரசியல் இயக்கங்களிடம் இருந்தது. அவர்கள் மதத்தை அஞ்சினர். 

தமிழகத்தின் நடுத்தர வர்க்க குழந்தைகளுக்கு சமய வழிபாடு குறித்த அடிப்படை விபரங்கள் ஏதும் தெரியாது. கோயிலில் ஏன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது? கோயிலில் ஏன் விளக்கு ஏற்றுகிறார்கள்? வழிபாடு வாழ்வுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக் கூடியதா? சைவத்துக்கும் சாக்தத்துக்கும் வேறுபாடு என்ன? குங்குமம் எவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது? இவற்றை இன்றைய இளைய தலைமுறையிடம் கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்களா என்பது தெரியவில்லை. ஆனால், இதைப் போன்ற அடிப்படையான விஷயங்கள் அறிமுகப்படுத்தப் பட்டாலே, அவர்கள் சமயம் மீதும் சமயச் சடங்குகள் மீதும் ஆர்வம் கொண்டு அடுத்தடுத்து அறிவார்கள். அதன் மீதான விமர்சனங்களுடன் முன்னகர்வார்கள்.

இன்றும் உலகில் மதத்தின் பெயரால் போர் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகள் தாங்கள் விரும்பும் தங்களுக்கு உவப்பான வழிமுறைகளில் அடுத்த பிரிவை அழிக்காமல் தங்கள் பழக்கங்களையும் வழிபாட்டையும் மேற்கொண்ட நாடு. அவ்விதத்தில் நாம் உலகுக்கு வழிகாட்ட முடியும். அவ்வழிமுறையை உலகம் நம்மிடமிருந்தே அறிய முடியும். அதற்கு அத்தன்மை இந்தியாவில் நீடித்திருக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த வீட்டில் ஒரு பெண் குழந்தை. அக்குழந்தை வரும் போதும் போகும் போதும் மெல்ல ஒரு அமைதி பரவுவதாக உணர்ந்தேன். அந்த அமைதியைப் பின் தொடர்ந்த போது அதன் மையமாக ஓர் இனிய ஒலி இருப்பதைக் கண்டடைந்தேன். கொலுசின் ஒலி. மிகக் குறைந்த மணிகள் கொண்ட மிக மெல்லிய ஒலியை எழுப்பும் கொலுசு. நம் மன ஆழங்களுக்குள் ஊடுறுவி ஒளியூட்டக் கூடியது. அக்குழந்தையின் நடையும் பாவனைகளும் செயல்பாடுகளும் அந்த ஒலியின் இசைத்தன்மையை ஒட்டியதாக இருப்பதைக் கவனித்தேன். 

நம் முன்னோர் மீது நம் எல்லா இயலாமைகளுக்கும் அவர்களே காரணம் என பழி சுமத்துகிறோம். நம் முன்னோரைப் போல வாழ்வின் மீதும் வாழ்வின் நுட்பங்கள் மீதும் தீராக்காதலுடன் நாம் இருக்கிறோமா?