Sunday 20 October 2019

ஓர் உரையாடல்

நேற்று மதுரை சென்றிருந்தேன். அதிகாலை 4 மணிக்கு ரயில். அந்த்யோதயா. முற்றிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள். இரண்டாயிரம் பயணிகள் பயணிக்க முடியும். அதிவேக விரைவு வண்டி. எக்ஸ்பிரஸ் கட்டணத்தில். காலையிலேயே கிளம்பிச் சென்றேன். ரயில் வரும் நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்பாக ரயில் நிலைய வாசலில் இருந்தேன். டிக்கெட் எடுத்துக் கொண்டு உரிய நடைமேடைக்குள் செல்வதற்குள் ரயிலைத் தவற விட்டு விடுவேனோ என்று தோன்றியது. மதுரை செல்லும் இன்னொரு ரயில் அடுத்த அரைமணி நேரத்தில் இருந்தது.  நான் எப்போதும் ரயில் நேரத்துக்கு முப்பது நிமிடம் முன்பு நிலையத்துக்கு வந்து விடுவேன். நேற்று தாமதம். ரயிலும் பத்து நிமிடம் தாமதம் என்பதால் அல்லலின்றி ரயிலைப் பிடித்தேன். அகல ரயில்பாதை வந்த பின் பயண நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது. திருச்சி செல்ல முன்பு மூன்று மணி நேரம் ஆகும். இப்போது இரண்டே கால் மணி நேரத்தில் திருச்சி செல்ல முடிகிறது. சமயத்தில் இரண்டு மணி நேரத்தில் கூட.

கும்பகோணத்தில் திருநெல்வேலி செல்லும் ஒரு குடும்பம் ரயிலேறியது. அக்குடும்பத்தில் இரு குழந்தைகள். பெண் குழந்தைக்கு பத்து வயது. சிறுவனுக்கு எட்டு வயது. குடும்பத்தலைவர் மாநில அரசு ஊழியர். அவர் மனைவி பள்ளி ஆசிரியை. என் இருக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்தனர். வண்டி சுவாமிமலையைத் தாண்டி சென்று கொண்டிருந்த போது ரயில்வே ஒப்பந்தப் பணியாளர்கள் பெட்டியில் ஏதேனும் குப்பை இருக்கிறதா என சோதித்து தூய்மை செய்ய சிறு குப்பைக் கூடையுடன் வந்திருந்தனர். 

‘’இந்த அஞ்சு வருஷத்துல ரயில் பெட்டியெல்லாம் முன்ன இருந்ததுக்கு இப்ப சுத்தமாதான் சார் இருக்கு’’ .நண்பர் உரையாடலைத் தொடக்கினார்.

‘’நீங்க அடிக்கடி ரயில்ல போறீங்களோ’’ அவர் அனுபவத்தை இன்னும் விரிவாகக் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தேன்.

‘’ஆமாம் சார்! பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவை ஊருக்கு போய்ட்டு வருவன். டிரெயின்ல தான் சார் போறது வறது’’

‘’அப்படியா. ஊர்ல யார் இருக்கா.’’

‘’அப்பா அம்மா அங்கதான் இருக்காங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. அதில விவசாயம் உண்டு. ரயில்வே ஸ்டேஷன் கூட சுத்தமாத்தான் இருக்கு. எப்போதும் ஒர்க்கர்ஸ் கிளீன் செஞ்சுகிட்டே இருக்காங்க. சுத்தமா இருக்கற இடத்துல இருக்கும் போது நம்ம மனசு நிம்மதியா ஃபீல் பண்ணுது சார். வாழ்க்கை மேலயே ஒரு நம்பிக்கை வருது.’’

‘’பப்ளிக் ஒத்துழைச்சா இன்னும் நல்லா இருக்கும்."

"ஏன் சார் நம்ம நாட்ல பப்ளிக் பொது இடங்களை சுத்தமா வச்சுக்கணும்னு நினைக்க மாட்டங்கறாங்க.’’

‘’அதுக்கு பல காரணங்கள். நான் என்ன நினைக்கறன்னா நம்ம தமிழ் சமூகத்தோட எல்லா சிக்கலும் அடிப்படையா ஒரு விஷயத்துல இருந்து துவங்குது. பத்தொன்பதாம் நூற்றாண்டுல தமிழ்நாட்ட ஒரு கொடுமையான பஞ்சம் தாக்குச்சு. அந்த பஞ்சத்துல தமிழ்நாட்டு மக்கள் ஐம்பது லட்சம் பேர் செத்து போயிருக்காங்க. பஞ்சம் வந்தா நிகழற சாவு அதிகபட்சம் ஒரு மாசத்துல நடக்கும். ஒரு சில மாசத்துல இத்தனை பேர் சாகறதுங்கறது எந்த சமூகத்தையும் ஆழமா பாதிச்சுடும்.’’

‘’நீங்க சொல்ற இந்த விஷயத்தை இப்ப தான் சார் முதல்ல கேள்விப்படறன்’’

‘’இதப் பத்தி பல புக்ஸ் எழுதப்பட்டிருக்கு. பிரிட்டிஷ் ரெகார்ட்ஸ் துல்லியமா பஞ்சத்துல செத்துப் போனவங்க குறித்து சொல்லியிருக்கு.’’

ரயில் தஞ்சாவூர் வந்து சேர்ந்திருந்தது. வானம் மழைமேகங்களுடன்  மெல்ல விடிந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே விடியலின் வெளிறிய சிவப்பு. யாரும் ஏறவில்லை. சிலர் இறங்கிச் சென்றனர்.

‘’யோசிச்சுப் பாருங்க. 1915-20ல பாரதி, ‘முப்பது கோடி முகமுடையாள்னு’ இந்தியாவோட மக்கள்தொகையை முப்பது கோடின்னு சொல்றார். அப்ப தமிழ்நாட்டு மக்கள் தொகை ஒரு கோடி இல்லன்னா ஒன்னே கால் கோடியா இருந்துருக்கும். அதில ஐம்பது லட்சம் பேர் செத்துப் போறதுன்னா அதை கற்பனை பண்ணிப் பாருங்க.’’

அவரால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை அவரது முகபாவத்தில் தெரிந்தது.

’’தமிழ்நாட்டோட பாதி ஊர்ல ஒருத்தர் கூட உயிரோட இல்லாம எல்லாருமே எல்லாருமே செத்து போய் ஊர் முழுக்க பிணமா கிடந்தா எப்படியிருக்கும். ஐம்பது லட்சம் பேர் சாகறதுன்ணா அதான் அர்த்தம்’’

அவர் சற்றே பாதிக்கப்பட்டார். அவரது மனைவியும் தீவிரமான அதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த பெண் குழந்தை ஏதோ சரியில்லை என உணர்ந்தது. அந்த சிறுவனின் உலகம் ரயிலுக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த மரங்களில் இருந்தது.

ரயில் பூதலூரைத் தாண்டியதும், ‘’சார் அதுக்கும் நீங்க சொல்ற விஷயத்துக்கும் என்ன சம்மந்தம்?’’ என்றார்.

‘’அதாவது, இப்படி ஒரு கொடுமையான பஞ்சம் வந்த பிற்பாடு நம்ம தமிழ் பியூபிள் வாழ்க்கையில எப்ப வேணாலும் ஒரு பஞ்சம் வந்து குடும்பத்துல எல்லாரும் செத்து போயிடுவோம்னு பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவங்க எது மேலயும் நம்பிக்கை இல்லாம ஆய்ட்டாங்க. பக்கத்துல இருக்கற மனுஷனை - அவன் பக்கத்து வீட்டுக்காரனா இருந்தாலும், தெரிஞ்சவனா இருந்தாலும், சொந்தக்காரனா இருந்தாலும், ஊர்க்காரனா இருந்தாலும்  -  நம்பாம போய்ட்டாங்க. கூட இருக்கறவங்க மேல பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் இல்லாததால இவங்களால ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் உருவாக்கிக் கொள்ள முடியலை. அதனால தனித்தனியா ஆயிட்டாங்க. தமிழ் சமூகத்துக்கு இந்த சிக்கல் ரெண்டு நூற்றாண்டா இருக்கு. அப்பப்ப மெல்லிசா இருக்கு. பல சமயம் அடர்த்தியா இருக்கு. தன்னோட குடும்பம்ங்கறத தாண்டி அவங்களால வேற எதையும் யோசிக்க முடியலை. ஊழல் பண்ற அரசியல்வாதி குடும்பத்துக்காக செய்யறோம்னு நியாயம் கற்பிச்சுக்கிறான். ஊழல் பண்ற அதிகாரிக்கும் குடும்பத்துக்காக செய்றோம்னு நினைக்கறதால தப்பு செய்றோம்ங்கற குற்ற உணர்ச்சி இல்லை. எல்லா தப்பும் தீமையும் பஞ்சம்ங்கற பயத்துல இருந்து தான் ஆரம்பிக்குது. பாரதி பாட்டு ஒண்ணு கேட்டிருப்பீங்க. ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் பஞ்சமோ பஞ்சம் என்று தினம் பரிதவிப்பார் நெஞ்சம் துடிதுடிப்பார்னு’’

பள்ளி ஆசிரியை அந்த பாரதியார் பாடலைக் கேட்டிருந்தார். ‘’இந்த பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு காரணம் இருக்குன்னு நீங்க சொல்லி தான் தெரியுது. இந்த விஷயம்லாம் ஏன் சார் நம்ம பள்ளிக்கூட சிலபஸ்ல இல்ல’’

‘’தமிழ்நாட்டுல திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவங்க தமிழ்நாட்டுல பஞ்சம் வந்தப்ப ஐம்பது லட்சம் பேர் செத்ததப்ப அதை வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த  பிரிட்டிஷ்காரங்களை பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரிச்சவங்க. காந்தியோட காங்கிரஸை எதிர்த்து அரசியல் செஞ்சவங்க. பிரிட்டிஷ்காரனுக்கு மட்டுமே நம்மை ஆள்ற தகுதி இருக்குன்னு சொன்னவங்க. பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு தீர்மானம்  போட்டவங்க. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னாலயும் ’அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ன்னு சொன்னவங்க. இவங்களா சமூகம் மாறணும்னு நினைக்கப் போறாங்க. இவங்களா நம்ம குழந்தைகளுக்கு உண்மையான வரலாறு தெரியணும்னு நினைக்கப் போறாங்க.’’

கனத்த மௌனம் நிலவியது. உண்மை சங்கடங்களை உண்டாக்கும். அது தவிர்க்க  இயலாதது.

’’சார்! 1967ல காங்கிரஸ் அரசாங்கம் தமிழ்நாட்டு மக்கள பஞ்சத்துல சாக விட்டுறுவாங்க; நாங்க ஆட்சிக்கு வந்தா ரூபாய்க்கு மூணு படி அரிசின்னு சொல்லி ஓட்டு கேட்டுதான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது.’’ அரசு ஊழியர் துயரத்துடன் சொன்னார்.

அவர் வரலாற்றின் ஒரு கீற்றைப் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டார் என்று நினைத்துக் கொண்டேன்.

‘’நம்ம நாடு மாறும்ணு நீங்க நம்பறீங்கலா சார்?’’

‘’நிச்சயமா மாறும். ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பின்னால முப்பது வருஷத்துல உலகின் பெரிய பொருளாதாரமா மாறுச்சு. இரண்டு உலகப் போர்ல தோத்து நாடே ரெண்டா போன ஜெர்மனி ஒண்ணுபட்டு உலகத்தோட உற்பத்தில மேஜர் பங்களிப்பைக் கொடுக்கறவங்களா மாறினாங்க. இஸ்ரேலை சுத்தி அவங்களோட பகைநாடுகள். அதையும் தாண்டி இஸ்ரேல் எல்லா துறையிலயும் பிரமிக்கற அளவு முன்னேறியிருக்காங்க. நிச்சயமா நம்ம நாடும் பெருசா சாதிக்கும்.’’

குழந்தைகள் கல்வி சிறப்பாக இருக்க என்னிடம் ஆலோசனை கேட்டார்கள்.

‘’அறிவு மேல நம்பிக்கைய உருவாக்குங்க. அறிவுதான் அழிக்க முடியாத செல்வம்னு சொல்லித் தாங்க. அவங்களோட தொடர்ச்சியா பேசுங்க. அவங்க சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுங்க. அவங்களுக்கு சிந்திக்க சொல்லிக் கொடுங்க. மகாத்மா காந்தி தன் கூட இருந்த தன்னோட கொழந்தைகளை இப்படித்தான் வளர்த்தாரு. ’’