நமது அன்றாடச் செயல்பாடுகளில் பல பழக்கங்கள் நம் சூழலைப் பொறுத்து நம்மிடம் வந்து சேர்கின்றன. அவற்றில் நமது ஆற்றலை மெல்ல குறைக்கும் பல விஷயங்களை அவை எவை என்று சோதித்தறிந்து அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த விரதத்தைப் பயன்படுத்தி நான் சிலவற்றை களைய உள்ளேன். அதில் முக்கியமானது மதிய உறக்கம். நம் பிரதேசத்தில் காலைப் பொழுது என்பது 7 மணிக்கே பிரகாசமான வெளிச்சத்துடன் துவங்கக் கூடியது. இங்கே பனிமூட்டம் என்பது பெரிதாகக் கிடையாது. வட இந்தியாவில் பனிமூட்டம் குறிப்பிட்ட சில மாதங்களில் இருக்கும். அப்போது அங்கே எதிரில் இருப்பவர்கள் கண்ணுக்குத் தெரியவே காலை 10 மணிக்கு மேல் ஆகும். நமக்கு அவ்வாறான சூழல் ஏதும் இல்லை.
கட்டுமானத் தொழில் தொடர்பான எனது பணிகளை நான் காலை 7 மணியிலிருந்தே துவக்கி விடுவேன். ஆனால் நகரம் அப்போது இயங்கத் துவங்கியிருக்காது. இங்கே எல்லாரும் பணிக்கு வருவதையும் பணி துவங்குவதையும் காலை 10 மணி என வைத்திருக்கின்றனர். பெரும்பாலானோர் எழுவதே 7 மணிக்கு. பள்ளிக்கோ கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ புறப்பட 9 மணி ஆகி விடும்.
ஆந்திராவில் திரு.என்.டி.ராமராவ் முதலமைச்சராக இருந்த போது அம்மாநிலத்தில் அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை என்பதை காலை 7 மணியிலிருந்து 2 மணி வரை என மாற்றியமைத்தார். சில மாதங்கள் நீடித்த அந்நிலை பின்னர் வழக்கம் போல் ஆனது. மக்கள் மாற்றத்துக்கு ஒத்துழைக்கவில்லை. அது ஒரு நல்ல நடைமுறை.
நான் காலையிலிருந்து பணிகளைச் செய்பவன் என்ற முறையில் என்னிடம் வந்து சேர்ந்த ஒரு பழக்கம் மதியம் அரைமணி நேரமாவது உறங்குவது. நான் எப்போதுமே ஆழமாக உறங்கக் கூடியவன். படுத்த பின், ஓரிரு நிமிடங்களில் ஆழமான தூக்கத்துக்குச் சென்று விடுவேன். மதியம் சிறிது நேரம் ஆழமாக உறங்குவது உடல் எடையை அதிகரிக்கும். நான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவன். இந்த விரதத்துக்குப் பின், மதிய உறக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடலாம் என இருக்கிறேன்.